உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்!

*எஸ்.மகேஸ்வரன், திருமங்கலம்: எதையும் சாதிக்க தேவை - பணமா, மனமா?மனம்! மனமிருந்தால் மார்க்கம் உண்டு. சாதனை செய்ய திடமாக தீர்மானம் செய்து கொண்ட பின், பணத்தை திரட்டுவது மிக எளிது! சாதனை புரிந்த பலரது வாழ்க்கை சரித்திரம் உணர்த்தும் உண்மை இது!***** தி.கார்த்திக், பசுமலை: சுற்றுலா செல்ல ஆசை எனக்கு... ஆனால், அது வீண் செலவு என்று பிறர் சொல்கின்றனர். என்ன செய்ய?வீண் செலவு அல்ல... குறுகிய மனப்பான்மை. குறுகிய அறிவை விசாலமாக்கும் தன்மை கொண்டது சுற்றுலா... சென்னையும், கோவையும் தான் உலகம் என எண்ணிக் கொண்டிருக்கும் பலரும், சுற்றுலாவாக புதிய இடங்களுக்கு செல்லும் போது தான், வெளியுலகம் தெரிய வரும். இதனால் ஏற்படும் நன்மைகளை அனுபவமான பின் உணர்வீர்கள்!****ஞா.ராமசாமி, நங்கநல்லூர்: உலகத்திலேயே இன்று பெரும் பணக்காரர் யார்?'இருப்பதுவே போதும்!' என நினைப்பவர்கள்.**** பி.ராஜா, ஊரப்பாக்கம்: கணவன் - மனைவிக்கிடையே சண்டை, சச்சரவுகள் ஏற்பட்டால், அது விவாகரத்து, தற்கொலை முடிவு வரை சென்று விடுகிறதே... சுமூகமாகத் தீர்த்துக் கொள்வது எப்படி?விட்டுக் கொடுக்கும் குணம் இன்மை தான் இதற்கு காரணம். தவறு யார் மீது இருந்தாலும், கவுரவம் பார்க்காமல், ஒருவரிடம் ஒருவர், 'சாரி' கேட்டுக் கொள்வதால் தவறு எதுவும் இல்லை. இந்த நேரத்தில் கேட்கப்படும், 'சாரி'க்கு, 'கிக்' அதிகம் உண்டு. பிணைப்பை இறுக வைக்கும், 'சாரி' அது!***** கா.அன்னக்கொடி, கோட்டூர்: எதற்கெடுத்தாலும், வாதம், பிரதிவாதம் செய்யும், 'டீன்-ஏஜ்' பருவத்தினரை சமாளிப்பது எப்படி?இந்தப் பருவம், அனைத்தையும் அறிய துடிக்கும் பருவம்! அதன் பொருட்டே பிரதிவாதங்களில் இறங்குகின்றனர். இது, இயற்கைக்கு முரணானது அல்ல! அடக்குமுறையை இந்த வயதில் அவர்களிடம் பிரயோகிப்பது எதிர்வினையையே தரும். உள்ளவற்றை மறைக்காமலும், தீயவற்றை அப்பட்டமாகவும் கூறிட வேண்டும். அதே நேரம், உங்கள் கருத்துக்கள், அவர்கள் மீது திணிக்கப்படுகிறது என்பது அவர்கள் உணராவண்ணம் செயல்பட வேண்டும்!****ஜி.நடராஜன், ரத்தினபுரி: மனிதனுக்கு பணம் முக்கியமா? குணம் முக்கியமா?முதலாவது வந்த உடன், இரண்டாவது சென்று விடக் கூடாது என்பது முக்கியம்!****ஆர்.ஸ்ரீதர், பெசன்ட் நகர்: தினமும் 10 மணி நேரமாவது தூங்க வேண்டியுள்ளது எனக்கு... அதற்கு முன் எழுந்தால், உடல் வலி எடுக்கிறது. என் வயதோ, 22 தான்... இவ்வளவு நேரம் தூங்குவது கெடுதலா?இருப்பத்திரண்டு வயது வாலிபனுக்கு, ஐந்து மணி நேர தூக்கமே போதும். மறைந்த பிரதமர் நேரு, தினமும் ஐந்து மணி நேரத்திற்கு மேல் தூங்கியது இல்லை. எட்டு மணி நேரத்திற்கு மேல் தூங்குபவர்கள் உருப்படுவது இல்லை!*****பி.சம்பத், எண்ணூர்: அரசியலில் இருக்கும் பெரும் புள்ளிகள் பலருக்கு, 'ஜெனரல் நாலேட்ஜ்' கொஞ்சம் கூட இல்லையே...அதனால் அவர்களுக்கு என்ன இழப்பு? காசு பண்ணும், 'நாலேட்ஜ்' இருக்கிறதே அவர்களிடம்! இவர்களிடம் சிக்கி, இழந்து கொண்டிருப்பதெல்லாம் நாம் தான்!***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !