உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்

மு.விஜயலட்சுமி, உதகை: இந்த விஞ்ஞான காலத்திலும் கூட, 'கல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருஷன்' என்ற பழமொழிக்கேற்ப, கணவன் செய்யும் கொடுமைகளை தாங்கிக் கொள்கின்றனரே பெண்கள். இவர்கள் துணிந்து நிற்கும் நாள் எப்போது வரும்?ஏற்கனவே வந்து விட்டது. இன்று, 'பேமிலி கோர்ட்டில்' ஏராளமான டைவர்ஸ் வழக்குகள், பெண்களால் தொடரப்பட்டுள்ளன. காலுக்கு உதவாததை கழற்றி எறியும் துணிச்சல், நம்மூர் பெண்களிடம் பெருகி வரத்தான் செய்கிறது! என்.ஆனந்தன், லட்சுமிபுரம்: நகர்புறப் பெண்களைப் போல், கிராமப்புறப் பெண்களும் அனைத்து துறைகளிலும் முன்னேறி வருகின்றனரா?நீங்கள் கேள்வியை, 'உல்டா' செய்து கேட்டிருக்க வேண்டும். நகர்புறப் பெண்களை விட, கிராமத்தில் இருந்து வரும் பெண்கள் தான் முன்னேற்றத்தில் முதல்! சி.டி.விண்ணரசி, அயனாவரம்: வேலைக்குச் செல்லும் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவள் நான். வீட்டை விட்டு வெளியே சென்றாலே ஆண்களின், 'சைட்' பிரச்னை தாங்க முடியவில்லை. பெண்கள் என்றாலே, ஆண்கள் பார்ப்பதற்காக படைக்கப்பட்ட ஜடங்களா?மனதிற்கு இனிமை தரும் பூவை, கொடியை, மரத்தை, செடியை, புடவையை பார்ப்பதில்லையா நீங்கள்? அது எவ்வளவு சந்தோஷத்தைத் தருகிறது. அதே போல ஆண்களும் பார்த்து விட்டு போகட்டுமே... அவர்கள் இடைஞ்சல் தராத வரை!பி.பால்ராஜ், நெய்வேலி: நீங்கள் சென்ற வெளிநாடுகள் பலவற்றில், ஏதாவது ஒரு நாட்டிலாவது நம் நாட்டில் காணப்படுவது போல நடைபாதைகள் குப்பைக் கூளங்களுடன், அருவருப்பாகக் காட்சியளிப்பதைப் பார்த்திருக்கிறீர்களா?எல்லா நாடுகளிலும் நம்மூர் போன்ற சில ஏரியாக்கள் இருக்கத்தான் செய்கின்றன. அமெரிக்காவில் நியூயார்க் - குயின்ஸ் போன்ற பகுதிகளும், ஜப்பானில் டோக்கியோ நகரின் சில பகுதிகளும் ரொம்ப மோசம். நடைபாதை குப்பை, அறுவெறுப்பு, 'யுனிவர்சல்' பிரச்னை தான்! கே.ஆர்.ராமநாதன், திருவிடைமருதூர்: வயதானவர்களில் பலர்,'தங்களை யாரும் கவனிப்பதில்லை' என்ற மனநிலைக்கு ஆட்பட்டுள்ளனரே... இதை மாற்றுவது எப்படி?இந்த மனநிலைக்கு உள்ளானவர்களை, இனி எவ்வளவுதான் கவனித்தாலும், தம் சுயபச்சாதாபத்தை விட்டு வெளியே வர மாட்டார்கள். ஆனால், மனசாட்சிக்கு விரோதமில்லாமல், இவர்களைக் கவனிப்பது உரியவர்களின் பொறுப்பு. நாமும் வயதான காலத்தில், இம்மனநிலைக்கு உள்ளாகி விடக் கூடாது என்பதில் நீர், நான் உட்பட வயதாகிக் கொண்டிருக்கும் அனைவரும், மனதை இப்போதே பக்குவப்படுத்திக் கொள்ள ஆரம்பித்து விட வேண்டும்! எம்.ஷகீல் அகமது, சென்னை: என் நண்பனுக்கு பேங்கில் கடன் தர உள்ளனர். அவனுக்காக கேரண்டி கையெழுத்துப் போடுவது நல்லதா... கெட்டதா?நண்பனுக்கு உதவுவது நல்லது தான். ஆனால், அது, கேரண்டி கையெழுத்து போடுவதன் மூலம் இல்லாமல், உங்கள் கையில் இருந்தே கொடுத்து விடுங்கள். (காசு இருந்தால்) பின்னாளில், கடன் வாங்கியவர் திரும்பக் கொடுக்க முடியாமல், கேரண்டி கையெழுத்து போட்டவர் பிரச்னையில் சிக்கிக் கொண்ட கேசுகள் நிறையப் பார்த்து இருக்கிறேன். இதனால், நண்பர்கள், எதிரிகளாவது உண்டு!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !