உள்ளூர் செய்திகள்

அந்துமணி பா.கே.ப.,

லண்டனில் வசிக்கும் டாக்டர் நண்பர், சமீபத்தில் சென்னைக்கு வந்திருந்தார். அவரை, மாலை, 'பீச் மீட்டிங்'குக்கு வர அழைப்பு விடுத்தார், லென்ஸ் மாமா.'வேலை முடிச்சுட்டு, சீக்கிரமா கிளம்புப்பா...' என்று என்னை நச்சரித்தார், மாமா.அவரது நச்சரிப்பு தாங்காமல், மாலை, அவருடன் கிளம்பினேன். அந்நேரத்தில் அலுவலகம் வந்த குப்பண்ணா, எங்களுடன் ஒட்டிக் கொண்டார்.டாக்டர் நண்பர் தங்கியிருந்த ஓட்டலுக்கு சென்று, அவரையும், 'பிக்-அப்' செய்து, பீச்சுக்கு கிளம்பினோம்.வழக்கமாக கூடும் இடத்தில், காரை நிறுத்தினோம்.சென்னைக்கு வந்தால், வழக்கமாக, ஸ்காட்லாந்து நாட்டு உயர்ரக, 'ஜெமிசன்' சரக்கை எடுத்து வருவார், டாக்டர் நண்பர். இந்த முறை அது, 'மிஸ்சிங்!' அதற்கு பதிலாக, உயர்ரக சுருட்டு பெட்டி ஒன்றை எடுத்து வந்தார்.'இது என்னப்பா புதுசா... நம்ம திருச்சி மாவட்டம், உறையூரில் தயாரிக்கப்பட்டு, இங்கிலாந்துக்கு ஏற்றுமதியாவது தானே...' என்று, ஏமாற்றத்துடன் அலுத்து கொண்ட லென்ஸ் மாமா, ஒரு சுருட்டை எடுத்து பற்ற வைத்தார்.'அடுத்த மாசம், ஒரு, 'மெடிக்கல் கான்பிரன்ஸ்'சுக்காக, கியூபா போறேன். அமெரிக்காவுக்கு சமமா வளர்ச்சியடைந்துள்ள அந்நாட்டுக்கு, இப்பத்தான் முதன்முதலா போக போறேன்...' என்று, டாக்டர் நண்பர் கூற, உடனே, கியூபா வரலாறை கூற ஆரம்பித்து விட்டார், குப்பண்ணா.'அமெரிக்காவை அடுத்துள்ள சிறிய நாடான கியூபா, ஒரு தீவு. அதன் முன்னாள் அதிபர், பிடல் காஸ்ட்ரோ, எப்போதும் சுருட்டு பிடித்துக் கொண்டிருப்பார். உலகில் மிக உயர்ந்த ரக புகையிலை, கியூபாவில் தான் விளைகிறது. இங்கிருந்து தான் இது, பிற நாடுகளுக்குப் பரவியது. 'கப்பல் மூலம், அமெரிக்காவை அடைந்தார், கொலம்பஸ். அந்த புது நாட்டை அவர், 'இந்தியா' என்றே குறிப்பிட்டார். இன்றும் அவர்கள், செவ்விந்தியர் என்றே, உலகினரால் அழைக்கப்படுகின்றனர்.'இன்று, சந்திர மண்டலத்திலிருந்து ௦ளபறக்கும் தட்டு எனப்படும், விண்வெளி கப்பல் வந்து இறங்கினால், நமக்கெல்லாம் எவ்வளவு ஆச்சரியமாக இருக்குமோ... அப்படித்தான், 'குவானா ஹானி' தீவு மக்களுக்கு. இந்தத் தீவில் வசித்தவர்களால், இப்படி தான் அழைக்கப்பட்டது.'சற்றும் எதிர்பாராத விதமாக, அமெரிக்க நிலத்தைத் தொட்ட, கொலம்பசின் மூன்று பெரும் கப்பல்களும், அவர்களுக்கு தென்பட, பயமும், பிரமிப்பும் அடைந்தவர்களாக, பாதுகாப்பை தேடி, காட்டுப் பகுதிக்குள் ஓடி விட்டனர்.'மரங்களின் பின்னால் ஒளிந்து, அவர்கள் பார்த்த போது, மரக்கலங்களில் வந்திறங்கியவர்கள், மனிதர்களாகவே தெரிந்ததால், அருகில் வந்தனர். புதிய மனிதர்களை, நண்பர்களாக்கிக் கொள்ள, நிறைய அன்பளிப்பு பொருட்களைக் கொடுத்தார், கொலம்பஸ். 'அந்த ஆதிவாசிகளை, முதன்முதலில் பார்த்த வெள்ளைக்காரர்கள், கொலம்பஸ் கோஷ்டியினர் தான். ஆடைகள் இல்லாததாலும், அவற்றின் அவசியத்தை உணராததாலும், அந்த, 'இந்தியர்கள்' நிர்வாணமாகவே நடமாடிக் கொண்டிருந்தனர். 'ஆனால், கொலம்பசை வியக்கச் செய்தது, செம்பு கலக்காத, அசல் தங்கத்தாலான நகைகளை, அவர்கள், தங்கள் மூக்கில் அணிந்திருந்ததைக் கண்டு தான். அருகில் உள்ள தீவு ஒன்றிலிருந்து, தங்கத்தை எடுத்து வந்ததாக சொன்னதும், அவர்களில் ஆறு பேரை வழிகாட்டியாக அழைத்துக் கொண்டு அந்த தீவைத் தேடி, கப்பலை செலுத்தினார், கொலம்பஸ். 'கோல்பா' என்ற பெரிய தீவை அடைந்தனர்; அதுவே, இன்றைய, 'கியூபா!''அங்கு, ஒரு கையில், சிறிய கொள்ளிக் கட்டையையும், மற்றொரு கையில், செடி ஒன்றையும் பிடித்தபடி, தங்கள் கிராமங்களுக்குச் சென்று கொண்டிருந்தவர்களை சந்தித்தனர். அந்தச் செடி தான் புகையிலை. ஆதிவாசிகள், அதன் இலையை சுருட்டி, சுருட்டாக பாவித்து, பிடித்துக் கொண்டிருந்தனர்.'அந்த இலைக்கு பெயர், 'டொபெகோஸ்' என்றனர். அதுவே இன்று, 'டுபாகோ' என, ஆங்கிலமாகி விட்டது. 'ஓய்வெடுத்துக் கொள்ள உட்காரும் ஒவ்வொரு சமயத்திலும், மரக்கட்டையின் எரிந்த நெருப்பால், அதை பற்ற வைத்துக் கொள்ளும் ஒருவர், மூன்று இழுப்புகள் இழுப்பான். 'இவ்வாறு, ஒவ்வொருவரும் புகை பிடித்த பின், தங்கள் நடையைக் கட்டுவர். அடுத்தபடி அவர்கள் இளைப்பாறப் போகும் இடம் வரை, கொள்ளிக்கட்டையின் நெருப்பு அணையாமல் கனன்று கொண்டிருக்கும்படி, பார்த்துக் கொள்ள வேண்டியது, அவர்களுடன் வரும் சின்னப் பையன்களின் பொறுப்பு...' என, முடித்தார், குப்பண்ணா.உடனே, அருகில் இருந்த லென்ஸ் மாமா, 'நிர்வாணமாக இருந்த ஆதிவாசிக்கு, உடை கொடுத்து, பதிலுக்கு, புகையிலைப் பழக்கத்தைக் கொண்டாந்து இங்கே பரப்பிட்டான்; நல்லதைக் குடுத்துட்டு, தீயதை கொண்டாந்துட்டான்...' என்றார். சொல்லும் போது, அவர் வாயிலிருந்து வந்த சுருட்டு நெடி, எனக்கு வயிற்றைக் குமட்டியது.வாரம் ஒரு முறை தான் குளிப்பார், ஈ.வெ.ரா., சில சமயம், 10 - 15 நாட்கள் வரை கூட, குளிக்க மாட்டார். அவர் மனைவி மணியம்மை, பிடிவாதமாக, வெந்நீரில் துணியை நனைத்து, முகம், கை, கால்களை துடைத்து விடுவார். அது தான் குளியல்.குப்பண்ணாவிடம் இதுபற்றி சொல்லிக் கொண்டிருந்த போது, குளியலை பற்றி பெரிய பிரசங்கமே செய்து விட்டார். அவர் சொன்னது:ஐரோப்பிய நாடான, ஸ்பெயின் தேசத்து புகழ்பெற்ற அரசி, இசபெல்லா, தன் வாழ்நாளில் இரண்டே தடவை தான் குளித்ததாக சொல்லப்படுகிறது. அதாவது, பிறந்தவுடன் ஒருமுறை; அதன்பின் திருமணத்தின் போது ஒருமுறை.பிரான்ஸ் நாட்டு மன்னன், 13ம் லுாயி, தன் வாழ்நாளில் ஒரே ஒருமுறை தான் குளித்தானாம். அதற்காக, வாழ்நாள் முழுவதும் வருந்தினானாம். ஏனெனில், அவனுக்கு நரம்பு தளர்ச்சி நோய் இருந்தது. அது, அவன் குளித்ததற்கு பிறகு தான் ஏற்பட்டதாக நம்பினான். 'குளிப்பது உடல் நலனுக்கு கேடு...' என்று கூறி, நாடு முழுவதும் மக்கள் குளிப்பதற்கு தடை உத்தரவு போட்டான்.எகிப்தியர்கள், 'குளிப்பது, பாவத்தை போக்கும்...' என்று நம்பினர். அந்நாட்டு மத போதகர்கள், குளிப்பதை ஒரு பிரசாரமாகவே செய்தனர்.விக்டோரியா ராணி காலத்தில், இங்கிலாந்தில், குளிப்பது எப்போதாவது தான். குளிர் பிரதேசம் என்பதால், அன்றாட குளியலும் தேவையில்லாமல் இருந்தது. நெப்போலியன் காலத்திலும், குளிப்பதென்பது, ஆடம்பரம் என்று கருதப்பட்டது. வசதி உள்ளவர்களால் மட்டுமே, தினசரி குளிக்க முடிந்தது. தன் காதல் பரிசாக, காதலி, ஜோசபைன்னுக்கு ஒரு, 'பாத்-டப்'பை தான் கொடுத்தான், நெப்போலியன்.ஐரோப்பிய துறவிகள் பலரும், குளிப்பதை விரும்பவில்லை. செயின்ட் பெனடிக்ட், 'குளிப்பதே பாவம்...' என்றார்.ரோமானியர்கள், குளிப்பதை ஒரு விழாவாகவே கொண்டாடினர். ஊருக்கு ஊர் நிறைய பெரிய குளங்களை வெட்டினர். 2,000 பேர் வரை ஒன்றாக சேர்ந்து நீராடி மகிழ்வர்.'ஸ்ட்ராபெரி' மற்றும் 'ராஸ்பெரி' பழச் சாறுகளையும், ஆலிவ் எண்ணெயையும் நீரில் கலந்து குளிப்பாள், அழகி கிளியோபாட்ரா. பின், சிறிது நேரம், 'மசாஜ்' செய்து, மறுபடியும் வாசனை திரவியங்களில் குளிப்பாளாம்.கழுதைப்பாலும், ஆலிவ் எண்ணெயும் கலந்த கலவையில், குளிப்பாள், நீரோ மன்னனின் மனைவி, பாப்பியா.அரண்மனை உள்ளே உள்ள தடாகத்தில், ஐஸ் கட்டிகள் நிறைய மிதக்க, 'ஜில்'லென்ற குளிர்ந்த நீரில் தான் குளிப்பார், முகலாய மன்னர், அக்பர்.நம்மூர் சீதோஷ்ண நிலைக்கு, குளிக்காமலும் இருக்க முடியாது; தண்ணீர் பஞ்சம் காரணமாக, 'காக்காய் குளியல்' தான் நமக்கெல்லாம் சாத்தியம் என்கிறீர்களா... அதுவும் சரி தான்.ஒரு சர்தார்ஜியின் மகனை கடத்திச் சென்றார், இன்னொரு சர்தார்ஜி.'உன் மகனை நான் கடத்தி இருக்கிறேன். அவன் திரும்ப கிடைக்க வேண்டுமென்றால், நாளை காலை, 10 ஆயிரம் ரூபாயை, பூங்காவின் வடக்கு மூலையில் உள்ள புளிய மரத்தின் பொந்தில் வைக்கவும். இப்படிக்கு - சர்தார்ஜி' என்று, ஒரு காகிதத்தில் எழுதினார். அதை, அந்த பையனின் சட்டையில் குத்தி, அவன் வீட்டுக்கே அவனை அனுப்பி வைத்தார்.மறுநாள் காலை-குறிப்பிட்ட, பூங்காவிற்கு போய், புளிய மரத்தின் பொந்தில் பார்த்தார். கட்டி வைக்கப்பட்டிருந்தது, 10 ஆயிரம் ரூபாய். அத்துடன் இருந்த காகிதத்தில், 'சர்தார்ஜிக்கு சர்தார்ஜியே இப்படி செய்யலாமா...' என்று, கண்டனம் எழுதப்பட்டிருந்தது. எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !