உள்ளூர் செய்திகள்

அசோக சுந்தரி!

அசோக சுந்தரி... யார் இவள்?சிவன் குடும்பத்தில் ஒரு உறுப்பினர். அதாவது, சிவனின் மகள். சிவனுக்கு விநாயகர், முருகன் மற்றும் சாஸ்தா ஆகிய மகன்கள் இருப்பது தெரியும். அவருக்கு மூன்று மகள்கள் இருப்பதாக பத்மபுராணம் சொல்கிறது. அதில் மூத்தவளே, அசோக சுந்தரி. அவளது வரலாறு இது தான்:தங்கள் பிள்ளைகளை வெளியூர் பணிக்கு அனுப்பி விட்டு, அவர்கள் எப்போது வருவரோ என, காத்துக் கொண்டிருப்பர், அம்மாக்கள். இதே நிலைமை பார்வதிதேவிக்கும் ஏற்பட்டது.சிவனும், அவரது பிள்ளைகளும் அசுர வதத்துக்காக அடிக்கடி எங்காவது கிளம்பி விடுவர். இந்நேரத்தில் பார்வதி பொழுது போகாமல் தவிப்பாள். வீட்டோடு இருப்பர், பெண் பிள்ளைகள். தனக்கும் ஒரு மகள் இருந்தால், நன்றாக இருக்குமே என யோசித்தாள், பார்வதி. தங்கள் நந்தவனத்திலுள்ள, கேட்டதைத் தரும் கற்பக விருட்ச மரத்திடம், ஒரு பெண் குழந்தை வேண்டுமென கேட்டாள். உடனேயே அவள் கையில், ஒரு பெண் குழந்தை வந்து அமர்ந்தது. அவளுக்கு என்ன பெயர் வைக்கலாமென யோசித்தாள்.தமிழில், 'அ' என்னும் முதலெழுத்துக்கு மிகவும் முக்கியத்துவம். திருப்தி -நேர்மறையான சொல். அதன் முன், 'அ' போட்டால், எதிர்மறையாகி விடும்.இதுபோல், சோகம் முன், 'அ' சேர்த்தால், அசோகம் ஆகி விடும். அதாவது, சோகம் தீர்தல். தன் சோகத்தை தீர்த்த மகள் அழகாக இருந்ததால், சுந்தரி- - அழகானவள் என்பதையும் சேர்த்து, அசோக சுந்தரி என, பெயர் சூட்டினாள்.அசோக சுந்தரி வளர்ந்ததும், நந்தவனத்துக்கு தோழியருடன் சென்றாள். அவளைப் பார்த்த, குந்தன் என்னும் அசுரன், அவள் மேல் காதல் கொண்டான்; மறுத்தாள், சுந்தரி.'எனக்கும், இந்திரனுக்கு சமமான நகுசன் என்பவனுக்கும் திருமணம் நடக்கவுள்ளது...' என, கூறினாள். ஆனால், அவளைக் கடத்தி விட்டான், குந்தன்.'நீ நகுசனால் கொல்லப்படுவாய்...' என சாபமிட்ட, சுந்தரி, அங்கிருந்து தப்பி விட்டாள். பின் நகுசனுக்கும், அவளுக்கும் திருமணம் நடந்தது; குந்தன் கொல்லப்பட்டான்.இவளது மகனே யயாதி. புராணங்களில் பிரபலமாக பேசப்படுபவன்.அசோக சுந்தரி வழிபாடு, குஜராத்தில் பிரபலமாக இருந்தது. காலப்போக்கில் இந்த பெயர் மறைந்து, 'பாலா' என, பெயர் வந்தது. தமிழகத்தில் இவளை திரிபுர சுந்தரி, லாவண்யா என்றெல்லாம் அழைப்பர்.பாலாவுக்கு, நெமிலி (காஞ்சிபுரத்திலிருந்து திருமால்பூர் வழியாக, 20 கி.மீ.,) கிராமத்திலும்; திரிபுர சுந்தரிக்கு, திருநெல்வேலி, பேட்டை போலீஸ் ஸ்டேஷன் பேருந்து நிறுத்தம் அருகிலும் கோவில்கள் உள்ளன.மார்ச் 11, சிவராத்திரி அன்று, சிவனுடன், அவரது மகளையும் வணங்கி, நல்லருள் பெறலாம்.தி. செல்லப்பா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !