அந்துமணி பதில்கள்!
பி. பாலாஜி கணேஷ், சிதம்பரம்: பேனாவின் வலிமையை எப்போது உணர்ந்தீர்கள்?பாலாஜி கணேஷ் போன்ற தபால் மூலம் எழுதும் வாசகர்களிடமிருந்து தான்! இப்போது, கம்ப்யூட்டரில், 'இ - மெயிலில்' வரும் கேள்விகளிடமிருந்தும் தான்! * ச. மாரியப்பன், சின்னமனுார், தேனி: சிறுபான்மையின மக்களை, ஸ்டாலின் துாண்டி விடுவதாக, சட்டசபையில் முதல்வர் பேசி இருக்கிறாரே...உண்மை தான். போராடுவோருக்கு, சி.ஏ.ஏ., - என்.ஆர்.சி., - என்.பி.ஏ., சட்டங்கள் என்னவென்று தெரியுமா? இவை புரியாத மக்களை, வரும் தேர்தலை மனதில் வைத்து, ஸ்டாலின் துாண்டி விடுகிறார் என்பதே உண்மை!மனோகர், கோவை: 'ரஜினி ஒரு பொய்க்கால் குதிரை' எனக் கூறும், தி.க., தலைவர் வீரமணி, ஒரு, 'பாயும்' குதிரையா?நான்கு கால்களும், 'போலியோ'வால் பாதிக்கப்பட்ட, வயதான குதிரை. வரும் தேர்தலில், ஒரு தொகுதியிலாவது நின்று, 10 ஓட்டு வாங்கட்டும் பார்க்கலாம்! இவர் பேச்சை எல்லாம் படித்து, நேரத்தை வீணாக்காதீர்கள்! * எஸ். நிக்கில்குமார், ராமேஸ்வரம்: நிர்பயா வழக்கு குற்றவாளிகள், மாறி மாறி, மனு செய்து, துாக்கு தண்டனையை தள்ளிப்போட வைத்தனரே... இது நியாயமா?அவர்கள் தரப்பில் நியாயமாக நினைக்கலாம்! ஆனால், நம் நீதித்துறையில், இவ்வளவு ஓட்டைகள் இருப்பது, இப்போது தான் தெரிய வந்துள்ளது!முகிலன், தேவக்கோட்டை: 'வரும் சட்டசபை தேர்தலில், 90 இடங்களை பிடித்து, 2021ல், ஆட்சி அமைப்போம்...' என்கிறாரே, அன்புமணி ராமதாஸ்!பகல் கனவு காண்பதில் கெட்டிக்காரர், அன்புமணி ராமதாஸ்! 2021 வரட்டும், அப்போது கலையும் கனவு!வி. வெண்ணிலா, அரூர், தர்மபுரி: கிராமங்களில் வாழ்ந்த அனுபவம் உண்டா, அந்துமணியாரே?பள்ளி விடுமுறை நாட்களில், தன்னுடைய அப்பா கிராமத்திற்கு அனுப்பி விடுவார், அம்மா. அங்கு, சிறுவர்களுக்கு கழிப்பறை கிடையாது. வீட்டின் நான்காம் கொல்லையில், ஒரு குட்டை உண்டு; அங்கு தான், 'வேலை'யை முடிக்க வேண்டும்! 'வேலை'யின்போது, பின்னாலிருந்து பன்றிகள் உறுமும். பயந்து போய், பாதியிலேயே, 'வேலை'யை முடித்து, குட்டையில் கழுவிக் கொண்டு, தப்ப வேண்டியது தான்!* கண. கணேசன், திருச்சுழி, விருதுநகர்: அயல் நாடுகளுக்கு நிகராக, நம் நாட்டிலும் பெருகி வரும் விவாகரத்துக்கள், நம் பெண்களின் சுதந்திரத் தன்மையை காட்டுகிறதா... அடக்கமின்மையைக் காட்டுகிறதா?நம் நாட்டு பெண்களில், 99 சதவீதம் பேர், அடக்கமானவர்கள் தான். அவர்கள், தம் காலிலேயே நிற்க ஆரம்பித்து விட்டனர். ஆண்களின், 'வேண்டாத் தனம்' தான், அவர்களை, விவாகரத்துக்கு துாண்டுகின்றன.