உள்ளூர் செய்திகள்

பாக்ஸ் மேட்டர்

(1). கறுப்பு, மஞ்சள் டாக்சிக்கு, 'டாட்டா!'டாக்சி என்றாலே கீழே கறுப்பு, மேலே மஞ்சள் வண்ணம் பூசப்பட்ட அம்பாசி டர் கார்கள் தான் நினைவுக்கு வரும். எல்லா நகரங்களிலும் கொஞ்சம், கொஞ்சமாக மறைந்து வரும் இந்த டாக்சிகளுக்கு, ஒரேயடியாக மூடு விழா நடத்த, டில்லி அரசு முடிவு செய்துள்ளது.டில்லியில் கறுப்பு, மஞ்சள் டாக்சிகள் ஏராளமாக ஓடுகின்றன. விமான நிலையம், ரயில் நிலையங்களில் இவற்றை காணலாம். இப்போது இதற்கான கட்டணத்தை மிகவும் உயர்த்தி அரசு அறிவித்துள்ளது. அதே நேரத்தில் மிகக் குறைந்த கட்டணத்தில், சொகுசான கால் டாக்சிகளுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது.அடுத்த மூன்று, நான்கு மாதங்களுக்குள் ஆயிரம் கால் டாக்சிகளுக்கு அரசு அனுமதி வழங்க உள்ளது. பஞ்சாப், அரியானாவைச் சேர்ந்த சீக்கியர்களால் ஓட்டப்பட்டு வரும் டாக்சிகள், ஆட்டோக்கள் இனி கொஞ்சம், கொஞ்சமாக டில்லியில் காணாமல் போய் விடும்.- ஜோல்னா பையன்.(2). நோட்டு புத்தகமான பெண்ணின் தோல் !மிக அபூர்வமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் ஒரு பெண். இவர் உடலின் மேல் உள்ள தோலில், எதை வேண்டுமானாலும் எழுதலாம். அந்த எழுத்துக்கள் அப்படியே இருக்கும்.சீனாவில் வசிக்கும் 50 வயதான பெண்ணின் பெயர் ஹூவாங் ஜியாங்ஜி. 'காகித பெண்' என இவரை, இந்த பகுதி மக்கள் அழைக்கின்றனர். இவர் கடைக்கு செல்ல வேண்டும் என்றால் வாங்க வேண்டிய பொருட்களின் பட்டியலை, தனியாக பேப்பரில் எழுத மாட்டார். தன் உடலிலேயே நகத்தால் எழுதுவார்; அந்த எழுத்துக்கள் அப்படியே இருக்கும். சீனாவில் பிரபலமான தோல் மருத்துவர்கள், இப்போது இந்த பெண் நிலையை குறித்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர். 'இந்த பெண்ணின் தோலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் எந்த அபாயமும் இல்லை. இது ஒருவகை அலர்ஜிதான். இவரைப்போல் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற புள்ளி விபரங்கள் எதுவும் இல்லை. காரணம் இது மிகவும் அபூர்வ நோய்...' என, மருத்துவர்கள் கூறியுள்ளனர்.- ஜோல்னா பையன்.(3). ஏழு கோடி ரூபாய்க்கு ஏலம் போன யானை சிற்பம்!பிரிட்டனில் பிறந்த இந்திய சிற்பி ஒருவர் உருவாக்கிய யானை சிற்பம், லண்டன் நகரில் 7 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. பாரதி கெர் என்ற இந்த சிற்பி, யானையின் முழு உருவச்சிலையை ஒரே கல்லில் செதுக்கியுள்ளார். படுத்த நிலையில் இருக்கும் இந்த பெண் யானை சிலையை இவர் பத்து மாதங்கள் கடினமாக உழைத்து உருவாக்கினார். லண்டன் நகரில் உள்ள பிரபலமான ஏல நிறுவனமான சோத்பீ பண்பாட்டு கூடத்தில், இந்த யானை காட்சிக்கு வைக்கப் பட்டது. யானை சிற்பத்தைப் பார்த்த அனைவரும் வியந்தனர். உயிருடன் யானை அப்படியே படுத்து இருப்பது போல் உயிரோட்டமான சிற்பமாக அது வடிவமைக்கப்பட்டிருந்தது. பின், இந்த யானை ஏலம் விடப்பட்டது. ஒன்பது லட்சத்து 93 ஆயிரத்து 250 பவுன்டிற்கு ஏலம் போனது. இந்திய மதிப்பில் இது கிட்டத்தட்ட 7 கோடி ரூபாய். யானை சிற்பம் ஒன்று, இந்த அளவு விலை போனது இதுவே முதல் முறை. - ஜோல்னா பையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !