அந்துமணி பதில்கள்!
எஸ்.ஆர்.மீனாட்சி, மதுரை: ஆண்களை விட, பெண்கள் படிப்பில் சிறந்து விளங்குவது ஏன்?'சைட், 'தம்' கிடையாது;'பீர்' சீட்டு, சூதாட்டம் இல்லை; 'கட்' அடிச்சு தியேட்டர் போவது கிடையாது. பின், ஏன் நல்லா படிக்க மாட்டாங்க... இதோ இன்னொரு தகவல்... கேரள பாலிடெக்னிக்குகளில் படிப்போரில், 60 சதவீதம் பேர் பெண்கள்!*கி.சிவசுப்பிரமணியன், திருத்தங்கல்: மன அமைதியில்லாமல் வாழ்கிறேன்; மன அமைதிக்கு வழி கூறுங்களேன்...உங்களது கையெழுத்தையும், படிப்பையும் பார்க்கும் போது, பணி ஓய்வு பெற்ற ஆசிரியர் என்று தோன்றுகிறது. பணிபுரியும் போது, 'ஹாபி' எதையும் நீங்கள் வளர்த்துக் கொள்ளாததே இன்றைய இந்நிலைக்குக் காரணம்! போகட்டும்... சுற்றி நடப்பதை மறந்து விடுங்கள். இறை நம்பிக்கை உடையவர் என்றால், ஷேத்திராடனம், கோவில், குளம், உபன்யாசம் என, மனதைத் திருப்புங்கள் அல்லது இலவச, 'டியூஷன்' எடுங்கள் அல்லது நூலகமே கதி என, மாற்றிக் கொள்ளுங்கள்... மன அமைதி கிடைக்கும்!* எல்.காசிதாசன், வந்தவாசி: சில இளம் பெண்களும், மாணவியரும், சினிமாக்காரர்களைத் தேடி, ஊரை விட்டு ஓடுவது, பெற்றோரின் கவனமின்மையாலா, சமுதாயச் சீர்கேட்டாலா, சினிமா மோகத்தினாலா?சந்தேகமே இல்லாமல் பெற்றோரின் கவனக்குறைவு தான் காரணம். 'பெத்துப் போட்டாச்சு... இனி, அதுவே வளரும்...' என்று இருந்து விடுகின்றனர், சில பெற்றோர். குழந்தைகளை, அவர்களின் ஒவ்வொரு பருவத்திலும் கூர்ந்து கவனித்து, நல்வழிப் படுத்துவது பெற்றோர் கடமை!எம்.வள்ளி, கோவை: ஒருவரோடு ஒருவர் மனதால் வாழ்ந்து, பின், வேறு ஒருவரோடு எப்படி வாழ முடியும்?தட் இஸ் லைப்... அதுதான், வாழ்வின் நிதர்சனம்; வாழ்ந்தாக வேண்டுமே!என்.சொக்கநாதன், செங்குன்றம்: சுய தொழில் மூலம் போதுமான அளவு சம்பாதிக்கிறேன்; கை நிறைய சம்பளமும், பதவியும் தருவதாக தனியார் நிறுவனம் ஒன்றில் அழைக்கின்றனர்... போகலாமா?வேண்டாம்; இப்போதே போதுமான அளவு சம்பாதிப்பதாக கூறுகிறீர்கள்! 'கை நிறைய' வேண்டும் என்பதற்காக, தங்க முட்டை போடத் தயாராகி வரும் பொன் வாத்தை இன்றே கொன்று விடாதீர்கள்!என்.மைதிலி, சிட்லபாக்கம்: திருமணமான நண்பர் ஒருவர், தன்னை நிறைய பெண்கள் விரும்பினர் என்று அடிக்கடி என்னிடம் கூறுகிறார்; எதற்கு?பார்ட்டி படியுமா, படியாதா என, உங்களிடம் நூல் விட்டுப் பார்க்கிறார்; ஜாக்கிரதை. அவரை, இனியும் நண்பராக கருத வேண்டுமா என, நன்கு யோசித்து முடிவு செய்யுங்கள்!எம்.விமல், விருதுநகர்: உங்களது பெஸ்ட் பிரண்ட் எத்தனை பேர்?இருவர். முதலாமவர், கடிகாரனார்; இரண்டாமவர், நாள்காட்டியார். இவர்கள் தான் என் சிறந்த நண்பர்கள்; 'நேரமும், நாளும் ஓடிக் கொண்டே இருக்கிறது... முன்னேறு, முன்னேறு' என, ஒவ்வொரு நொடியும் உணர்வு கொள்ள வைக்கும் ஊக்க, 'டானிக்' இவர்கள் தான்!