உள்ளூர் செய்திகள்

அந்துமணி பா.கே.ப.,

அவர், ஒரு பாரின் கார் டீலர்; உபயோகப்படுத்தப்பட்ட வெளிநாட்டு கார்களை வாங்கி, விற்பவர். அதேபோல், ஸ்பேர் பார்ட்டுகள் வேண்டுமென்றாலும் இறக்குமதி செய்து கொடுப்பவர்; நீண்டகால நண்பர். கடந்த வாரத்தில் ஒரு நாள், 'பெஜேரோ' ஜீப் எடுத்து வந்திருந்தார். இவ்வகை வண்டிகள், 'போர் வீல் டிரைவ்' கொண்டவை; சாதாரண கார்கள், 'டூ வீல் டிரைவ்' ஆகத்தான் இருக்கும்.அதாவது, இன்ஜின் சுழற்சியால் முன்னிரு சக்கரங்களோ, பின் இரு சக்கரங்களோ சுழலும்; அந்த உந்து விசையால் மற்ற இரு சக்கரங்களும் சுழலும்.அம்பாசிடர், பியட் போன்ற கார்கள், 'பேக் வீல் டிரைவ்' கார்கள். பின் சக்கர சுழற்சியால் இயங்குபவை. மாருதி, ஹூண்டாய், போர்டு, ஹோண்டா போன்றவை முன் சக்கர சுழற்சி கொண்டவை. ஜீப் போன்ற சில வகை கார்களில், நான்கு சக்கரங்களும் இன்ஜினுடைய சுழற்சிக்கு இணைக்கப்பட்டு இயங்கும் வசதி கொண்டவை.இந்த வசதி இருப்பதால், செங்குத்தான மலை, மணற்பாங்கான பாலை வனம், கடற்கரை போன்ற இடங்களில் சுலபமாகச் செல்லலாம்.'மணி... மகாபலிபுரம் போய், அங்கிருந்து கடற்கரை மணலில், கடலை ஒட்டி, 'பெஜேரோ'வில் சென்னை திரும்பி வரலாமா?' எனக் கேட்டார் நண்பர். சுகானுபவமாயிற்றே... மறுப்பேனா...அன்று, நான், லென்ஸ் மாமா மற்றும் அந்த நண்பர் மகாபலிபுரம் சென்று, கடற்கரை மணலில் காரை இறக்கி, கடல் காற்றை, 'என்ஜாய்' செய்தபடியே சென்னையை நோக்கி வர ஆரம்பித்தோம்.வழியில், ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தி, கடல் அழகை ரசித்த போது, நண்பரும், லென்ஸ் மாமாவும் வெண்குழல் வத்தி பற்ற வைக்க, தீப்பெட்டியை உரசி உரசி காலி செய்தனர். கடல் காற்றால் தீக்குச்சி பற்றவே இல்லை. 'நெருப்புப் பெட்டி மாதிரி கீழே போட்டு உடைத்து பற்ற வைக்க வேண்டும் போலிருக்கிறது...' என்றார் மாமா.'பெட்டியைப் போட்டு உடைப்பதா...' என்றேன் புரியாமல்!'பெட்டி என்றால் பெட்டியா... புட்டி, கண்ணாடிக்குழாய்! காற்று புகாத கண்ணாடிக் குழாய் உருவில் தான், 1781ல் பிரான்சில் முதன் முதலில் தீப்பெட்டி வந்தது.'பாஸ்பரசில் தோய்த்த காகிதச் சுருள் ஒன்று அதற்குள் இருக்கும். நெருப்பு தேவை என்றால், அந்தக் குழாயைப் போட்டு உடைக்க வேண்டும். குபீரென்று நெருப்பு கிளம்பும். அதில் பற்ற வைத்துக் கொள்ள வேண்டியது தான்!''அப்படியானால் ஒரு குச்சி தேவைக்கு, ஒரு புட்டியையே உடைக்க வேண்டுமே!''அது மட்டுமல்ல, பாஸ்பரஸ் புகை விஷத்தால் ஏராளமான சாவு வேறு. தற்கொலை செய்து கொள்வோருக்கு அந்த பாஸ்பரஸ் குழாய் கிடைத்தது ரொம்ப வசதியாகப் போய் விட்டது. தப்பித் தவறி கீழே விழுந்தோ, மோதியோ உடைந்தாலும் ஆபத்து...' என்றார் மாமா.'இப்போதும் அப்படிப்பட்ட தீப்பெட்டி தான் கிடைக்கும் என்று இருக்கக்கூடாதா... சிகரட் பிடிக்கிறவர்கள் தாமாவே நிறுத்திக் கொள்வர்...' என்றேன்.உடனே, மாமா, 'அந்த காலத்திலே எங்கப்பா சுதேசி இயக்கத்தில் சேர்ந்து வெளிநாட்டு துணியை கொளுத்தினார். வெள்ளைக்கார போலீசு எங்கப்பனைப் பிடிச்சு சிறையில் போட்டது. இப்போ நான் கடைத்தெருவில் நின்று வெளிநாட்டு சிகரட் 555 பிடிச்சால், கைது செய்து அபராதம் போடுது. 'தியாகி'கள் குடும்பத்துக்கு எப்போதும் போலீசு தொந்தரவு தான்...' என்று, 'வருந்தி' சொன்னார்.தலையிலடித்துக் கொண்டேன்.'அதெல்லாம் சரி... ஜீப் அனுபவத்தை சொல்...' என்கிறீர்களா?அது தனிக்கதை; இன்னொரு முறை சொல்கிறேன்!மும்பையில் உள்ள மிகப்பெரிய விளம்பர நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் தமிழர் அவர்; சமீபத்தில், சென்னை வந்திருந்தார். அலுவலகத்தில் என்னை சந்தித்தார்.விளம்பர உலகில், 'சர்வே' எடுப்பது முக்கியப் பணி... அதில் நம் நண்பர், 'எக்ஸ்பர்ட்!' விரல் நுனியில் பல தகவல்கள், புள்ளி விவரங்கள் வைத்திருப்பவர். அவரை கிண்டிவிட்டு, குறிப்புகள் எடுக்க ஆரம்பித்தேன்...அவர் கூறிய தகவல்களில் சில இதோ:இந்திய ரயில்வேயில் தினமும், ஒரு கோடியே, 20 லட்சம் பேர்களுக்கு மேல் பயணம் செய்கின்றனர். 62 ஆயிரத்து, 915 கி.மீ., ரயில்வே லயன்கள் உள்ளன.வசதியாக வாழும் படித்த இந்தியர்கள், வாழ்வில் முக்கிய ஸ்டேட்டஸ் சிம்பலாக கருதுபவை... முதலாவது, கல்லூரி டிகிரி; இரண்டாவது கார்; பத்தாவது, ஜிம்கானா மற்றும் காஸ்மோபாலிடன் போன்ற பெரிய கிளப் மெம்பர்ஷிப்!சராசரி இந்தியன், ஒரு ஆண்டுக்கு, 92 தடவை செக்ஸ் அனுபவிக்கிறான்; உலக சராசரி-, 109 தடவை.தங்களது சேமிப்பை போடுவதற்கு பத்திரமான இடம் என்று இந்தியர்கள் கருதுவது: வங்கிகள்- - 62 சதவீதம், மனை, நிலம், வீடு- - 21 சதவீதம், ஷேர்கள்- - 2 சதவீதம்.உலகில் உள்ள, 60 மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது.இந்தியர்களிடம் சென்றடைவது மற்றும் வியாபித்திருப்பது, தூர்தர்ஷனோ மற்ற, 'டிவி' சேனல்களோ அல்ல, ஆல் இந்தியா ரேடியோ!நூறு கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்களில், 98 கோடி இந்தியர்களால் ரேடியோ கேட்க முடியும்!இந்தியாவில், 12 கோடி ரேடியோ செட்கள் இயங்குகின்றன.ரேடியோ, இந்தியாவின் 90 சதவீதம் பகுதியை சென்றடைகிறது. தண்ணீரோ, 50 சதவீதம் தான் சென்று அடைகிறது.'உன் குரல் நன்றாக இல்லை...' என்று ஒருவரை நிராகரித்தது ரேடியோ. அவரது குரல் அனைத்து இந்தியர்களுக்கும் நன்கு பரிச்சயம்; அவர் தான் அமிதாப்பச்சன்!நாம் பெருமைப்படக் கூடிய விஷயங்கள்...இங்கிலாந்து ராணியின் கிரீடத்தில் உள்ள கோகினூர் வைரம், மெஹந்தி, சடுகுடு(கபடி) விளையாட்டு, கைரேகை, ஜோசியம், சதுரங்கம் -ஆகியவை நம்மைச் சேர்ந்தவை.நகரங்களில் வாழும் இந்தியர்களில் நல்ல ஆரோக்கியமாக இருப்பவர்கள், 15 சதவீதம் பேர் மட்டுமே!நகரில் வாழும் இந்தியர்களில் சரியான எடைக்கு மேல், அதிகமான எடையுடன் இருப்பவர்கள், 65 சதவீதம்.நேரம் கிடைக்கும் போது தேகப்பயிற்சி செய்யும் இந்தியர்கள், 19 சதவீதம்; சீனர்கள், 34 சதவீதம்.உலகிற்கு பீடியை அளித்த நாடு இந்தியா!இந்தியா முழுவதும் பாப்புலராக, அனைவரும் அறிந்திருக்கும் விஷயம்: ராமாயணம்!கடந்த, 1987ல், 'லா கமிஷன்' பரிந்துரையின் படி, 10 லட்சம் பேருக்கு இருக்க வேண்டிய நீதிபதிகள், 50; தற்போது, இந்தியாவில், 10 லட்சம் பேருக்கு இருக்கும் நீதிபதிகள், 10.5. இந்திய கோர்ட்டுகளில் தேங்கியிருக்கும் வழக்குகள் இரண்டரை கோடி!இப்போது இருக்கும் வழக்குகளை, புது வழக்குகளை எடுத்துக் கொள்ளாமல், விசாரித்து முடித்து, தீர்ப்பு சொல்லி முடிக்க, இந்திய கோர்ட்டுகளுக்கு தேவைப்படும் காலம், 324 ஆண்டுகள்.இந்திய பள்ளிக்கூடங்களில் குடிதண்ணீர் வசதி இல்லாமல் இருப்பவை, 58 சதவீதம். டாய்லெட் வசதி இல்லாமல் இருக்கும் பள்ளிகள், 89 சதவீதம்.இந்தியாவில் திருமணத்திற்கு முன்பே செக்ஸ் அனுபவித்ததாக கூறும் மாணவர்கள், 25 சதவீதம்; மாணவிகள், 20 சதவீதம்.உத்திரப்பிரதேசத்தின் ஜனத்தொகையும், பாகிஸ்தானின் ஜனத்தொகையும் சமம்.இந்தியாவில் விற்பனை ஆகும் வயாக்ரா மாத்திரைகளில் உத்திரப்பிரதேசம், பீகார் என, இரு மாநிலங்களின் விற்பனை, 33 சதவீதம்.- இப்பகுதியை அப்படியே பத்திரப் படுத்துங்கள்... பல நேரங்களில் உபயோகமாக இருக்கும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !