உள்ளூர் செய்திகள்

அந்துமணி பா.கே.ப.,

பா-கே-பமாலை நேரம். அலுவலக மொட்டை மாடியில் நின்று, தெருவை வேடிக்கை பார்த்தவாறு, குப்பண்ணாவும், லென்ஸ் மாமாவும் எதைப் பற்றியோ சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருந்தனர். ஒரு ஆங்கில நாளிதழை அக்குளில் இடுக்கியபடி, மூக்குப் பொடியை, இரு விரல்களால் எடுத்து மூக்கில் உறிஞ்சிக் கொண்டிருந்தார், குப்பண்ணா.எங்கே பெரிதாக தும்மல் போட்டு விடப் போகிறாரோ என்ற பதைப்பில் சற்று தொலைவிலேயே நின்று விட்டேன். அதே பயம் மாமாவுக்கும் இருந்திருக்கும் போல... 'டக்'கென்று, 'மாஸ்க்'கை சரி செய்தவர், அருகில் வைத்திருந்த, 'பேஸ் ஷீல்ட்' என்ற டிரான்ஸ்பரன்ட்டான தலை முதல் கழுத்து வரை மூடும்படியான முகமூடியை எடுத்து அணிந்து கொண்டார்.என்னைப் பார்த்த குப்பண்ணா, 'டே... மணி, வா... வா... உனக்காக தான் காத்திருக்கிறேன். இந்த பேப்பரை பாரு... நீதிமன்றங்களில், 'ஆன்லைனில்' வழக்காடலாம் என்ற சலுகை அளித்திருக்கின்றனர் அல்லவா... அதுபற்றி சுவையான தகவல்கள் தொகுத்துள்ளனர்...' என்று கூறி, அந்த ஆங்கில நாளிதழை என் கையில் திணித்தார். செப்., 9, 2020 வெளியான, 'டைம்ஸ் ஆப் இந்தியா' நாளிதழ் அது.இப்போது, உதவி ஆசிரியர்கள் வீட்டுக்கு கிளம்பியிருப்பர். நாளை பார்த்துக்கலாம் என்று, அந்த நாளிதழை பத்திரப்படுத்தினேன்.மறுநாள், உதவி ஆசிரியை ஒருவரின் உதவியோடு படித்து அறிந்த தகவல் இது தான்:இன்று, சுப்ரீம் கோர்ட்டில், 59 ஆயிரத்து, 867 வழக்குகள் நிலுவையில் உள்ளன. உயர்நீதிமன்றங்களில், 44.75 லட்சம் வழக்குகளும். மாவட்ட மற்றும் தாழ்நிலை நீதிமன்றங்களில், மூன்று கோடி வழக்குகளும் நிலுவையில் உள்ளன.இவற்றில் மிக குறைந்த வழக்குகளே, ஆன்லைனில் நடப்பதால், ஜோக்குகளுக்கும் பஞ்சமில்லை.* பள்ளி மாணவ - மாணவியருக்கு, ஆன்லைன் மூலம் வகுப்பு நடப்பது தெரியும். இதில் பங்கு கொள்ளும் மாணவர், 'பள்ளி யூனிபார்மின் மேல் சட்டை மட்டும் அணிந்தால் போதும்...' எனக் கூறி, வகுப்புகள் நடப்பது போல், ஆன்லைன் விசாரணைகளிலும் வக்கீல்களால் பல காமெடிகள் நடக்கின்றன.* இது ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம், வக்கீல்களின் கிளைண்டுகளுக்கு வசதியாக போச்சு. எப்படி என்கிறீர்களா, ஆமாம்... ஊர் விட்டு ஊர் வந்து வக்கீல்கள் தங்கிச் செல்ல டிக்கெட் மற்றும் லாட்ஜ் கட்டணம் வழங்க வேண்டிய அவசியமில்லை. அதுமட்டுமல்ல, சுப்ரீம் கோர்ட்டின் பிரபல வக்கீல்கள் கூட, ஆன்லைனில் வழக்குகள் நடப்பதால், இஷ்டப்பட்டதை கேட்க முடியவில்லை. ஆன்லைன் விசாரணையில் அவர்களது பீஸ், 30 - 40 சதவீதம் குறைந்து விட்டதாம்.முன்பெல்லாம், கேட்டதை கொடுத்தால் தான், வாதாடுவார், வக்கீல். இப்போதோ, 'வீட்டிலிருந்துதானே வாதாடறீங்க; குறைச்சுக்கலாமே...' என, பல கிளைண்டுகள் கேட்கும் நிலைக்கு வந்து விட்டனராம்.கம்மிங் பேக் டு த பாயின்ட்.* ராஜஸ்தான் நீதிமன்ற ஆன்லைன் வழக்கில், பங்கேற்ற ஒரு வக்கீல், கை இல்லாத பனியன் அணிந்து வாதாடியுள்ளார். இன்னொரு வக்கீலோ, படுக்கையில் படுத்தபடி, டி - சர்ட் அணிந்தபடி பேசியுள்ளார்.இரண்டு வக்கீல்களும் கேமரா இயங்குவதை மறந்து, மிக்சர் மற்றும் பிஸ்கெட்டை கொரித்துக் கொண்டிருந்தனராம்.அதைப் பார்த்து, 'என்ன சார் இப்படி...' என, ஜட்ஜ் கேட்டபோது, வக்கீல்கள் கூலாக, 'மூன்று மணி நேரமா தொடர்ந்து வழக்குகளில் ஈடுபட்டுள்ளேன். சாப்பிடக் கூட நேரம் கிடைக்கவில்லை...' எனக் கூறி, பல்லை இளித்து சமாளித்துள்ளனர்.* மற்றொரு வழக்கில், ஒடிசாவில், ஒரு அட்டர்னி ஜெனரல், கோவிலுக்குள் சென்றவர், அங்கிருந்தே வழக்கில் வாதாடியுள்ளார்.* ஒரு சீனியர் வக்கீலுக்கு, மைக்கை இயக்கவோ, கேமராவை அணைக்கவோ தெரியாது. ஒருமுறை, மனைவியை கூப்பிட்டு, 'மைக்கை, கேமராவை அணை...' எனக் கூறியுள்ளார்.'ஒவ்வொரு தடவையும் நீங்க கூப்பிடறபோதெல்லாம் என்னால் வர இயலாது. முதலில் அவற்றை எப்படி இயக்குவது என கத்துக்குங்க...' என்று, கணவரிடம் எரிந்து விழுந்துள்ளார், மனைவி.மைக் ஆப் செய்யப்படாததால், அது அப்படியே ஜட்ஜின் காதுக்கு சென்றுள்ளது.* வீடியோ கான்பிரன்ஸ் அறையில், ஒரு வக்கீல் அமர்ந்திருந்தபோது, 'இந்த ஜட்ஜ், எனக்கு ஜாமின் தருவாரா...' என கேட்டுள்ளார், கிளைண்ட்.அதற்கு வக்கீல், 'இந்த ஜட்ஜ் தருவாராங்கிறது சந்தேகம் தான். வேற கோர்ட்டுக்கு போனால் தான் நடக்கும்...' என்று கூறியுள்ளார்.இந்த செய்தி, சம்பந்தப்பட்ட ஜட்ஜுக்கு போய் விட்டது. வக்கீல் வாதாடியபோது, 'முதலில் மைக்கையும், கேமராவையும் அணைச்சுட்டு கிளைண்டுகிட்டே பேச தெரிஞ்சுக்குங்க...' என, கடுப்பாக கூறியுள்ளார், ஜட்ஜ்.* சில வக்கீல்கள், விவாதம் செய்யும்போது, சமையலறையில் சமைக்கும் சத்தமும், தோட்டத்தில் வேலை செய்வது போன்ற சத்தமும் கேட்டுள்ளது.ஓரிரு மாநிலங்களில் நடந்துள்ள கூத்துக்கள் இது. மற்ற ஊர்களில் என்ன நிலையோ, நீதி தேவதைக்கே வெளிச்சம்.பமுன்பெல்லாம், பொண்ணு, புருஷனுக்கு கொடுக்கிற குறைஞ்சபட்ச மரியாதை என்ன தெரியுமா, அவரோட பெயரைச் சொல்ல மாட்டாங்க. இப்போ கூட, சில வயசான பெரியவங்க, தன் புருஷன் பேரைச் சொல்ல மாட்டாங்க.ஒரு கிராமத்திலே, 'சென்சஸ்' எடுக்கப் போனவங்க, ஒரு பாட்டிக்கிட்ட, புருஷன் பேரைக் கேட்டிருக்காங்க. அது, சொல்லவே மாட்டேன்னு சாதிச்சிருக்கு. 'நேரடியா சொல்லாட்டாலும், மறைமுகமா சொல்லுங்க; நாங்க புரிஞ்சுக்கிறோம்'ன்னு சொல்லியிருக்கார், அதிகாரி.'எங்க வீட்டுக்காரர் பேரு, ஒரு சாமியோட பேரு'ன்னு சொன்னாங்க, அந்தம்மா.ஊரிலே உள்ள சாமி பெயரை எல்லாம் ஒண்ணொண்ணா சொல்லிக்கிட்டே வர, அது இல்லை. இது இல்லைன்னே தலையாட்டியிருக்கு. கடைசியிலே, 'கண்ணுசாமியாம்மா'ன்னாங்களாம்.'ஆமா... அந்த நாயை அப்படித்தான் கூப்பிடுவாங்க'ன்னுதாம் அந்தம்மா.இதுக்கு அவங்க, அவர் பேரையே சொல்லியிருக்கலாம்.இப்ப புதுமைப் பெண்கள் வந்துட்டாங்களே... அவங்க பண்ற கூத்தை கேளுங்க... ஒரு வீட்டில், ஒரு பொண்ணு, காலங்கார்த்தாலேர்ந்து, 'சுரேசு, எந்திரி சுரேசு... குளி சுரேசு'ன்னு வாய்க்கு வாய் புருஷன் பேரைச் சொல்லிச்சு.எதிர்த்த வீட்டிலே, ஒரு தம்பதி இதை வேடிக்கை பார்த்துக்கிட்டே இருந்தாங்க. அவன், தன் பெண்டாட்டிகிட்ட, 'புருஷன் பேரைச் சொல்லட்டும்... அதுக்குன்னு இப்படி அடிக்கடி சொன்னா நல்லாவா இருக்கு...'ன்னானாம்.அதுக்கு அவனோட மனைவி, 'அடுத்த வீட்டு விவகாரம் நமக்கெதுக்கு, கணேசு... நீ சாப்பிட வா...'ன்னாளாம்.இது தான் இன்னிக்கு புருஷன்களோட நிலைமை.எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !