உள்ளூர் செய்திகள்

அந்துமணி பா.கே.ப.,

அந்த அன்பர், திருநெல்வேலி பக்கத்துக்காரர். ஜமீன் பரம்பரை... வெளியூர் எங்கும் சென்று மேல் படிப்பு படிக்காமல், சுற்று வட்டாரத்திலேயே பட்டப்படிப்பு படித்தவர்... சென்னை, அவருக்கு அவ்வளவு அறிமுகம் கிடையாது... இன்னும் சொல்லப் போனால், சென்னை என்றாலே அவருக்கு அலர்ஜி!சென்னை மக்களின் மரியாதையற்ற பேச்சுகளும், அவர்களின் ஏமாற்றும் குணங்களும், டிராபிக்கும், குப்பை புழுதியும், கூவத்தின் நாற்றமும் கண்டு அவருக்கு அலர்ஜி! சொந்த ஊரில் ராஜ போகத்துடனும், ஏக மதிப்பு, மரியாதையுடனும் வாழ்பவருக்கு, சென்னை பிடிக்கத் தான் பிடிக்காது!காடுகளுக்குச் சென்று வேட்டையாடுவதில் பிரியம் உள்ளவர் என்பதால், அரண்மனை போன்ற இவர் இல்லத்தில் ரக, ரகமான துப்பாக்கிகள் ஏராளமாக இருக்கும்.நின்று கொண்டிருக்கும் மிருகங்களை, மரத்தில் அமர்ந்திருக்கும் விலங்குகளை, பறவைகளை இவர் வேட்டையாட மாட்டார்... அவற்றை ஓட விட்டு, பறக்க விட்டு ஒரே குண்டில் சாய்த்து விடுவார்!நம் நாட்டில் வேட்டையாடுவது தடை செய்யப்பட்ட பின், ஐரோப்பிய நாடனா, பிரான்ஸ் நாட்டுக்கு சென்று வேட்டையாடுகிறார்... அதுவும், பறக்கும் ஹெலிகாப்டரில் இருந்து... அந்த நாட்டில் வேட்டை சட்டப்பூர்வமானதாம்!'கம்மிங் பேக் டு த பாயின்ட்...'கடந்த வாரம், தம் குடும்ப நண்பர் இல்ல விசேஷம் ஒன்றுக்காக சென்னை வந்திருந்தார், அந்த அன்பர். மாலையில், என்னையும், லென்ஸ் மாமாவையும் அழைத்திருந்தார். படகு போன்ற அவரது வெளிநாட்டுக் காரில் கடற்கரைக்கு அழைத்துச் சென்றார்.சாரதி ஒருவர், வண்டியைச் செலுத்த, கடற்கரை உள் சாலையில் சென்ற வண்டியை, ஆள் அரவமும், வெளிச்சமும் அதிகமில்லாத, 'ஐஸ் ஹவுசின்' எதிரே, 'பார்க்' செய்யச் சொன்னார்.பின், தன் டிரைவரிடம், 'தம்பி... ஆகட்டும்...' என்றார். என்னவென்று புரியாமல், 'திருதிரு'வென நான் விழிக்க, கார், 'டிக்கி'யில் இருந்து குட்டி, 'பிரிஜ்' ஒன்றை காரினுள்ளே எடுத்து வைத்தார், டிரைவர்.அதைத் திறந்து பார்த்த ஜமீன்தாருக்கு, 'சுருக்' என, கோபம் வந்தது. டிரைவரைக் கடிந்து, 'ஏம்ப்பா... ஐஸ் ஊத்தி வைக்க வேண்டாமா?' எனக் கேட்க, டிரைவர் தலை சொறிந்தார்.'தொலையட்டும்... மினரல் வாட்டராவது வச்சிருக்கியா?' எனக் கேட்க, 'இருக்குதுங்க ஐயா...' என்றபடியே அதை எடுத்து வந்தார், டிரைவர்.காரின் முன் சீட்டில் இருந்த பொத்தானை அவர் அழுத்த, 'டிரே' ஒன்று தொப்பென விரிந்தது! அவற்றில் கண்ணாடி கோப்பைகள் வைக்கப்பட, ஜானிவாக்கர், 'சரக்கு' ஊற்றப்பட்டது!லென்ஸ் மாமாவும், ஜமீன்தாரும் ஆளுக்கு ஒரு மடக்கு, 'சியேர்ஸ்' சொல்லி உள்ளே விட, 'இதுவே, 1840களாக இருந்தால், பின்புறம் ஐஸ் ஹவுஸ் போய், உங்களுக்கு ஐஸ் வாங்கி வந்திருப்பேன்...' எனக் கூறினேன்...'அது என்ன மணி... ஐஸ் ஹவுசுக்கும், ஐசுக்கும் நிஜமாகவே தொடர்பு இருந்ததா... எதற்காக இந்த கட்டடத்திற்கு ஐஸ் ஹவுஸ்ன்னு பேர் வந்திச்சு?' எனக் கேட்டார், ஜமீன்தார்!கடகடவெனக் கூற ஆரம்பித்தேன்...'கிழக்கிந்திய கம்பெனியை இங்கே நடத்தி வந்த ஆங்கிலேயர், சென்னையில் கோட்டை அமைத்து, அதைச் சுற்றி வாழ ஆரம்பித்தனர். குளுமையான பிரதேசத்தில் இருந்து, இங்கு வந்து குடியேறியவர்களை, சென்னை வெப்பம் வாட்டி வதக்கியது.'குளிர்ந்த நீர் குடிக்கவும், மாலை நேர விருந்துகளில் மது கிண்ணங்களில் மிதக்க விடவும், அவர்களுக்கு ஐஸ் கட்டிகள் தேவைப்பட்டன!'லண்டனுக்கு துாது விட்டனர்; கப்பல்களில் பெரிய பெரிய ஐஸ் பார்களை அனுப்பி வைக்க, லண்டன் நிர்வாகம் ஒப்புக்கொண்டது! கப்பலில் வரும் ஐஸ் பார்களை எங்கே சேமித்து வைப்பது?'மெரினா கடற்கரையில், கடலைப் பார்த்து, 1840ல் கட்டடம் கட்டினர். ஜன்னல்களோ, வேறு கதவுகளோ இல்லாமல், ஒரே மெயின் கேட்டுடன், வட்ட வடிவமாக, உயரமாக கட்டடம் கட்டினர். ஐஸ் சேமித்து வைக்க இந்த இடம் பயன்படுத்தப்பட்டதால் இதன் பெயர், 'ஐஸ் ஹவுஸ்' ஆனது.'கப்பல்களில் வரும் ஐஸ் கட்டிகளை உரிய முறையில், மரத்துாள் பயன்படுத்தி, ஐஸ் உருகாமல் பாதுகாத்தனர்.'தினமும் காலை, 8:00 மணிக்கு இல்லக் காவலாளி, துப்பாக்கி மூலம் குண்டு வெடிப்பார். அதன்பின், கிழக்கிந்தியக் கம்பெனியிடம் அனுமதி பெற்றவர்கள், ஐஸ் கட்டிகளை வாங்கிச் செல்லலாம்! காலை, 8:00 மணி முதல், இரவு, 7:00 வரை விற்பனை நடக்கும்!'நாளா வட்டத்தில், ஐஸ் கட்டிகள் கப்பல் மூலம் தொடர்ச்சியாகக் கிடைப்பதில் சில சிக்கல்கள் ஏற்பட்டன. இதனால், சென்னையிலேயே ஐஸ் தயாரிக்க முடிவு செய்தனர். லண்டன் நிர்வாக அனுமதி கிடைத்ததும், வேறோர் இடத்தில், 'மெட்ராஸ் ஐஸ் கம்பெனி' உருவானது!'காலியாகிப் போன, 'ஐஸ் ஹவுசை' அப்போது, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஆங்கிலேயர், காஸில் கர்னான் என்பவர், கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து விலைக்கு வாங்கி, அங்கேயே குடியேறினார்.'சில காலம் சென்ற பின், ஐஸ் ஹவுசை, உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த, பிலிகிரி ஐயங்காருக்கு விற்று விட்டார். பின்னர், சுவாமி விவேகானந்தர், பிலிகிரியின் விருந்தினராக ஒன்பது நாட்கள், ஐஸ் ஹவுசில் தங்கினார்.'சிறிது காலம், இது, லேடி வெலிங்டன் கல்லுாரி மாணவியர் விடுதியாக இருந்தது. தற்போது, விவேகானந்தர் நினைவுப் பொருட்கள், புகைப்படங்களை வைத்து, அவரது நினைவு இல்லமாக திகழ்கிறது!'கடந்த, 1964ல், 'ஐஸ் ஹவுஸ்' என்ற பெயரை, 'விவேகானந்தர் இல்லம்' என, மாற்றிய பின்னரும், திருவல்லிக்கேணி காவல் நிலையத்தை இன்றும், 'ஐஸ் ஹவுஸ் காவல் நிலையம்' என்றும், இந்தக் கட்டடத்தை, 'ஐஸ் ஹவுஸ்' என்றுமே அழைத்து வருகின்றனர்...' எனக் கூறி, நீண்ட மூச்சு விட்டேன்!ஐமீன்தாரும், லென்ஸ் மாமாவும், தலைக்கு நாலு லார்ஜும், 'சியர் பிஷ்' என அழைக்கப்படும், சீலா மீன் வறுவல் நாலு பிளேட்டும், 'குளோஸ்' செய்து இருந்தனர்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !