உள்ளூர் செய்திகள்

அந்துமணி பா.கே.ப.,

பா - கே

'பஸ்ல ஒருத்தன், என் பக்கத்துல உட்கார்ந்துட்டு, காது ஜவ்வு கிழியற மாதிரி, யாரிடமோ, மொபைலில், சேவல் கூவுச்சா, மாடு கன்று போட்டுச்சான்னு கத்தி, கத்தி பேசிட்டு இருந்தான், மணி.'ஏன்டா இப்படி சத்தமா பேசற... மெதுவா பேசினாலே அந்த பக்கம் இருப்பவருக்கு கேட்குமே என்றேன்.'உடனே அவன், 'பக்கத்துல உட்கார்ந்துட்டு இருக்கிற உனக்கு கேட்கும்; ஆந்திராவுல இருக்கிற என் மச்சானுக்கு கேட்கணுமே...'ன்னு சொல்றான்.'இந்த உலகத்துல அறிவாளிகளை விட, முட்டாள்கிட்டதான் அதிக எச்சரிக்கையா நடந்துக்க வேண்டியிருக்கு...' என்றார், எழுத்தாள நண்பர்.'அது சரி, ஒரு முட்டாளை எப்படி அடையாளம் கண்டுபிடிக்கிறது?' என்றேன், நான்.'ஆறு வகையான அறிகுறிகளை வச்சு ஒரு முட்டாளை அடையாளம் கண்டுபிடிக்கலாம்ன்னு சொல்றார், வாரியார் சுவாமிகள்...' என, தொடர்ந்தார், எழுத்தாள நண்பர்:1. காரணமில்லாத கோபம், 2.பயனில்லாத பேச்சு, 3.முன்னேற்றமில்லாத மாறுதல், 4.பொருத்தமில்லாததைப் பற்றி ஆராய்தல், 5.அன்னியனை நம்புதல், 6.பகைவரை நண்பராகக் கருதுதல். இதுதான் அவங்களுக்கு அடையாளம்.அர்த்தமில்லாமல் கோபப்படறவங்களை நிறைய பார்க்கறோம். அவங்கள்லாம் மேற்படி ஆசாமிகள் தான்.போன் சரியா இல்லேன்னா அதை, 'பொத்'ன்னு வேகமா, 'ரிசீவரை' வைக்கிறது. பேனாவுல இங்க் தீர்ந்து போச்சுன்னா, அதை வேகமா மேஜை மேல குத்தி குத்திப் பார்க்கறது.யாரு மேலயோ உள்ள எரிச்சல்ல, கதவை படார்ன்னு சாத்தறது. இதெல்லாம் அர்த்தமில்லாத கோபம்.அடுத்த வகை ஆசாமிகள் எப்படி தெரியுமா?பயனில்லாத பேச்சு பேசறவங்க.'ஒற்றுமையா வாழணும்ங்கிறதை பத்தி, ஒரு மணி நேரம் பேசினேன். கடைசியில கூட்டம் கலாட்டாவுல முடிஞ்சது...'ன்னார்.அப்புறம் பேசின பேச்சுக்கு என்ன பிரயோஜனம்?சில பேர், நேரம் காலம் தெரியாம நம் எதிர்ல வந்து உட்கார்ந்துகிட்டு, அவங்களுக்கு என்னெல்லாம் தெரியுமோ அதைப் பத்தியெல்லாம் பேச ஆரம்பிச்சுடுவாங்க. இதுதான் பயனில்லாத பேச்சு.மூணாவது வகை எப்படின்னா, முன்னேற்றமில்லாத மாறுதல்.'நம்ம ஆளு ஒருத்தன், திருடிட்டு ஜெயில்ல இருந்தான்ல... அவன் இப்ப மாறிட்டான் சார்...' என்றார், ஒருத்தர்.'திருந்திட்டானா...'ன்னு கேட்டேன்.'இல்ல சார், முன்னாடி அவன் கோயமுத்துார் ஜெயில்ல இருந்தான். இப்ப அவன், வேலுார் ஜெயிலுக்கு மாறிட்டான்...'னு அதுக்கு விளக்கம் கொடுத்தார்.ஒரு மனிதன் மாறிட்டான்னா, அவன் முன்னாடி இருந்த நிலையை விட்டு மாறி முன்னுக்கு வந்துட்டான் என்று இருக்கணும்.நாலாவது, பொருத்தமில்லாததைப் பற்றி ஆராய்தல்.'என்னடா தரையில உத்துப் பார்த்துக்கிட்டிருக்கே...'ன்னு கேட்டா...'ஒண்ணுமில்ல, இந்த எறும்பு எங்கே போய்க்கிட்டிருக்குன்னு பார்த்துக்கிட்டிருக்கேன்...' என்பான்.இது, பொருத்தமில்லாத ஆராய்ச்சி.ஐந்தாவது, அன்னியனை நம்புதல்.இது மாதிரி ஆசாமிகளை ரயில்வே ஸ்டேஷன்ல பார்க்கலாம்.'சார், இந்த பெட்டியில, 10 ஆயிரம் ரூபாய் வச்சிருக்கேன். இதை பத்திரமா பார்த்துக்கங்க. நான் போய் டிக்கெட் வாங்கிட்டு வந்துடறேன்...' என்பான்.போயிட்டு வந்து பார்த்தா, இவன் அந்த இடத்துல இருக்க மாட்டான். முன்பின் அறிமுகமில்லாதவர்களை நம்பறதும், ஒரு முட்டாள் தனம்.ஆறாவது, பகைவரை நண்பரா கருதறது.விரோதிகிட்ட விசுவாசமா இருக்கறது என்றைக்கும் ஆபத்து. ஆக, முட்டாள்களை இந்த ஆறு வகையில அடையாளம் காணலாம்ங்கறது, வாரியாரின் கருத்து.- என்று முடித்தார், எழுத்தாள நண்பர்.

இசை மேதை எஸ்.ஜி.கிட்டப்பா, செங்கோட்டையில பிறந்தவர். தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள்கிட்ட நாடகப் பயிற்சி பெற்றவர்.அந்த காலத்துல, நாடக உலகத்துல இவரு ரொம்ப பிரபலம். திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை, இவருக்கு ரொம்ப நெருக்கமான நண்பர்.ஒரு தடவை, தஞ்சாவூர்ல, எஸ்.ஜி.கிட்டப்பாவோட நாடகம் நடந்துகிட்டிருக்கு. அந்த பகுதியில் இருந்த முக்கியமான இசைக் கலைஞர்கள்லாம் வந்து, முதல் வரிசையில உட்கார்ந்திருக்காங்க.திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளையும் உட்கார்ந்திருந்தார். முக்கியமான இசை மேதைகள் முன் வரிசையில வந்து உட்கார்ந்திருக்கிறதை பார்த்தார், கிட்டப்பா. அவருக்கு, ரொம்ப உற்சாகமாக இருந்தது.ரொம்ப கம்பீரமா, 'கோடையில இளைப்பாறிக் கொள்ளும் வகை கிடைத்த குளிர் தருவே'ன்னு பாட ஆரம்பிச்சார். அந்தப் பாட்டுல வெவ்வேறு ராகம் வரும். அதுல, காபிராகம் ஒரு இடத்துல வரும். அந்த சமயத்துல, நாடக மேடை விளக்கு அணைந்து மறுபடியும் எரிஞ்சுது.முதல் வரிசையில உட்கார்ந்திருந்த இசை மேதைகளைப் பார்த்தார். அவங்க உட்கார்ந்திருந்த இடமெல்லாம் காலியா இருந்தது; அவங்களை காணல.இதைப் பார்த்தவுடனே, உற்சாகமா பாடிக்கிட்டிருந்த கிட்டப்பாவுக்கு, மனசு சங்கடமா போச்சு. நாம பாடுற பாட்டு, தரம் குறைஞ்சுட்டுதோன்னு நினைச்சார். ரொம்பவும் மனம் கலங்கிப் போய் நாடகப் படுதாவை விடச் சொல்லிட்டார்.அந்த சமயத்துல, ராஜரத்தினம் பிள்ளை மட்டும் முன் வரிசையில உட்கார்ந்திருக்கிறது தெரிஞ்சுது.அவரை உடனே மேடைக்கு வரவழைச்சார், தன் மனக் கஷ்டத்தை சொன்னார். 'நீங்க, அந்த காபி ராகத்தை ரொம்ப பிரமாதமா பாடினீங்க. அது மனசுல நிக்கிற இந்த சமயத்துலயே மறந்துடாம அதை பாடி சாதகம் பண்றதுக்காக, அந்த இசை மேதைகளெல்லாம் எழுந்திரிச்சு போயிருக்காங்க; என்கிட்ட சொல்லிட்டுத்தான் போனாங்க...' என, ராஜரத்தினம் பிள்ளை சொன்னதும், அவருக்கு ரொம்ப ஆச்சரியமா போயிட்டுது.அந்த அளவுக்கு, கிட்டப்பா, இசை மேதையாக இருந்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !