அந்துமணி பதில்கள்!
* ஆர். அஸ்வின்குமார், வாடிப்பட்டி: நம் நாட்டில் தான் பொது விடுமுறைகள் அதிகமா? நமக்கு சமமாக விடுமுறை கொடுக்கும் நாடு ஏதேனும் உண்டா... மிக குறைந்த விடுமுறை உள்ள நாடு எது?நமக்கு சமமான விடுமுறை அளிக்கும் நாடு இத்தாலி; ஆண்டுக்கு, 42 பொது விடுமுறை. நாம், 43 நாட்கள்; நம்மைப் போலவே, ஏன் நம்மை விட இத்தாலியர் சோம்பேறிகள். மேற்படி விடுமுறைகளில் சனி, ஞாயிறு சேர்த்துக் கொள்ளுங்கள்! மிகக் குறைந்த பொது விடுமுறை அமெரிக்காவில்... ஆண்டுக்கு, 20 நாட்களுக்கு பொது விடுமுறை! ஜி.சகுந்தலா, ஊட்டி: பெண் என்பவள், ஒருவனுக்கு எப்போது முள்ளாகத் தெரிகிறாள்...தன் சொல்படியே நடக்க வேண்டும், தான் நினைத்தபடியே செயல்பட வேண்டும் எனப் பெண் எண்ணி செயல்படும் போதும், எதிர்பார்ப்புகள் ஆணின் எல்லையைத் தாண்டும் போதும் முள்ளாகத் தெரிகிறாள். * கே.வத்சலா, கடலுார்: எங்கள் மீது அதிக பாசம் வைத்துள்ள எங்கள் மகன், பிற்காலத்தில் எங்களைத் தாங்குவான் என்று, வீடு, சொத்துக்களை அவனது பெயரில் மாற்றி விடலாம் என நினைப்பது சரியா?சரி இல்லை; மனித மனம் குரங்கு போன்றது; எந்நேரமும் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். எனவே, பிடியை உங்கள் கையிலேயே வைத்திருங்கள். உங்கள் ஆயுள் காலத்திற்கு பின், அவை, அவரை அடைய வழி செய்யுங்கள்! (உங்கள் மகன் மாறுபட்டவராக இருக்கலாம்; பொது நடைமுறைகளை கூறினேன்!)சி.கோபால், காஞ்சிபுரம்: எந்த விஷயத்திலும் எனக்கு குழப்பமே மிஞ்சுகிறதே... ஏன்?எதிலும் தெளிவான அறிவு இல்லாததே இந்நிலைக்குக் காரணம். எடுத்துக் கொள்ளும் செயல் பற்றி, அ முதல் ஃ வரை முழுமையாக அறிந்து செயல்பட்டால் குழப்பம் ஏற்படாது. இதற்கு பயிற்சியும், வழிகாட்டுதலும் தேவைப்படும்.தி.சடகோபன், பொள்ளாச்சி: துரோகம் செய்த ஒருவன், மீண்டும் என்னை நெருங்க முயற்சி செய்கிறான்; என்ன செய்யலாம்?துரோகியின் சிரிப்பில் எமன் மறைந்து இருப்பான்; துரோகத்தால் ஏற்கனவே நொந்து போயிருப்பீர்கள்... மீண்டும் படுகுழியில் விழ வேண்டுமா... கவனமாக இருங்கள்!* எம்.மைக்கேல்ராஜ், வேலுார்: என் நண்பன் ஒருவன், எவர் சொல்லுக்குமே கட்டுப்படாத வகையில் இருக்கிறானே...இந்த திமிர்தனத்திற்கு காரணம் பணமாக இருக்கும். பணம் நிரந்தரமில்லாதது என்பதை அறியாமல், பணம் தரும் பலத்தில் இப்படி நடந்து கொள்பவராக இருக்கும்! கையில் பணம் இருக்கும் இது போன்ற முட்டாள்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்... இல்லை என்றால் பிறருக்கு கேடு விளைவித்து விடுவான்.