உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்!

*வி.சாமுவேல் ராஜன், சென்னை: பணம் கடன் கொடுத்தால்தான் திரும்பி வராது. புத்தகங்கள் கடன் கொடுத்தாலும், திரும்பி வருவது இல்லையே...*கடன் கொடுக்கக் கூடாதது மூன்று! பணம் - புத்தகம் - 'சி.டி!' தட்ட முடியாது எனும் பட்சத்தில், 'அன்பளிப்பாக' கொடுத்து விடுங்கள். திரும்ப எதிர்பார்த்து, மனக்கசப்பையும், பிரச்னையையும் வளர்த்துக் கொள்ளாதீர்கள்!**** ஆர்.விமலா, கோவை: தங்களுடைய சொந்தப் பிரச்னைகளுக்கு அறிவுரை கேட்டு வரும் கடிதங்களுக்கு நீர் முக்கியத்துவம் கொடுப்பது ஏன்?*பிரச்னையின் முக்கியத்துவத்தை உணர்ந்துதான் அக்கேள்விகளை தேர்வு செய்கிறேன். காரணம், இதே பிரச்னை பல வாசகர்களுக்கும் இருக்கலாம். அவர்களுக்கும் பயன் தரட்டுமே என்ற நோக்கம்தான்!**** துரை.ராகவன், சென்னை: கடன் இல்லாமல் வாழ்க்கை நடத்த கணவனுக்கு பொறுப்பு வேண்டுமா? மனைவிக்கும் தேவையா?*சம்பாத்தியம் முழுவதையும் மனைவியிடம் கொடுத்து, செலவு பொறுப்பையும் அவ்விடமே கொடுக்கும் ஆசாமிகளின் மனைவியருக்கு கண்டிப்பாக அதிக பொறுப்பு தேவை. அவ்விடம் பொறுப்பு சற்று கம்மி என்றால், சம்பாதிப்பவரே லகானை பிடித்துக் கொள்வது உத்தமம்!**** கே.ஏஞ்சலின் கரோலினா, சென்னை: பெருகி வரும், 'கம்ப்யூட்டர் ஆதிக்கம்' குறித்து என்ன சொல்கிறீர்கள்?*முன்னேற்ற பாதையில் நாட்டை அழைத்துச் செல்ல மற்றொரு படிக்கல்.**** எஸ்.பக்கிரிசாமி, திருவாரூர்: ஆண்களிடம், பெண்களுக்கு ஒரு பயபக்தி இல்லாமல் போய்விட்டதே...* அப்போ, பெண்களுக்கு சம உரிமை வேகமா கிடைச்சிக்கிட்டு இருக்குன்னு சொல்லுங்க...**** அ.பா.சாய்ரிஷி, பசுமலை: 'மூஞ்சப் பாரு... விளக்குமாத்தாலே ரெண்டு சாத்து சாத்த...' என்று, ஒரு பெண், நான் தனியாக தெருவில் செல்லும் போது திட்டுகிறார். இந்த, 'வர்ணனை' வார்த்தைகளை எப்படி எடுத்துக் கொள்ள...*உம் மீது அந்த அம்மணிக்கு ஒரு, 'பிடிப்பு' ஏற்பட்டு போச்சுன்னு நினைக்கிறேன். 'மோதலில் ஆரம்பித்து, காதலில் முடியும்...' என்பரே... (விளக்குமாத்து சாத்து கிடைத்தால் நான் பொறுப்பல்ல...)**** பி.எஸ்.பாலு, திருப்பூர்: சில சமயங்களில் நம்மை அறியாமலேயே மற்றவர் மனதை வார்த்தைகளால் புண்படுத்தி விடுகிறோம். இதற்கு என்ன தண்டனை?*புண்படுத்திவிட்டதை உணர்ந்து வருந்துவதே தண்டனைதான். இப்படிப்பட்ட மனம் இருக்கும்போது, புண்பட்டவரிடம் நேரடியாக மன்னிப்பு கோருவது சிறந்த மருந்தாக அமையும்!**** மா.ஜெயச்சந்திரன், சென்னை: அறுவைகளிடமிருந்து தப்பிப்பது எப்படி?*தவிர்க்கக் கூடிய அறுவைகளா? தவிர்க்க முடியாத அறுவைகளா என்பதைக் கூறவில்லையே... இரண்டுக்கும் வெவ்வேறு வழிகள் உள்ளன. ***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !