உள்ளூர் செய்திகள்

அந்துமணி பா.கே.ப.,

செஞ்சி - திருவண்ணாமலை சாலையில் அமைந்திருக்கிறது, ஆலம்பூண்டி என்ற கிராமம்; நண்பர் ஒருவரின் மாமனார் ஊர் அது... அவரது மாமனார் நிலச்சுவான்தார்; அவரைப் பார்ப்பதற்கும், நகர வாழ்க்கைக்கு ஒரு நாள் ஓய்வு கொடுக்கவும் விரும்பிய நண்பர், என்னையும் அழைத்தார்.மிகப் பெரிய ஓட்டு வீடு அது... வீட்டின் நடுவே பெரிய முற்றம், வாசலில் இரு திண்டு. திண்டில் சாய்ந்தபடி, எடுத்துச் சென்ற புத்தகம் ஒன்றை எடுத்தேன்.கே.சீனிவாசன் என்ற அன்பர், '50களில் எழுதியது... 'பழி' போடுவது பற்றி, அவர் சொல்கிறார்...மனித வாழ்வைக் கவனியுங்கள்; மனிதரின் வாழ்வைப் படம் பிடித்து வைத்திருக்கும் கதைகளையோ, நாடகங்களையோ பாருங்கள்... அபவாதப் பேயின் அட்டகாசங்கள் பொறுக்க முடியாதவை என்பது புரியும்.சப்தம் அடங்கும்; புயல் ஓயும்; தீ தணியும்; வெள்ளம் வடியும்; மின்சார ஓட்டம் கத்தரித்துப் போகும். ஆனால், அபவாதம் அடங்காது; ஓயாது; தணியாது; வடியாது; கத்தரித்துப் போகாது; பிராணனோடு வியாதி மறையும்; மரணத்திற்குப் பின்பும் மறையாமல் நிற்பது அபவாதம்!ஜனங்களை பொய் எப்படி ஏமாற்றுகிறது என்று கேட்கலாம்... பொய் ஏமாற்றுவதில்லை!'ஒவ்வொரு மனிதன் உள்ளத்திலும், ஆழத்தில் பதிந்து கிடக்கிறது கயமை' என்கிறார், பெட்ராண்டு ரஸல்; கயமையின் குணம் - அவதுாறு பேசுவதும், அவதுாறு கேட்பதும்! அவதுாறு எளிதில் விலையாகிற சரக்கு; வாங்குவதை விட விற்பது எப்போதும் அதிகம்.- ரொக்க வியாபாரம்; சேர்த்து வைக்கக் கிடங்கு வேண்டாம். - கைக்குக் கை சுலபமாக மாறும்; விலையிலும் ஏறும்; வியாபாரம் ஓயாது நடந்து கொண்டே இருக்கும்!வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் அவதுாறு பிறக்கும். பணம் வரும் வழியில் உண்டாகும்; பதவிக்கும் அப்படியே! ஆயினும், அவதுாறுக்கு முக்கிய வேலை, துர்நடத்தைக் கற்பித்து, ஆண், பெண் இருபாலரின் பெயரை கெடுப்பது தான்.ரூபாய் நாணயத்தைக் கொடுத்தால் தட்டிப் பார்த்து வாங்குவர்; பழியைச் சொன்னால் ஆராய மாட்டார்கள். அதிலும், நல்லவர் மற்றும் எளிய மனிதர்களைப் பற்றி அவதுாறு சொல்வதென்றால் சொல்கிற நாக்கிற்கு ருசி; கேட்கிற காதிற்கு குஷி! வேம்பில் விருப்பம் காக்கைக்கு; பேசுவதில், விருப்பம் கயவர்க்கு! ஒவ்வொரு உள்ளத்திலும் கயமை இருக்கிறது; திடமாக இருந்து, எடுத்து எறிந்தால் தான் அது போகும்!பகை எதிர்த்தால் சண்டையிடலாம்; பழி எதிர்த்தால் போராட முடியாது. பழி நேர் நின்று போராடாது; மறைந்திருந்து தாக்கும். நேர் நின்று அதை உடைப்பது கோடியில் ஒருவருக்குத்தான் முடியும்!- எவ்வளவு அருமையான தத்துவ முத்து...எதிரே இருந்த தோப்பில், குயிலின் கூவல் கேட்டுக் கொண்டிருந்தது... மனத் திரையில் மீண்டும் மீண்டும் அவரது கருத்தோட்டத்தை திரையிட்டுக்கொண்டே இருந்தேன்!அன்றைய வேலை ஒருவழியாக இரவு, 8:00 மணிக்கு முடிந்தது. ஏதோ, 'அசைன்மென்ட்' விஷயமாக வெளியூர் சென்றிருந்தார், லென்ஸ் மாமா. அதனால், 'பீச்' செல்ல வேண்டிய அவசியம் இல்லாததால், மெயில், 'செக்' செய்வோம் என, 'நெட்டில்' புகுந்தேன்.ஒரு, 'சைட்'டில் கிடைத்த தகவல் இது...'எப்படிப்பட்ட ஆண்களை விரும்பு கின்றனர்?' என்று, பெண்களிடம் ஒரு சர்வே எடுக்கப்பட்டதாம்! இளம் வயது பெண்கள் முதல், மிகவும் வயதான பெண்கள் வரை பலரிடம் எடுக்கப்பட்ட இந்த சர்வேயில், வயது கூடக் கூட, பெண்கள் தங்கள் துணையிடம் எதிர்பார்க்கும் விஷயங்களும் மாறுபடுவதாக தெரிய வந்துள்ளதாம். இதோ அந்த சர்வே முடிவுகள்...ஆண் எப்படி இருக்க வேண்டும்?பெண்கள் வயது, 22 ஆக இருக்கும்போது...* அழகாக, கவர்ச்சியாக, பொருளாதார வசதியுடையவராகவும், பெண் சொல்வதை கவனமாக கேட்பவராக இருக்க வேண்டும்* நல்ல வடிவத்துடன் கூடிய உடலமைப்பு* நாகரிக ஆடைகளை அணிய வேண்டும்* ரொமான்டிக் காதலராக இருத்தல் வேண்டும்.பெண்கள் வயது, 32 ஆக இருக்கும் போது...* பார்க்க அழகாக இருக்க வேண்டும். தலையில் கட்டாயமாக முடி இருக்க வேண்டும்* மனைவி காரில் ஏற வரும்போது, கார் கதவை திறந்து விட வேண்டும்* மனைவி உட்கார்வதற்கு வசதியாக நாற்காலிகளை எடுத்து போட வேண்டும்* அடிக்கடி ஓட்டல் செல்ல தேவையான பண வசதி வேண்டும்* அதிகமாக பேசுவதை விட, மனைவி பேசுவதை கவனிக்க வேண்டும்* மனைவி சொல்லும் எல்லா, 'ஜோக்கு'களுக்கும் சும்மாவாவது சிரிக்க வேண்டும்* மளிகை கடை பொருட்கள் அடங்கிய கூடைகளை சுலபமாக சுமக்க வேண்டும்* சமையலை பாராட்ட வேண்டும்* பிறந்த நாட்கள், திருமண நாட்களை ஞாபகம் வைத்திருக்க வேண்டும்* வாரத்திற்கு ஒருமுறை கட்டாயம், 'ரொமான்ஸ்' மூடில் இருக்க வேண்டும்.பெண்கள் வயது, 42 ஆக இருக்கும்போது...* ரொம்பவும் அசிங்கமாக இருக்கக் கூடாது. வழுக்கை தலை ஏற்றுக் கொள்ளப்படும்* மனைவியுடன் எப்போதும் இருக்க வேண்டும்* வேலைகளை நேர்த்தியாக செய்தல் வேண்டும்* ஓட்டலுக்கு எப்போதாவது கூட்டிச் செல்ல வேண்டும்* மனைவி என்ன பேசினாலும், பவ்யமாக கேட்டுக் கொள்ள வேண்டும்* மனைவியின் ஜோக்குகளை ரசிப்பது போல் காட்டிக் கொள்ள வேண்டு்ம்* வீட்டில் கலைந்து கிடக்கும் பர்னிச்சர்களை ஒழுங்கான முறையில் போடக் கூடிய அளவிற்கு உடலில் தெம்பு வேண்டும்* தொப்பை தெரியாமல் சட்டை அணிய வேண்டும்* வாரத்திற்கு ஒருமுறை, 'ஷேவ்' செய்ய வேண்டும்.பெண்கள் வயது, 52 ஆக இருக்கும்போது...* அடிக்கடி காது, மூக்கில் உள்ள தேவையற்ற முடிகளை, 'ட்ரிம்' செய்ய வேண்டும்* பொது இடங்களில் ஏப்பம் விடக் கூடாது* நடுரோட்டில் நின்று, 'சொறிய' கூடாது* அடிக்கடி கடன் வாங்குதல் கூடாது* ஒரே ஜோக்கை திரும்பத் திரும்ப சொல்லுதல் கூடாது* உடைகளுக்கு பொருத்தமான சாக்ஸ் மற்றும் சுத்தமான உள்ளாடைகளை அணிந்து கொள்ள வேண்டும்* இரவு உணவு அருந்தும்போது, 'டிவி' தொடர் நாடகங்கள் பார்ப்பதை ஒத்துக் கொள்ள வேண்டும்* வாரத்தில் ஒரு முறையாவது, 'ஷேவ்' செய்ய வேண்டும்.பெண்கள் வயது, 62 ஆக இருக்கும் போது...* குழந்தைகளை பயமுறுத்தக் கூடாது* கழிப்பறை எங்கிருக்கிறது என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்* அதிகமாக பணத்தை செலவழிக்கக் கூடாது* துாங்கும்போது குறட்டை சத்தம் அதிகமாக கேட்கக் கூடாது* எதற்காக சிரிக்கிறோம் என்பது தெரிந்து, சிரிக்க வேண்டும்* தானே எழுந்து நிற்க கூடிய அளவிற்கு நல்ல உடல் ஆரோக்கியம் வேண்டும்* எப்போதும் சட்டை அணிந்து இருக்க வேண்டும்.* எளிமையான உணவுகளை உட்கொள்ள வேண்டு்ம்* பல்செட்டை கழற்றி வைத்த இடத்தை ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும்* வார விடுமுறை நாள் இது என்பது ஞாபகத்தில் இருக்க வேண்டும்.பெண்கள் வயது, 72 ஆக இருக்கும் போது...* மூச்சு விட வேண்டும்* தினமும் கழிப்பறையை பயன்படுத்த வேண்டும்.- நீங்கள் இதில் எந்த வரிசையில் இருக்கிறீர்கள்... சர்வே முடிவுகளின் படிதான் இருக்கச் சொல்கின்றனரா உங்கள் துணைவியர்?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !