உள்ளூர் செய்திகள்

அந்துமணி பா.கே.ப.,

பா-கேஅன்று, குப்பண்ணாவுடன் பேசிக் கொண்டிருந்தேன், என்னை, 'பீச்'சுக்கு அழைத்து போக, வந்திருந்தார், லென்ஸ் மாமா.அச்சமயம், வாசகி ஒருவர், என்னை பார்க்க வந்தார். அவர், லென்ஸ் மாமாவுக்கும் அறிமுகமானவர் தான். மார்ச் 8ம் தேதி, தங்கள் கல்லுாரியில் நடக்க இருக்கும், மகளிர் தின கொண்டாட்டத்துக்கு, என்னை சிறப்பு விருந்தினராக அழைக்க, வந்திருப்பதாக கூறினார்.இதைக் கேட்டதும், லென்ஸ் மாமா, 'ஏம்மா... இந்த மாதிரி நிகழ்ச்சிக்கெல்லாம், மணி வரமாட்டானே... நான் வேணா வரட்டுமா...' என்றார். இடையில் புகுந்த குப்பண்ணா, வாசகியிடம், 'மகளிர் தினம், எதுக்காக கொண்டாட ஆரம்பிச்சாங்க தெரியுமா...' என்றார்.'ஓ... தெரியுமே. ஐரோப்பிய நாடுகளில், தொழிற்சாலைகளில் பணிபுரிந்த பெண்கள், ஒரு நாளைக்கு, 18 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்ற, நடைமுறை இருந்தது. மேலும், அவர்களுக்கு வழங்கப்பட்ட சம்பளமும் குறைவு. இதை எதிர்த்து, 'ஆண்களுக்கு சமமாக சம்பளம் கொடுக்க வேண்டும்; வேலை நேரத்தையும் குறைக்க வேண்டும்...' என்று போராடினர். 'இவர்களின் போராட்டம் வெற்றி பெற்ற தினம் தான், மார்ச் 8. அன்றிலிருந்து தான், ஒவ்வொரு ஆண்டும், மார்ச் 8ம் தேதியை, உலக மகளிர் தினமாக கொண்டாடுகின்றனர்...' என்றார், வாசகி.'பேஷ்... பேஷ்... சரியா சொன்ன... இதில் இன்னொரு விஷயமும் இருக்கு. அதாவது, அதுவரை, பெண்களுக்கு ஓட்டுரிமை இல்லாமல் இருந்தது. இந்த போராட்டத்துக்கு பின், அவர்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட்டது.'இந்த ஆண்டு, மகளிர் தினத்தை, பெண் குழந்தைகள் திருமணத்தை தடுக்கும் நாளாக ஏன் கொண்டாடக் கூடாது என்று, ஒரு கட்டுரை வெளியாகி இருக்கிறது...' என்று, கையில் வைத்திருந்த அந்த ஆங்கில பத்திரிகையை, பிரித்து காட்டினார், குப்பண்ணா.இதைக் கேட்டு கடுப்பான, லென்ஸ் மாமா, 'ஓய்... பெரிசு... எப்ப பாரும், பழங்கதையே பேசிட்டு... மார்ச் 8ம் தேதி, பொண்ணுங்க, ஜாலியா, 'என்ஜாய்' செய்யட்டுமே...' என்றார்.ஆனால், வாசகிக்கோ, குப்பண்ணா சொல்வதை கேட்க, ஆர்வம் ஏற்பட்டு விட்டது. அதுபற்றி மேலும் கூறும்படி கேட்டார்.குப்பண்ணா ஆரம்பித்தார்:இந்தியாவில், பெண் குழந்தைகள் திருமண தடை சட்டம், 2006 முதல் அமலில் உள்ளது. இதை மீறுவோருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும், அச்சட்டம் கூறுகிறது.ஆனாலும், தமிழகம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில், இன்றும், பெண் குழந்தைகள் திருமணம் நடந்து வருகிறது. என்.எப்.எச்.எஸ்., எனப்படும், 'தேசிய குடும்ப ஆரோக்கிய சர்வே' என்ற அமைப்பு, 2015 - 16ல், ஒரு கணக்கெடுப்பு எடுத்தது.அதில், '20 - 24 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு நடந்த திருமணங்களில், 26.8 சதவீதம் பேர், 18 வயதிற்கு உட்பட்டவர்கள் என்பது தெரிய வந்தது. பொய்யாக, 20 வயது என்று கூறி, சட்டத்தை மீறி, திருமணம் செய்துள்ளனர்.'மேலும், 18 வயதிற்கு உட்பட்ட பெண்கள், திருமணம் ஆன உடனே, தாய்மை அடைந்துள்ளனர். இவர்களில், 25 சதவீதம் பேர், மகப்பேறின் போது, மரணமடைந்துள்ளனர்...' என்றும் கூறுகிறது. இதெல்லாவற்றையும், சட்டத்தை காப்பவர்களாக தங்களை காட்டிக்கொள்ளும் அரசும், அரசு அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை.இதைத் தடுக்க, நாடெங்கிலும் உள்ள மாதர் சங்கங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள், வரும் மகளிர் தினத்தை, பெண் குழந்தைகள் திருமண எதிர்ப்பு தினமாக அனுசரிக்க வேண்டும். அத்தகைய திருமணங்கள் நடப்பதை அறிந்தால், காவல் துறை உதவியுடன், அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.- இப்படி, அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று முடித்தார், குப்பண்ணா.விழாவில் பேச, நிறைய குறிப்புகள் கிடைத்த மகிழ்ச்சியில், விடைபெற்றார், அந்த வாசகி.எனக்கும் எழுத மேட்டர் கிடைத்தது.லென்ஸ் மாமா தான், 'பீச்'சுக்கு போக முடியவில்லையே என்ற எரிச்சலில், குப்பண்ணாவை முறைத்தபடி, கிளம்பினார்.பஇளம் பெண்களுக்கு மட்டுமல்லாமல், முதிய பெண்மணிகளுக்கும், வாழ்க்கை போராட்டமாக தான் இருக்கிறது என்பது, முதியோர் இல்லத்தில் தங்கியிருக்கும், வாசகி ஒருவரது கடிதத்தை படித்த போது, உணர முடிந்தது.வாசகியின் கடிதம் இதோ:நான், முதியோர் இல்லத்தில் தங்கியுள்ளேன். எனக்கு குழந்தைகள் இல்லை. சமீபத்தில், என் கணவர் மாரடைப்பால் இறந்து விட்டார். உறவினர்கள் யாரும் என்னை வைத்து பராமரிக்க விரும்பவில்லை. எனக்கு வயது, 70. நீரிழிவு, ரத்தக்கொதிப்பு, சர்க்கரை மற்றும் நரம்பு தளர்ச்சி போன்ற நோய்கள் உள்ளன.முதியோர் இல்லம் வந்த பின் தான், இங்கு நடக்கும் பகல் கொள்ளை தெரிய வருகிறது. தனி நபர் பராமரிப்புக்கு, 15 ஆயிரம் ரூபாய். தனி நபர் மின் கட்டணம், நுாலக பராமரிப்பு, கோவில் பராமரிப்பு, பொது மின் கட்டணம் மற்றும் குழாய்கள் பழுது பார்க்கும் செலவு என, எல்லாமே எங்களிடமே வசூலிக்கின்றனர்.சாப்பாடும், சொல்லிக் கொள்ளும்படி இல்லை. மாதத்துக்கு, 18 ஆயிரத்தில் இருந்து, 20 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. மின் கட்டணம், யூனிட் ஒன்றுக்கு, 10 ரூபாய் வாங்குகின்றனர்.முதியோர் இல்லங்களில் தங்க வேண்டுமானால், பணக்காரர்களாக இருக்க வேண்டும். என்னைப் போல், நடுத்தர மக்கள் இருக்க முடியாது. இதுதவிர, முன்பணம் என்று, ஒன்பது லட்ச ரூபாய் வாங்குகின்றனர்; அதற்கு வட்டி கிடையாது.கணவரின் ஓய்வுக்கு பின் கிடைத்த பணத்தை, வங்கியில், 'டிபாசிட்' செய்து, வட்டியை வாங்கி செலவு செய்கிறேன். வங்கியிலும், வட்டி விகிதத்தை குறைத்து விட்டனர். எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை. தற்கொலை செய்து கொள்ளலாமா என தோன்றுகிறது.நடுத்தரமாக உள்ள, ஏதேனும் முதியோர் இல்லத்தில் என்னை சேர்த்திட உதவுங்கள். நான், இந்த இல்லத்துக்கு வந்து விட்டதாலும், வயதாகி விட்டதாலும், வேறு ஒரு முதியோர் இல்லத்தை தேட முடியவில்லை. என்னை இறுதி வரை வைத்து காப்பாற்றும், நல்ல இல்லமாக இருக்க வேண்டும். இம்முதியோர் இல்லத்தில் சேர்ந்து ஏமாந்தது போல, ஏமாந்து விடுவோமோ என்ற பயமும் இருக்கிறது.பொங்கல், மாசி மகம், பங்குனி உத்திரம், ஆண்டு பிறப்பு மற்றும் ஸ்ரீராம நவமி என்று, ஒவ்வொரு விசேஷமும் இந்த இல்லத்தில் உள்ள கோவிலில் விமரிசையாக கொண்டாடுகின்றனர். எங்களை போன்ற ஆதரவற்றவரிடமிருந்து, பணத்தை கொள்ளையடித்து, இந்த விசேஷங்களை விமரிசையாக கொண்டாட வேண்டுமா... ஆண்டவன் இதை எப்படி ஏற்றுக் கொள்வான்...இந்த பகல் கொள்ளையை பற்றி, அரசுக்கு, தாங்கள் தெரியப்படுத்துங்கள்.- இப்படி எழுதியுள்ளார். விடிவு காலம் பிறக்கப் போவது எப்போது?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !