உள்ளூர் செய்திகள்

அந்துமணி பா.கே.ப.,

கேசிவகங்கை மாவட்டம், ஜோ.ஜெயக்குமார் என்பவர் சொல்லக் கேட்டது:ஒருமுறை, படப்பிடிப்பிற்கு, தன் காரில் சென்று கொண்டிருந்தார், எம்.ஜி.ஆர்., அப்போது, ஒரு பள்ளிச் சிறுவன், செருப்பில்லாமல் வெயிலில் நடந்து போவதை பார்த்தார். கார் டிரைவரின் தோளில் தட்டி, உடனே நிறுத்த சொன்னார்.அந்த சிறுவனின் வீட்டு முகவரியையும், கால் அளவையும் குறித்து வரச்சொன்னார்.டிரைவரும் வாங்கி வர, தயாரிப்பாளர் ஒருவரிடம், முகவரியை கொடுத்து, 'உடனே, புதிய தோல் செருப்பை தைத்து கொடுத்து வாருங்கள். அதன்பின் தான், 'ஷூட்டிங்'கில் கலந்து கொள்வேன்...' என்று, உறுதியாக சொல்லி விட்டார், எம்.ஜி.ஆர்.,தயாரிப்பாளரும் சிரமேற்கொண்டு, அதை செய்து, சிறுவனின் தந்தையிடமிருந்து, சாட்சிக்கு கையெழுத்தும் வாங்கி வந்தார்.அதற்குள், மதியம் ஆகி விட்டது. மதிய உணவு சாப்பிடாமலேயே, படப்பிடிப்புக்கு தயாராகி விட்டார், எம்.ஜி.ஆர்.,அந்த சிறுவன் தான், பின்னாளில், 'பேட்டா' என்ற மிகப்பெரிய நிறுவனத்தின், தென் மாநில, 'டீலர்' ஆனார்.எம்.ஜி.ஆர்., இறக்கும் வரை, அவருக்கு செருப்பு வினியோகம் செய்து, அவர் வற்புறுத்தி கொடுத்த தொகையை வாங்கிக் கொண்டார்.பின்னாளில் அவர், எம்.ஜி.ஆரை வைத்து, ஒரு படம் எடுக்க விரும்பினார்.எம்.ஜி.ஆரை அணுகியபோது, 'ஒரு ஜோடி செருப்பை கொடுத்து, பட வாய்ப்பை பெற்றவன் என்ற இழுக்கு, எனக்கு வேண்டாம்...' என்று சொல்லி, அன்பாக மறுத்து விட்டார்.இன்று, அந்த பையனின் குடும்பத்தினர் தான், உலக அளவில், 'ஷை பப்பீஸ்' என்ற, ஷூ கம்பெனியை நடத்தி வருகின்றனர்.'கடல்' நாகராஜன் என்ற வாசகர் எழுதிய கடிதம்:அந்துமணியார் அவர்களுக்கு —எங்கள் உள்ளம் கவர்ந்த, 'தினமலர் - வாரமலர்' இதழின் மக்கள் நாயகன், திருவாளர் அந்துமணி அவர்களுக்கு, 77 வயதான, நீண்ட நாள் வாசகரான, கடலுார், நாகராஜனின் கனிவான வணக்கம்.நலம். நலமறிய ஆவல்.'வாரமலர்' இதழின், 38 ஆண்டு சேவை, முழுமையான, சிறப்பான சாதனைகளுக்கு, எங்கள் இனிய வாழ்த்துக்கள்; பாராட்டுக்கள்.'தினமலர் - வாரமலர்' இதழின், முதல் குறுக்கெழுத்து போட்டியில், 15 ஆயிரத்து, 430 வாசகர்களில், ஒரே ஒரு அதிர்ஷ்டசாலி வாசகராக, நடிகை ஊர்வசியால் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஜன., 30, 1984ல் (ஆம்... 36 ஆண்டுகளுக்கு முன்) 100 ரூபாய் பரிசு பெற்றவன், நான். ஆனால், இன்று, 'வாரமலர்' இதழோ, பல ஆயிரம் ரூபாய்களை, பல போட்டிகளின் மூலம் வாரம்தோறும் வாரி வழங்கி வருகிறது.திருவாளர் அந்துமணியை, 1991ம் ஆண்டு முதல், பலமுறை, கடிதம் மூலமும், நேரிலும், சென்னை அலுவலகம் வந்து காத்திருந்தும், சந்தித்து பேச முடியவில்லை. பல கடிதங்கள் மட்டும், அந்துமணியாரிடமிருந்து எனக்கு வந்தது தான் மிச்சம். அவைகளின் நகல்கள் இத்துடன், அந்துமணியாரின் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளது.எனவே, 'வாரமலர்' இதழின், முதல் பரிசு பெற்ற வாசகர், 36 ஆண்டு கால, மூத்த வாசகர் என்ற முறையில், அந்துமணியாரை சந்திக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை. பா.கே.ப., பகுதியில், அந்துமணியாரின் பக்கத்தில், என் புகைப்படத்தை வெளியிட்டு, கவுரவிக்கக் கூடாதா... இந்த மூத்த வாசகரின் ஆவல், விரைவில் நிறைவேறும் என்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்.— இப்படிக்கு, 'கடல்' நாகராஜன்.ஷோபனாதாசன், நாட்டரசன் கோட்டையிலிருந்து எழுதிய கடிதம்:நம்மை பற்றிய சில உளவியல் உண்மைகள் -* மற்றவரிடம் பேசும்போது, கைகளை கட்டிக் கொள்ளாதீர். அது, உங்களை பலவீனமானவராக காட்டும்* மற்றவரின் கண்களை, நேராக பார்த்து பேசவும். அது, உங்களை நேர்மையானவராக காட்டும்* மிக தொலைவில் இருந்து, மற்றவரோடு குரலை உயர்த்தி பேசாதீர்* நேராக அமர்ந்து அல்லது நின்று பேசவும். கூன் போட்டு அமர்ந்தால், மற்றவர் உங்களை சோம்பேறி என, நினைக்க கூடும்* பேசும்போது, முடியை கோதிக் கொள்வதையோ அல்லது அடிக்கடி உடைகளை சரிபடுத்திக் கொள்வதையோ தவிர்க்கவும். அது, உங்களை, நம்பிக்கை அற்றவராக காட்டும்* நகத்தையோ, பென்சிலையோ, பேனா முனையையோ கடிப்பதை தவிர்க்கவும். அது, உங்களை, பயந்தவராக காட்டக் கூடும்* நம்பிக்கையோடு கூடிய புன்னகை, நீங்கள் சொல்வதை கேட்க விரும்பாதவரையும் கேட்க வைக்கும்* குழந்தைகளோடு பேசும்போது, அருகில் அமர்ந்து பரிவோடு பேசவும். உங்கள் பேச்சை விளக்குவதற்கு கைகளை பயன்படுத்தவும். சைகைகள், நீங்கள் சொல்வதை மேலும் விவரிக்கும்.தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்...* நீங்கள் அழகு என்பதை முதலில் நம்புங்கள். நிறத்திற்கும், அழகிற்கும் சம்பந்தமில்லை என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்* 'பிறர் சொன்னாலும், ரசித்தாலும் தான், நான் அழகு...' என்று நினைப்பதை நிறுத்துங்கள்; உங்களை நீங்களே ரசியுங்கள்* மற்ற மொழியை சரளமாக பேச முடியவில்லை என்றாலும், கவலை கொள்ளாதீர். உங்களை நக்கல் செய்பவரிடம் துணிச்சலாய் எதிர்த்து சொல்லுங்கள். இங்கு, பலருக்கு அவரவர் தாய்மொழியையே சரியாக பேசத் தெரியாது* உங்களால் முடியாது; உங்களுக்கு தெரியவில்லை என்று, யாரேனும் சொன்னால், அதை விரைவில் கற்று, முடித்துக் காட்ட, வெறித்தனமாய் முயற்சி செய்யுங்கள்* என் வாழ்க்கை சோகம் நிறைந்தது என்று நினைக்காதீர். எல்லாம் நிறைவாய் இருக்கும் வாழ்க்கை, யாருக்குமே அமைவதில்லை என்பதே உண்மை* உங்களுக்கு எதுவும் தெரியாது; எதிரில் நிற்பவருக்கு தான் எல்லாம் தெரியும் என்று, ஒரு போதும் நினைக்காதீர். இந்த எண்ணம் இருந்தால், நீங்கள் சொல்ல வந்ததை, சரியாக, தடுமாற்றம் இன்றி சொல்லி முடிக்க முடியாது* கேள்வி கேட்பதற்கும், உங்களை முன் நிறுத்துவதற்கும் மொழி புலமை அவசியம் என்று நினைக்காதீர். உலகில் சரியாக சிந்திக்க வைத்த கேள்விகளை கேட்ட நிறைய பேர், மொழி புலமை இல்லாமல், தங்களுக்கு தெரிந்த வார்த்தைகளால், கேள்விகளை சரியாக புரிய வைத்துள்ளனர்* அழும்போது தனியாக அழுங்கள். நீங்கள் அழைத்தாலும், சேர்ந்து அழ யாரும் வரப்போவதில்லை. கண்ணீரில் துக்கத்தை கரைத்து துார எறிந்துவிட்டு, முன் செல்லுங்கள்* உங்கள் அன்பு, எந்த இடத்தில் நிராகரிக்கப்பட்டாலும், இழப்பு உங்களுக்கு இல்லை; நிராகரித்தவருக்கே என்பதை புரிந்து கொள்ளுங்கள்.- இவ்வாறு எழுதியுள்ளார்; முயன்று பாருங்களேன்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !