உள்ளூர் செய்திகள்

அந்துமணி பா.கே.ப.,

எழுத்தாளர் நண்பர் ஒருவர், கார்த்தீபன் என்பவர் எழுதிய, 'ராக்பெல்லர்' என்ற புத்தகத்தை என்னிடம் கொடுத்து, படித்துப் பார்க்க சொன்னார். ஒரே மூச்சில் படித்து முடித்ததும், 'ராக்பெல்லர் இவ்வளவு பெரிய ஆளா...' என வியக்க வைத்தது.அப்புத்தகத்திலிருந்து ஒரு சிறு பகுதி இது:அமெரிக்காவின் எண்ணெய் வளத்தை சரியாக பயன்படுத்தி, ஒரு மாபெரும் தொழில் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி, உலகின் நம்பர் ஒன் பணக்காரராக வலம் வந்தவர், ஜான் டேவிட்சன் ராக்பெல்லர்.தொழிலில் போட்டி இருக்க வேண்டும். அதில், தான் மட்டுமே வெல்ல வேண்டும்; தன் ஸ்டாண்டர்டு ஆயில் நிறுவனம் மட்டுமே உச்சத்தில் இருக்க வேண்டும் என்பதில் பிடிவாதம் காட்டியவர். தனக்கு போட்டியாக இருக்கும் எண்ணெய் நிறுவனங்களை எப்பாடுபட்டாவது தன் வசம் ஆக்கிக் கொள்வார்.இதற்காக, ஸ்டாண்டர்டு ஆயில் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், ஒற்றர்களைப் போல் மற்ற கம்பெனிகளுக்குள் நுழைந்து அங்கே பணிபுரிவதுண்டு. நாளடைவில் அவர்கள் அந்தக் கம்பெனியை நிர்வாகம் செய்பவர்களாக தங்கள் நிலையை உயர்த்திக் கொள்வர்.அதன் பிறகு, அங்கிருந்தபடியே ஸ்டாண்டர்டு ஆயில் நிறுவனத்துக்காக மறைமுக நடவடிக்கைகளில் ஈடுபடுவர். போட்டியாளர்களை கவிழ்க்க, இவர்கள் விலையை குறைத்து விற்று, மற்றவர்களை நஷ்டத்திலிருந்து மீள முடியாதபடி செய்து விடுவர். உண்மையில் இவர்கள் எல்லாருமே ராக்பெல்லரின் நிறுவனத்தை சேர்ந்தவர்களாக இருப்பர்.இவர்கள் அனைவரும் சங்கேத மொழியில் அங்கிருந்து செய்திகளை அனுப்ப பயிற்சி பெற்றிருப்பர். ரகசியமாக தங்களுக்குள் பேசிக் கொள்வர். கிட்டத்தட்ட க்ரைம் நாவல் மாதிரியே தான்; ஆனால், அத்தனையும் நிஜம்.நம் எதிரிகள் தோல்வியடைந்து ஓட வேண்டும் என்பதை, முன்கூட்டியே தம்பட்டம் அடித்துச் சொல்ல வேண்டும் என்று கருதியவர், ராக்பெல்லர். எதிராளிக்கு கொஞ்சமும் விட்டுக்கொடுக்காத குணமுள்ளவர். ஈவு, இரக்கம் என்பதற்கு தொழில் போட்டியில் இடமே இல்லை என்ற அசைக்க முடியாத எண்ணம் உடையவர்.அமெரிக்காவின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில், 90 சதவீதம், ராக்பெல்லரின் கைக்கு வந்து விட்டது. எண்ணெயைக் கொண்டு வரும் பைப் லைன்கள், எண்ணெயைச் சேகரிப்பது, ரயில்களில் எண்ணெய் பீப்பாய்களை அனுப்புவது என்று எல்லாமே இவருடைய கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது.அசைக்க முடியாத அளவுக்கு ஸ்டாண்டர்டு ஆயில் நிறுவனம் வளர்ந்து விட்டது; இனி போட்டி என்பதே கிடையாது என்று அவர் நினைத்துக் கொண்டிருந்த வேளையில், எதிர்பாராத சில புதிய சவால்களை சந்திக்க வேண்டியிருந்தது.போட்டி எண்ணெய் கிணறுகளின் முதலாளிகள் எல்லாரும் ஒன்று சேர்ந்தனர். ராக்பெல்லரை, அதாவது, ஸ்டாண்டர்டு ஆயில் நிறுவனத்தை எப்படி வெல்வது என்று ரகசிய திட்டம் தீட்டினர்.ரயில்களில் எண்ணெய் பீப்பாய்களை அனுப்புவதற்கான கட்டணம் அப்போது மிகவும் அதிகமாக இருந்தது. அதில் ஒரு பகுதியை அதிக அளவில் கமிஷனாக பெற்று லாபமடைந்தவர்கள், ஸ்டாண்டர்டு ஆயில் நிறுவனத்தினர் தான்.ராக்பெல்லருக்கு போட்டியாக செயல்பட்டோருக்கு மாற்று வழியில் எண்ணெய் பீப்பாய்களை அனுப்ப என்ன செய்யலாம் என்று, சிந்தித்தனர்.எண்ணெயை பெரிய குழாய்கள் வழியாக தொலை துாரத்தில் உள்ள நகரங்களுக்கு கொஞ்சமும் சேதாரமில்லாமல் அனுப்ப முடியும் என்று, இவர்கள் நம்பினர். அதற்கான திட்டத்தை ரகசியமாக நிறைவேற்றவும் தீர்மானித்தனர்.உலகத்திலேயே முதன் முதலாக குழாய் வழியாக எண்ணெயை அனுப்பும் முயற்சியில், போட்டி கம்பெனிகள் முந்திக் கொண்டு செயல்பட்டபோது, அதிர்ந்து ேபானார், ராக்பெல்லர். அவருடைய ஸ்டாண்டர்டு ஆயில் நிறுவனத்துக்கும் அது தாங்க முடியாத பேரதிர்ச்சி.இதன்படி, ஒரு புதிய கம்பெனி துவங்கப்பட்டது. அதில், ராக்பெல்லருடைய போட்டியாளர்கள் பலரும் உறுப்பினர்கள்.எண்ணெய் பகுதிகளிலிருந்து, 177 கி.மீ., வரையில் குழாய் வழியாக எண்ணெயை பென்சில்வேனியாவுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டது. பிறகு, அங்கே அவற்றை பீப்பாய்களில் நிரப்பி, ரயில் மார்க்கமாக மற்ற நகரங்களுக்கு அனுப்பலாம் என்று திட்டமிடப்பட்டது.இந்த குழாய்களின் வழியாக எண்ணெய் பெருக்கெடுத்து ஓடத் துவங்கியது.இதனால், எண்ணெய் தொழிலில் ஸ்டாண்டர்டு ஆயில் நிறுவனம் வைத்திருந்த முழு கட்டுப்பாடும் சிறிது சிறிதாக தளரத் துவங்கியது.அதன்பிறகு, ஸ்டாண்ட்டு ஆயில் நிறுவனத்துக்கு வேறு வழி தெரியவில்லை. தானும் குழாய்கள் வழியாக எண்ணெயை அனுப்பவும், பெறவும் முயற்சிகளை மேற்கொண்டது.இத்தனைக்கு நடுவிலும் திறமையோடு இறங்கினார், ராக்பெல்லர். ஸ்டாண்டர்டு ஆயில் நிறுவனத்துக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் முழுவதும் ராக்பெல்லரின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்ததால், குழாய் வழியாக எண்ணெயை பெற்று, பெரிய அளவில் உற்பத்தியை அதிகரிக்க அவரால் முடிந்தது.தன் வெற்றியை தக்க வைத்துக் கொள்வதற்காக, போட்டியாளர்களை நண்பர்களாகவும், கூட்டாளிகளாகவும் மாற்றிக் கொண்டார், ராக்பெல்லர்.- இப்படி ராக்பெல்லரின் சாதனையை விவரிக்கிறது புத்தகம். அவரது வியாபார நுணுக்கங்களை படித்து, ஆச்சரியமடைந்தேன்.தன் கணவரை மருத்துவரிடம் அழைத்து சென்றார், ஒரு அம்மா. 'என்ன ப்ராப்ளம்?' என்று கேட்டார், மருத்துவர்.'எங்க வீட்டுக்காரர் அடிக்கடி நாற்காலியிலேயே உட்கார்ந்து காலை உடைச்சுக்கிறார்...' என்றார்.'அப்படின்னா, அந்த நாற்காலியில் தான் ஏதோ கோளாறு...' 'அப்படி இருக்கவே முடியாது, டாக்டர்...' 'அது எப்படி அவ்வளவு உறுதியாக சொல்றீங்க?' 'எங்க வீட்டுல நாற்காலியே கிடையாது. நாற்காலி இருக்கிறதா நினைச்சி இவர் உட்கார்ந்துடறார். அதுதான் ப்ராப்ளமே...' என்றார். எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !