உள்ளூர் செய்திகள்

அந்துமணி பா.கே.ப.,

ஆபீஸ் வேலையாக சேலம் போகச் சொன்னார், பொறுப்பாசிரியர்; லென்ஸ் மாமாவும் ஒட்டிக் கொண்டார்.சேலத்தில் பெரியசாமி அண்ணாச்சிக்கு, 'பேக்டரி' உண்டு; அவரிடம் சேலம் போகும் விஷயத்தைக் கூறியதும், 'நீங்க போங்க; நான், ஏற்காடு எக்ஸ்பிரஸைப் பிடிச்சு பின்னாலயே வாறேன்...' என்றார்.கிளம்ப வேண்டிய நாளில், 'இதோ, அதோ...' என, வேலை இழுத்துக் கொண்டே போய், ஒரு வழியாக மதியம் மூன்று மணிக்கு வண்டியை கிளப்பினார், மாமா.இப்போதெல்லாம், இருட்டிய பின், ஹைவேயில் வண்டி ஓட்டுவது மாமாவுக்கு சிரமமாக இருப்பதால், 140 - - 160 கி.மீ.,ல் ஹை- ஸ்பீடில் சென்றார்.வழியில் சின்னச் சேலத்தைக் கடக்கும் போது, பஸ் ஸ்டாண்ட் அருகே கடை வைத்திருக்கும் நண்பர் ஒருவர், மாமாவின் வண்டியை, 'நோட்' பண்ணி, சாலை மறியல் செய்யாத குறையாக நிறுத்தி விட்டார்.அப்போது, மாலை, 5.30 மணி இருக்கும்... 'வாங்க மாமா... வாங்க மணி...' என்றவர், 'கூல் டிரிங்ஸ் சாப்பிடுறீங்களா?' என, அன்பாக விசாரிக்கவும், 'அட நீங்க வேற... கூல்டிரிங் சாப்பிடுற நேரமா இது... இன்னும் ஒண்ணரை மணி நேரம் போனா வேற, 'டிரிங்' சாப்பிடுற நேரம் வந்துடும்...' என்றபடியே, தான் ஏதோ, ஜோக் சொல்லி விட்டதாக நினைத்து, பெரிதாக சிரித்தார், மாமா.அங்கிருந்து சேலம் செல்லும் வழியெல்லாம், குடி தண்ணீருக்காக, பிளாஸ்டிக் குடங்களுடன் தாயக்குலங்கள் அலைவதை காண முடிந்தது.'சுதந்திரம் வாங்கி, 70 வருஷமாச்சு... இன்னும் குடி தண்ணீருக்கு அலைய வைக்கிறாங்களே இந்த அரசியல்வாதிகள்... தண்ணிக்காக அலையறதால் எவ்வளவு, மனித உழைப்பும், நேரமும் வீணாகுது... இதுக்குக் காரணமா இருக்கிற அரசியல்வாதிகள் கழுத்தில, கல்லைக் கட்டி கடலில் தள்ளினா என்ன...' என்றேன், மாமாவிடம்!'அப்படி ஒரு காலம் வரத்தான் போகுது...' என்றவர், ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினார்.பின்னர், 'இப்படித்தான்...' என ஆரம்பித்தார்... 'மாமா... பழைய கதை எதையும் எடுத்து விட்டு, ஆளக் கொல்லாதீங்க... நீங்க சொல்ற, 'ஓல்டு' சமாசாரங்கள நான் எழுதப் போக, இளவட்டங்க, 'யோவ் ... ஹெவி சப்ஜெக்ட்ஸ் குடுக்காதய்யா'ன்னு லெட்டர் போடுறாங்க...' என்றேன்.ஏழை சொல் அம்பலம் ஏறுமா? ஆரம்பித்தார் மாமா...'ராஜாஜி தமிழக முதலமைச்சராக இருந்த காலம் அது... ஒரு கோடை காலத்துல, கடுமையான குடிநீர் பஞ்சம்... சென்னையில இருந்து, குடும்பம் குடும்பமா ஜனங்கள வெளியேத்தணும்ன்னு அதிகாரிங்க ஆலோசிச்சுட்டு இருந்தாங்க...'இந்த யோசனைய ராஜாஜி கிட்ட சொன்னாங்க அதிகாரிங்க. ஆனா, இந்த யோசனையை ஏத்துக்காத ராஜாஜி, 'சென்னையக் காப்பாத்த ஆண்டவன வேண்டிக்கலாம்'ன்னு ஒரு யோசன சொன்னார்.'ஒரு குறிப்பிட்ட நாளுல, கோவில், தேவாலயம், மசூதி மற்ற வழிபாட்டுத் தலங்கள்ல எல்லாம் பிரார்த்தனை நடத்தணும்ன்னு சொன்னாரு...'கம்யூனிஸ்ட்காரங்களுக்குத் தான் கடவுள் நம்பிக்கையே கிடையாதே... ராஜாஜியோட யோசனையை கிண்டலடிச்சு, 'சென்னைய காப்பாத்த இது தான் வழின்னா... சென்னை நகர மக்களோட கதி அதோ கதிதான்'னாங்க...'ஆனால், ராஜாஜி வேண்டுகோளுக்கிணங்க சர்வமதப் பிரார்த்தனை நடந்தது. அடுத்த, 24 மணி நேரத்துல, கரு மேகங்கள் திரண்டு, மழை மூணு நாள் அடியோ அடின்னு அடிச்சு, நீர் தேக்கங்க எல்லாம் நிறைஞ்சு போச்சு...'இந்த சம்பவம் நடந்தது ஒரு மே மாசத்துல... மழை பெஞ்சதும் கம்யூனிஸ்ட்காரங்க என்ன சொன்னாங்க தெரியுமா... 'இது, தற்செயல் நிகழ்ச்சி... பிரார்த்தனையால் மழை பெஞ்சதாக நாங்க நினைக்கலை'ன்னாங்க... 'நீங்க என்ன வேணும்ன்னாலும் சொல்லுங்க... பிரார்த்தனையால் அதிசயங்கள் நிகழும்...' என்று, அவங்களுக்கு பதிலளித்தார் ராஜாஜி...' என, முடித்தார், லென்ஸ் மாமா.'புரிஞ்சுகிட்டேன் மாமா... ஒரு பழைய நிகழ்வின் மூலம் அரசியல்வாதிங்கள நம்பாமல், தாமே காரியம் சாதிக்க, மக்களுக்குச் சொல்லிக் குடுத்துட்டீங்க... பேஷ் பேஷ்...' என்றேன்!- வண்டி சேலத்தை அடைந்திருந்தது!நிறம் கம்மி என்பதால், தாங்கள் படும் தொல்லைகள் குறித்தும், 'பெண்ணின் வாழ்வுக்கு பெண்ணே எதிரி' என்பதை விளக்கி, ஊர் மற்றும் பெயர் எழுதாத வாசகியர் இருவர் எழுதிய கடிதம் இது:உங்களின் எழுத்துகளை ரசித்து, வாரந் தவறாமல் வாரமலர் இதழை புரட்டும் வாசகியர் நாங்கள்.நெருங்கிய தோழியரான எங்களின் கருத்துகள், உங்கள் கருத்துகளோடு பல விஷயங்களில் ஒத்துப் போவதுண்டு. பல தடவை கடிதம் எழுத உட்கார்ந்து, எழுதி முடித்தவுடன், எங்களின் சுமைகளை இறக்கி வைத்த திருப்தி வந்தவுடன் கடிதத்தை, 'போஸ்ட்' பண்ணாமல் கிழித்து விடுவோம். இந்த முறை, 'போஸ்ட்' பண்ணியே ஆக வேண்டும் என்று நினைத்தே எழுதுகிறோம்.திருமணப் பருவத்தில் இருக்கும் பெண்கள் நாங்கள்; இருவருமே சற்று நிறம் குறைவு. ஆனால், நல்ல லட்சணம். கண்ணாடியில் எங்களை பார்த்தவரை இறைவன் நல்ல அழகை, ஊனமற்ற உடலை கொடுத்து இருக்கிறான் என்று அவனுக்கு நன்றி தெரிவித்திருக்கிறோம். ஆனால், தற்போது, 'பெண் நிறம் குறைவா... வேண்டாம்...' எனக் கூறும், மனிதர்களின் எண்ணத்தை அறிந்த பின் தான், எப்படிப்பட்ட சமுதாயத்தில் பிறந்துள்ளோம் என்பதை, உணர முடிகிறது.இப்போதும் கடவுளுக்கு நன்றி சொல்கிறோம்... 'நிறம், பணம்' என அலையும் மனிதர்களை வெளிச்சம் போட்டு காட்டுவது எங்களின் நிறம் தானே! பெண்கள் முன்னேற்றம் என பேசும் பெண்கள் தான் இதற்கு மூல காரணம். பெண் நிறம் கம்மியாக இருந்தால், பத்து பவுன் கூட போட்டால் செய்து கொள்வார்களாம்... நிறம் கம்மி என, சரியாக வரன் வராததால், 'குடிப்பழக்கம் உள்ள பையன்னா என்ன... முடிக்க வேண்டியது தானே...' எனக் கூறும் சுற்றத்தார்... இவர்களை எல்லாம் காணும் போது, மனம் வெதும்புகிறது.இறைவன் நல்ல கணவனை அமைத்துத் தருவான் என, நம்பிக்கை இருந்தாலும், சில சமயம் மனம் வெறுத்துப் போகிறது. எங்கு திரும்பினாலும் இடிக்கிறது; இப்பவே, வாழ்க்கை இவ்வளவு கஷ்டமாகத் தெரிகிறதே... 'இப்படிப்பட்ட மனிதர்களுடன் எப்படி வாழப்போகிறோமோ...' என நினைக்கும் போது, மலைப்பாக இருக்கிறது.ஒவ்வொரு முறையும் பெண் பார்க்கும் படலம் வரை வந்து, வரன் தட்டிச் செல்கிற போது சொல்ல முடியாத வேதனை. 'விளையாட்டுப் பொருளாக்கி, அவர்கள் இஷ்டத்திற்கு ஆட்டுவிக்கிறார்களே...' என எரிச்சல். இப்படி ஒரு நிலைமையை இறைவன் ஏன் உண்டாக்கினான் என, மன உளைச்சல். இவர்கள் யார் நம்மை விமர்சிக்க என எரிச்சல் தான் ஏற்படுகிறது. எதிர்த்துப் பேசினால், 'பெண்களுக்கு இப்படி செல்லம் கொடுக்கக் கூடாது...' என, பெற்றோருக்கு திட்டு!கண்ணில் வைத்து வளர்க்கும் பெற்றோருக்கு கவலையே நாங்கள் தான். மனக் கஷ்டத்தால் உறவினர்களிடம் அவர்கள், 'சரியாக வரன் ஒன்றும் அமைய மாட்டேன்கிறதே...' என சொல்லி வேதனைப்படும் போது, அவர்கள் இதை தமக்கு சாதகமாக்கிக் கொள்கின்றனர்.பெண்களின் வாழ்க்கை சீர்கெட்டு போவதற்கு ஒரு பெண்தான் காரணமாகிறாள்; தாயின் சொற்படிதான் மகன்கள் நடக்கின்றனர்.மீறி எந்த ஆணாவது மனைவி பக்கம் சாய்ந்தால் உடனே, பக்கத்து வீடு, எதிர்த்த வீடு, சுற்றம், உறவினர் என அனைவரிடமும், 'என் பையன் பொண்டாட்டிதாசன் ஆயிட்டான்...' என, நீலிக் கண்ணீர் வடிக்கிறாள், அவன் தாய். உடனே அனைவரும், 'மருமகள் வந்தாள்; தாயையும், மகனையும் இப்படியா பிரிப்பாள்...' என குத்தல் பேச்சுக்கள். இங்கேயும் ஒரு பெண் தான், இன்னொரு பெண்ணின் தாழ்வுக்கு பெரும் பங்கு வகிக்கிறாள். அதற்காக, ஆண்கள் அனைவரும் நல்லவர்கள் என்று கூற முடியாது.என்னதான் ஒரு பெண் படித்திருந்தாலும் இக்கொடுமையான சமுதாயத்தில் தனித்து வாழ இயலாது. இது, எங்களின் தனிப்பட்ட கருத்து. அதற்காக, மிருகங்களுடன் வாழ்க்கை நடத்தவும் முடியாது. இறைவனை நம்புபவர்கள் நாங்கள்; எங்களுக்கென்று ராமர்கள் பிறந்து இருப்பர். ராமனுடன் கை கோர்த்த பின், உங்களை நேரில் சந்திக்கிறோம். வாழ்க்கையே நம்பிக்கையில் தானே இருக்கிறது... நிச்சயம் சிறப்பாக வாழ்வோம்; அந்த இறைவன் வாழ வைப்பான்.- 'கறுப்பு' அழகான நிறம் என்பதை மாமியார் ஸ்தானம் வகிக்கப் போகும் பெண்கள் என்று தான் புரிந்து கொள்ளவரோ!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !