உள்ளூர் செய்திகள்

சந்திரபாபு (9)

'கோமாளித்தனம் செய்யும் சந்திரபாபுக்கு இவ்வளவு அழகான பெண்ணா...' என, திருமணத்திற்கு வந்தோர் வியந்த நிலையில், தன் திருமண வாழ்க்கை குறித்து, சந்திரபாபுவே கூறியது:தேன்நிலவுக்காக, நானும், ஷீலாவும் பெங்களூரு சென்றோம். ஏழு நாட்கள் கழித்து சென்னைக்கு திரும்பினோம். ஏனோ, ஒவ்வொரு நாளும் என் மகிழ்ச்சி குறைந்து வருவது போன்று, பிரமை தோன்றியது. அதற்கேற்ப, ஷீலாவும் என்னை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருப்பாள்.'ஏன் இப்படிப் பார்க்கிறாள்...' என, ஒன்றும் புரியவில்லை.ஒருநாள் அவளே பேச்சைத் துவங்கினாள்...'நீங்கள் இவ்வளவு நல்லவராக இருப்பீர்கள் என்று நான் எதிர்பாக்கவே இல்ல...' என்றாள்.'ஏன்... என்னைப் பற்றி என்ன நினைத்தாய்...' என்றேன். 'நீங்கள் பெரும் குடிகாரன், பெண் பித்தன் என்றெல்லாம் கூறினர்...' என்றாள்.நான் சிரித்தேன்; அதற்கு பின், அவள் எதுவும் பேசவில்லை.அடுத்த நாள், இரவு, எனக்கு மதுவை கொஞ்சம் அதிகமாகவே ஊற்ற துவங்கினாள்.'எதற்காக இப்படி அதிகம் ஊற்றுகிறாய்?' என்று கேட்டேன்.'இன்று, நான் உங்களிடம் ஒரு பெரிய ரகசியத்தை சொல்லப் போறேன்...' என்றவள், சிறிது நேரம் அமைதியாக இருந்து, பின், 'வாழ்க்கையில் நான் வஞ்சிக்கப்பட்டவள்...' என்று சொல்லி, 'ஓ'வென்று அழத் துவங்கினாள்.அவளைத் தேற்றி, சமாதானப்படுத்தினேன்.அழுகையை கட்டுக்குள் கொண்டு வந்தவள், 'இதைக் கேட்டு என் மீது ஆத்திரப்படவோ, தவறாக ஏதும் செய்து விடவோ மாட்டேன் என, கையிலடித்து சத்தியம் செய்யுங்கள்...' என்றாள்.அப்படியே செய்தேன்.'நான் வஞ்சிக்கப்பட்ட விதமே வேறு...' என்று சொல்லி, அவள் வஞ்சிக்கப்பட்ட கதையை சொன்னாள்...'பள்ளியில் படிக்கும்போதே, வாலிபர்கள் பலர் என்னைச் சுற்றுவர்; யாரையும் நான் ஏறிட்டுப் பார்த்ததில்லை. ஒருவருக்கு மனைவியாகி, ஊர் மெச்ச வாழ ஆசைப்பட்டேன். பருவமடைந்ததும், என் இல்லத்திலேயே சதி உருவாகியதை நான் அறியவில்லை. 'ஒருநாள் இரவு, 10:00 மணி இருக்கும்; நான் உயர்வான ஸ்தானத்தில் வைத்து பூஜிக்கும் அவர் உள்ளே வந்தார். நன்றாகக் குடித்திருந்தார்; என் படுக்கையில் அமர்ந்தார். அதை, நான் வித்தியாசமாக நினைக்கவில்லை. போதையில் என்னை கட்டிப் பிடித்த போதுதான், நிலைமையை உணர்ந்து, அவரிடமிருந்து என்னை விடுவித்துக் கொள்ள போராடினேன். அப்போது, என் தலை எதிலோ, 'டங்' என்று மோத, நினைவிழந்தேன்.'விடிந்தது; எனக்கு இனி விடிவில்லை என்று உணர்ந்து கொண்டேன். ஆம்... அன்றிரவு நினைவற்ற நிலையில், நான் பலாத்காரம் செய்யப்பட்டேன். அதன்பின், பல இரவுகள், இது தொடர்ந்தது. கரு தரித்தேன்; கலைத்தனர். மீண்டும் ஒருமுறை; மீண்டும் கலைப்பு.'வாழ்க்கையே வெறுத்தது. இந்த நிலை, மனதால் கூட நினைத்துப் பார்க்க முடியாத ஒருவரால், ஏற்பட்டது. விரக்தியாலும், வேதனையாலும், மனமொடிந்து கிடந்தேன். என் வாழ்விலும் பசுமை உண்டு என்ற எண்ணம், ஒருவரை சந்தித்ததும் எனக்கேற்பட்டது.'அவர் கால்பந்தாட்டக்காரர்; நான் அவரை விரும்பினேன். இந்நிலையில், எனக்கு திருமணம் பேசினர். மணமகன் நீங்கள் என்றனர். குழம்பித் தவித்தேன். திருமண நாளும் நிச்சயிக்கப்பட, வெள்ளம் தலைக்கு மேல் போன பின், சாண் என்ன முழம் என்ன என எண்ணி, சம்மதம் தெரிவித்தேன்.'உங்களைக் கைப்பிடித்தேன்; அதுவரை, ஒரு சினிமா நடிகரை தானே மணக்கப் போகிறோம் என்ற அளவில், என் மனம் நிம்மதியடைந்திருந்தது. காரணம், கலையுலகைப் பற்றி நான் கேள்விப்பட்ட செய்திகள், என்னை இத்திருமணத்துக்கு சம்மதிக்கச் செய்தது...' என்றாள். 'திரை உலக கலைஞர்களைப் பற்றி அப்படி என்ன கேள்விப்பட்டாய்?' என்றேன்.'சினிமாத்துறையினரின் வாழ்க்கையில் எந்த வரைமுறையும் கிடையாது. எவ்விதக் கட்டுப்பாடுமின்றி சுதந்திரமாக வாழ்பவர்கள் என்று கேள்விப்பட்டு இருந்தேன். அதிலும், நடிகர்கள், பல பெண்களுடன் சரளமாக பழகுவர்; இஷ்டம் போல் நடந்து கொள்வர். கற்பு, கட்டுப்பாடு, ஒழுக்கநிலை பற்றியெல்லாம் கவலைப்படாதவர்கள் என்று கேள்விப்பட்டிருந்ததால், என் வாழ்க்கையில் எவ்வித குறுக்கீடும் இருக்காது என்று நினைத்து, இத்திருமணத்துக்கு சம்மதித்தேன். 'ஆனால், நான் நினைத்ததற்கு மாறாக நீங்கள் இருந்தீர்கள். என்னை, உள்ளங்கையில் வைத்து தாங்கினீர்கள்; புடவைக் கடைக்கு அழைத்துச் சென்று, ஒரே நாளில், 20 புடவைகள் வாங்கித் தந்தீர்கள். உங்களின் அன்பு, என்னை பயப்பட வைத்து விட்டது.'தான் ஒழுக்கக் கேடாக இருந்தாலும், தன் மனைவி தூய்மையானவளாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிற ஆண்களின் எண்ணத்தை ஏனோ சிந்திக்க மறந்தேன். என்னை மன்னித்து விடுங்கள்; வாழ்க்கையில் தவறியவள் நான். உங்கள் அன்பை ஏற்று, வாழத் தான் துடித்தேன். ஆனால், என் உள்ளம், 'நீ துரோகம் செய்கிறாய்...' என, இடித்துரைத்ததால், இனியும் மறைக்கக் கூடாது என்று, உண்மையை சொல்லிவிடத் துணிந்தேன்.'நான் தவறியவள் தான்; ஆனால், தெரிந்து செய்தவள் அல்ல. சூழ்நிலையும், பலாத்காரமும் என்னை மாற்றி விட்டது. இனி, என்னை ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்ளாததும் உங்கள் முடிவைப் பொறுத்தது. என்னை மன்னியுங்கள்...' என்று சொல்லி, 'ஓ'வென்று அழுதாள்.'என் ஷீலாவா... இப்படி...' என நினைத்து, பிரமை பிடித்து அமர்ந்திருந்தேன். மது அருந்திய மயக்கம் தணிந்து விட்டது. என்னால் அவளை கோபிக்கவோ, தண்டிக்கவோ முடியவில்லை. மாறாக, 'இதை ஏன் என்னிடம் சொன்னாள்... இதைச் சொல்லாமலேயே இருந்திருக்கக் கூடாதா...' என்று நினைத்தேன். முதலில், 'என்ன சொல்லப் போகிறாள்... தான் கெட்டுப் போயிட்டதாக சொல்லத் தான் இவ்வளவு பீடிகை போடுகிறாளோ...' என நினைத்து, அப்படிச் சொன்னால், 'நடந்தது நடந்து விட்டது; கவலைப்படாதே என்று சொல்லிவிடலாம்...' என, அலட்சியமாக எண்ணிய நான், உண்மையிலேயே அவள் அப்படிச் சொன்னதும் அதிர்ந்து விட்டேன். 'இனி, இவளுடன் வாழ முடியுமா...' என, தோன்றியது.'ஷீலா... தூங்கு; காலையில் பேசிக்கலாம்...' என்று கூறி, அவளை சமாதானப்படுத்தி தூங்க வைத்தேன். என்னருகே அவள் படுத்திருந்தாள்; சிறிது நேரத்தில் தூங்கியும் போனாள்.தூக்கத்தில் அவள் முகத்தைப் பார்த்தேன். தன் மனப்பாரத்தை இறக்கி வைத்து விட்டோம் என்ற நிம்மதி அதில் தெரிந்தது.ஆனால், நானோ, தூங்க முடியாமல் தவித்தேன்.'ஆஹா... என்ன அழகான கண்கள், நிர்மலமான முகம், இவளா இப்படி...' என எண்ணி எண்ணி, மாய்ந்து போனேன். 'இவள் ஏன் இதை என்னிடம் சொன்னாள்... சொல்லாமலேயே மறைத்திருந்தால், வாழ்க்கை நிம்மதியாக இருந்திருக்குமோ... எவ்வளவு பெரிய குண்டை தூக்கிப் போட்டு, இப்படி நிம்மதியாகத் தூங்குகிறாளே...' என்று எண்ணி, என் மனம் அலைபாய்ந்தது.மனதைக் கட்டுப்படுத்த மருந்தை எடுத்தேன். ஆம்... இனி, எனக்கு அருமருந்து, 'விஸ்கி' தானே! நிலை தடுமாறி, அடித்தால் கூட சுரணை வராத அளவுக்கு குடித்து, மயங்கி விழுந்தேன்.- தொடரும்- முகில்நன்றி: சிக்ஸ்த்சென்ஸ் சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !