அந்துமணி பதில்கள்
ம.கருப்பசாமி, திருப்பூர்: நீண்ட நாள் வேலை இல்லாமல் இருந்த எனக்கு, பொறுப்பான வேலை வாங்கி தந்து, பெண்ணையும் திருமணம் செய்து தர தயாராக உள்ளனர் பெண் வீட்டில். இதனால், என் தன்மானம் இழக்குமா? அதற்கு நான் உடன்படலாமா?வாய்ப்புகள் உமது வீடு தேடி வந்து, கதவைத் தட்டாது. இதுவரை, வேலையில்லாமல் பட்ட அவதியையும், தன்மான இழப்பையும் எண்ணிப் பாருங்கள்; மனதில் வேறு கேள்வியே எழாது!ஆர்.வித்யாதரன், தாம்பரம்: ஆலோசனை சொல்லும் மனைவிக்கும், ஆணையிடும் மனைவிக்கும் வித்தியாசம் என்ன?சிலர் பசுவை, மாடு என்பர்; அதற்காக, 'பசு' என்ற சொல்லே அவர்களுக்கு தெரியாது என்று அர்த்தமல்ல! சொல்ல வேண்டிய விஷயம் ஒன்றாகத் தான் இருக்கும். குரல் கொஞ்சம் ஓங்கி ஒலிப்பதால், அது ஆணை போல தெரியும்! அடிப்படையில், பெண்கள் எல்லாரும் மென்மையானவர்கள் தானே!பா.முகமது இஸ்மாயில், அனுப்பானடி: நான் பேருந்து ஓட்டுனர். படிக்கட்டில் பயணம் செய்யும் படித்த இளைஞர்களை உள்ளே வரச் சொல்லியும் வருவ தில்லையே?அனுபவப் பாடம் படிக்க, விலை அதிகம் என்பதை, இன்னமும் நம் மக்களில் அனேகர், உணரவில்லை. பட்டால்தான் தெரியும். இருந்தாலும், ஊதுற சங்கை, மறவாமல், ஊதி வையுங்கள்!க.கமலாதேவி, செக்கானூரணி: எனக்கு மூன்று மாமா இருக்கின்றனார். மூவருக்கும் என்னை மணக்க விருப்பம். நான் யாரை மணந்து கொள்வது?மூன்று பேருமே வேண்டாம்; நெருங்கிய சொந்தத்தில் திருமண உறவு கொள்பவரின் குழந்தைகளுக்கு, பல விதங்களிலும் பாதிப்பு ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அயல் மகரந்தச் சேர்க்கையில் தான் அற்புதமான கனிகளும், மலர்களும் கிடைக்கும்!எம்.கண்மணி, குமுளி: ஆசையை அடக்கி, சிக்கன மாக வாழ்வது நல்லதா அல்லது ஆசைகளை நிறைவேற்றி, நிகழ்காலத்தில் மகிழ்ச்சியாக வாழ்வது சிறந்ததா?மகிழ்ச்சியான வாழ்வுக்கு பணம் ஒன்றுதான் மிக முக்கியம் என்ற கருத்து தவறு; பணமும் தேவை தான், ஆனால், அதுவே பிரதானம் இல்லை. ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு, 'பென்னி வைஸ் பவுண்ட் பூலிஷ்!' சிக்கனமாக இருக்கிறேன் பேர்வழி என்று, ஒரு காசை சேமித்து விட்டு, நூறு ரூபாயை விடுபவர்களும் உண்டு!பி.ஸ்டீபன், வேளச்சேரி: அந்தக் காலத்திலேயே பிறன் மனைவியுடன், ஒரு ஆண் சதுரங்கம் ஆடியது தப்பாகக் கருதப்படவில்லை. உதாரணம், கர்ணனும், துரியோதனன் மனைவி பானுமதியும். இக்காலத்தில், ஒரு ஆண் பிறன் மனைவியுடன் விளையாடினால், தவறாகக் கணிக்கப்படுகிறதே?சதுரங்க விளையாட்டு, சம்சார விளையாட்டாகி விடக் கூடாதே என்ற அச்சமாக இருக்கலாமோ?டி.ராம்குமார், சென்னை: எவ்வளவுதான் நெருங்கிப் பழகினாலும், உள்ளொன்று வைத்து, புறமொன்று பேசுகின்றனரே... அது ஏன்?சாதாரண மனித இயல்புதான் இது! எல்லாரும் மனம் விட்டு பேசுவர் என, எண்ணக் கூடாது! உள்ளொன்று வைத்திருப் பவர்களை அடையாளங்கண்டு, எச்சரிக்கையுடன் பழகுவது நல்லது!