போனதும் வந்ததும்!
ஆற்றல், பதவி எல்லாம் சேரச் சேர, மனது எங்கேயோ போய் விடுகிறது. அடுத்தவர்களைத் துன்புறுத்தியாவது அவர்களிடம் உள்ளதை நாம் அடைய வேண்டும் என்ற எண்ணம் அழுத்தமாகப் பதிகிறது. விளைவு, ராமாயணம் சொல்கிறது:பிரம்மதேவரை நோக்கி கடுந்தவம் செய்தான், ராவணன். அவரிடம் இருந்து ஏராளமான வரங்களைப் பெற்றான். யாருக்கும் சுலபத்தில் கிடைக்காத வரங்களைப் பெற்றும், திருப்தி அடையவில்லை, ராவணன்.தான் நினைத்த இடங்களுக்கு எல்லாம் சென்று, பலருடன் போரிட்டு, அவர்களிடம் இருந்தவைகளை எல்லாம் கவர்ந்து வந்தான். குபேரனை எதிர்த்துப் போரிட்டு, அவனிடம் இருந்த புஷ்பக விமானத்தைக் கவர்ந்து வந்தான், ராவணன்.அபூர்வமான புஷ்பக விமானத்தை இழந்த குபேரன் வருந்தினான். ஏனென்றால், அந்தப் புஷ்பக விமானம் மிகவும் உயர்ந்தது. எத்தனை பேர் வந்தாலும் இடம் கொடுக்கும்; மிகவும் விரைவாகச் செல்லும்; சுகமான பயணத்தைத் தரும். வேறு யாரிடமும் இல்லாத அப்படிப்பட்ட, புஷ்பக விமானத்தை இழந்து வருந்தினான், குபேரன். அதே சமயம், குபேரனிடம் இருந்து புஷ்பக விமானத்தைக் கவர்ந்த ராவணன், மகிழ்ச்சியாக -இருந்தானா என்றால், அதுவும் இல்லை. புஷ்பக விமானம் பெற்ற கர்வத்தில் சுற்றி அலைந்து, நந்தி பகவானிடம் சாபம் பெற்றான். ராவணன் கவர்ந்ததெல்லாம் அபூர்வமானவை. ஆனால், அவைகளை வைத்து ராவணன் சந்தோஷமாக இருந்தானா என்றால், அது தான் இல்லை. மாற்றான் மனைவியான சீதையைக் களவாடிக் கொண்டு வந்தான். அவ்வாறு செய்ததன் காரணமாகக் கொஞ்ச நஞ்சம் இருந்த நிம்மதியையும் இழந்தான், ராவணன்.அது மட்டும் அல்ல, ராவணன் செய்த செயலின் விளைவாக, அவன் மனைவி, கூடப்பிறந்த சகோதரர்கள், பிள்ளைகள், மக்கள்- என, பலரும் மனத்துயர் அடைந்து, படாதபாடு பட்டனர்.ராம, -ராவணப் போர் மூண்டது. ராவணனைக் கொன்று, புஷ்பக விமானத்தை மீட்டு, மறுபடியும் குபேரனிடம் ஒப்படைத்தார், ராமர். 'அழ அழக் கொண்ட எல்லாம், அழ அழப் போ(கு)ம்...' -எனும், அருந்தமிழ் வாக்கை நிரூபிக்கும் நிகழ்வு இது. எந்த விதத்திலும் அடுத்தவர் மனதைப் புண்படுத்தாமல் இருக்க வேண்டும் என அறிவுறுத்தும், கதை இது.பி. என். பரசுராமன் ஆன்மிக தகவல்கள்!வாகன விபத்தை தவிர்க்க, செவ்வாய் கிழமையில் சம்பங்கி மலரால் சிவபெருமானை அர்ச்சனை செய்து வழிபடலாம்.