முதலாளி! (20)
மாடர்ன் தியேட்டர்சின், வரலாற்றை, சில வரிகளில் சொல்ல விரும்புகிறேன். இதனுடைய நிர்வாகியும், ஸ்தாபகருமான டி.ஆர்.சுந்தரம் தான், இம்மாபெரும் ஸ்தாபனம் தலை நிமிர்ந்து நிற்க, காரணமாய் விளங்கினார்.கடந்த, 1936ம் ஆண்டு, டி.ஆர்.சுந்தரத்தால், இந்த ஸ்டுடியோ ஆரம்பிக்கப்பட்டது. 1937ல், முதல் படம் சதி அகல்யா. தொடர்ச்சியாக, 30 ஆண்டுகளில் 99 படங்களை தயாரித்தார். நூறாவது தயாரிப்பு தான், ராமசுந்தரம் தயாரித்து டைரக்ட் செய்த, வல்லவனுக்கு வல்லவன்.டி.ஆர்.சுந்தரம், 56 படங்களை தானே டைரக்ட் செய்தார். ஒரே டைரக்டர், இவ்வளவு படங்களை டைரக்ட் செய்தது, அக்கால கட்டத்தில் பெரிய சாதனை. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சிங்களம், இந்தி, ஆங்கிலம் என, பல மொழிகளில் படம் தயாரித்த ஒரே ஸ்தாபனம் மாடர்ன் தியேட்டர்ஸ் தான். டி.ஆர்.சுந்தரம், டைரக்டர், தயாரிப்பாளர் என்ற பெருமையுடன், சில படங்களில் அவரே கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார்.முதன் முதலாக, கார்ட்டூன் காட்சிகளை, பத்மஜோதி என்னும் படத்திலும், இரட்டை வேடக் காட்சிகளை, உத்தமபுத்திரன் என்ற படத்திலும் அறிமுகப்படுத்தினார்.ஏறத்தாழ, முப்பது ஆண்டுகள் தென்னிந்தியாவில் முதலாளி - தொழிலாளி பிரச்னை இல்லாமல், வெகு திறமையுடன் மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்தாபனத்தை, திறம்பட நடத்தியவர் டி.ஆர்.சுந்தரம். இது, சாதாரண காரியம் அல்ல.ஒழுக்கம், உண்மை, கட்டுப்பாடு என்னும் விதிமுறைகளைத் தானும் கடைபிடித்து, மற்றவர்களையும் கடைபிடிக்க வைத்து, தொழிலாளர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருந்தவர் டி.ஆர். சுந்தரம். இதனால், அவரிடம் எல்லாரும் பயபக்தியுடன் நடந்து கொண்டனர். தென்னிந்திய பிலிம் வர்த்தக சபையின், ஆரம்ப காலத்திலேயே அதில் அங்கத்தினராக இருந்த டி.ஆர். சுந்தரம், அதன் தலைவராக நான்கு முறை தேர்ந்தேடுக்கப்பட்டார். இது, அவரது திறமைக்கு ஓர் எடுத்துக்காட்டு.இன்றைய, தென் இந்திய பிலிம் வர்த்தக சபையின் புதிய கட்டடம், அவரது தீவிர முயற்சியின் பலனாக உருவாக்கப்பட்டது தான்.திரைத் தொழிலில் பல நுட்பங்களை, புகுத்தி வெற்றி பெற்ற பின்பும், அடக்கமாக இருந்தவர்.குறைந்த நேரம், நிறையச் செலவு. அதனால், அவரால் நல்ல படங்களை கொடுக்க முடிந்தது. மாடர்ன் தியேட்டர்சில் பயின்ற தொழில் விற்பன்னர்கள் பலரும், அவரது பாதையிலேயே நடைபோட்டு வெற்றி கண்டனர். அதில், மிக முக்கியமானோர் இருவர். ஒருவர் டைரக்டர் கே.சோமு. மற்றவர் தயாரிப்பாளர், டைரக்டர் முக்தா வி.சீனிவாசன்.நல்ல காரணங்களுக்காகவும், திரைத் தொழிலின் அபிவிருத்திக்காகவும் சட்ட திட்டங்கள் ஏற்படுத்தி, அவைகளைத், தானும் கடைபிடித்து, மற்றவர்களையும் கடைபிடிக்க வைத்தார் டி.ஆர்.சுந்தரம்.திரைப்படத் தொழிலில் உள்ளோர், ஒழுக்கமான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதில், மிகவும் கண்டிப்பாக இருந்த அவர், தானே அதற்கு உதாரணமாகவும் இருந்தார். மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்தாபனத் திற்கும், ஸ்டுடியோவிற்கும் பெரும் புகழைத் தேடித் தந்த இவர், புகழையே விரும்பாமல், ஒரு சாதாரண மனிதராக, ஊழியரோடு ஊழியராக நின்று பணிபுரிந்தார் என்று, அவரது தொழிலாளர்கள் இன்றும் அவரைப் போற்றி புகழ்கின்றனர்.தென்மாநில திரைப்பட ரசிகர்கள் அனைவரும், இவரை நன்கு அறிந்திருந்த போதிலும், பொது இடங்களிலோ, இல்லை அரசியல் மேடையிலோ இவரை யாரும் காண முடியாது.டி.ஆர்.சுந்தரம் ஒரு தயாரிப்பாளர், டைரக்டராக மட்டுமில்லாமல், சிறந்த டெக்னீஷியனாகவும் இருந்தார். திரைத் தொழில் சம்பந்தமான அத்தனை புத்தகங்களும், அவரது ஸ்டுடியோ லைப்ரரியில் இருந்தன.திரைத் தொழிலில் அவருக்கு தெரியாத நுணுக்கங்களே கிடையாது என்கிற முறையில், அனைத்தையும் கற்றுத் தேர்ந்தவர்.கதை, பாடல், நடிப்பு, ஒலி, ஒளிப்பதிவு போன்ற எல்லா அம்சங்களையும் அறிந்து, அவற்றை மிகவும் நுட்பமாக, சிக்கனமாக, உபயோகிக்கும் இவரது சேவை, அன்று தென்னகத் திரை உலகிற்கு, மிகத் தேவையாக இருந்தது.கலைக்காகவே கடைசி மூச்சு வரை உழைத்த அந்த மேதை, தன் 100வது படத்தை மிகவும் பிரம்மாண்டமான முறையில் தயாரித்து, வெளியிட தீவிரமாக முயன்று, அதற்கான கதையையும் தேர்வு செய்து விட்ட நேரத்தில், எதிர்பாராத விதமாக, ஆக., 29, 1963-ல் இயற்கை எய்தினார். — முற்றும் — ரா. வேங்கடசாமி