அந்துமணி பதில்கள்
ஆ.லினோராஜ், புதுச்சேரி: இக்கால மனிதன், அடுத்தவன் ஒருவனை மதிக்கிறான் என்றால், அதன் அர்த்தம் என்னவாக இருக்கும்?மதிக்கப்படுகிறவனின் மணி பர்ஸ் கனமானது என்பதை, அறிந்து வைத்திருக்கிறான் என்பது தான் காரணம். பணம் இல்லாதவனை இக்காலத்தில், எவனும் மதிப்பதில்லை!கே.பிரகாஷ், காஞ்சிபுரம்: ஊழல் மற்றும் லஞ்சத்தில் திளைத்தவர்களை பணி மாற்றம் செய்வதால் மட்டும் திருந்தி விடுவார்களா?மாட்டார்கள்; அவர்கள் பதவியை பறித்து, விசாரணை வைத்து, கம்பி எண்ண வைக்க வேண்டும். அப்போது தான் இதைக் காணும் மற்றவர்கள் அஞ்சி நடப்பர். ஹூம்... இதெல்லாம் நம்மூரில் நடக்கக் கூடியதா?சி.செய்யது அலி பாத்திமா, மாங்காடு: 'புத்திசாலித்தனமாக வாழ்கிறான்' என்று யாரை குறிப்பிடலாம்?கடன் வாங்காமலும், கடன் கொடுக்காமலும் வாழ்பவரை!வ.சிவாராஜ், உத்திரமேரூர்: வேலை இல்லாத பட்டதாரிகளாக, எதிர்காலத்தின் மீது நம்பிக்கை அற்றவர்களாக இருக்கும் இன்றைய இளைஞர்களுக்கு உங்களின் அறிவுரை என்ன?கவுரவம் பார்க்காதீர்கள்! ஒரு முறை அல்ல, நூறு முறை சொன்னதாக எடுத்துக்கங்க... கிடைக்கிற வேலை எதுவானாலும் ஏத்துக்கங்க. தானாக பிடிப்பு, நம்பிக்கை வரும் வாழ்க்கையில்!அ.செந்தில் விநாயகம், விருதுநகர்: வாழ்வை சிறப்பாக்கிக் கொள்ள என்ன செய்ய வேண்டும்?ஆடம்பரத்தை மூட்டைக் கட்டி, சிக்கனத்தை பழகிக் கொள்ள வேண்டும்!ஜே.மீராபாய், பொள்ளாச்சி: நம்பிக்கை துரோகம், உண்ட வீட்டிற்கு இரண்டகம், உடன் இருந்தே குழி பறித்தல்... இதில் எதை தாங்கிக் கொள்ள முடியாது!மூன்றுமே ஒன்றுக்கொன்று சளைத்தது அல்ல! மாறி வரும் இக்காலகட்டத்தில், நம் தோலை எருமை தோல் கூட இல்லை, காண்டாமிருகத் தோலாக மாற்றி, அனைத்தையும் சகித்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. ஆனால், இந்த துரோகம் புரிபவர்கள் உடனடியாக இல்லாவிட்டாலும், ஒரு காலகட்டத்தில் நிம்மதியையும், நல்ல தூக்கத்தையும் இழப்பது உறுதி!கே.ராசாமணி, திருவள்ளூர்: பெண்களின் தன்னம்பிக்கைக்கும், தலை கனத்திற்கும் உள்ள இடைவெளியின் அளவு என்ன?பெண்களிடம், 'தலை கனம்' என்ற பேச்சுக்கே இடமில்லை. அவர்களின், 'தன்னம்பிக்கை' தான் பலருக்கு, 'தலை கனமாக' தெரிகிறது!இ. ஜேம்ஸ், சென்னை: எந்த மாநில மக்கள் அதிகமாக கண் தானம் செய்கின்றனர்?குஜராத் மாநிலத்தில் வாழும் ஜெயின் இன மக்கள் தான், அதிகமாக கண் தானம் செய்வதாக, மும்பையில் உள்ள, 'ஐ பேங்க் அசோசியேஷன் ஆப் இந்தியா' என்ற அமைப்பு கூறுகிறது. இறந்து போகும் ஜெயின் இன மக்கள், 10 பேரில், 9 பேர் கண் தானம் செய்கின்றனராம்!