சேர நன்நாட்டினில்... - கேரளா பயணக் கட்டுரை! (1)
அந்த மாதத்தில், கன மழை, வெள்ளப் பெருக்கால் கேரளா, வரலாறு காணாத பேரழிவை சந்தித்தது. மழை, வெள்ளம், மண் சரிவு காரணமாக, 500க்கும் மேற்பட்டோர் பலியாயினர். லட்சக்கணக்கான மக்கள், வீடுகள், உடைமைகளை இழந்து, பரிதவித்தனர்.கொச்சி சர்வதேச விமான நிலையம், 15 நாட்கள் மூடப்பட்டது. பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் சேதம் அடைந்தன. மலை பிரதேசமான மூணாறை இணைக்கும் பல சாலைகள் துண்டிக்கப்பட்டன.கிட்டத்தட்ட, நான்கு மாதங்கள் கடந்த நிலையில், அம்மாநில சுற்றுலா துறை அழைப்பின்படி, ஐந்து நாள் பயணமாக, கேரளாவுக்கு போக வாய்ப்பு கிடைத்தது.மஹாராஷ்டிரா மாநிலம், புனேயில் இருந்து இரண்டு பேர், குஜராத் மற்றும் ராஜஸ்தானிலிருந்து தலா ஒருவர், தென் மாநிலங்களில், அதுவும், தமிழகத்திலிருந்து, 'தினமலர்' நாளிதழ் என, ஐந்து பத்திரிகைகளுக்கு மட்டுமே, கேரள சுற்றுலா துறை அழைப்பு விடுத்திருந்தது.என்னை தேர்வு செய்து, 'கேரளாவுக்கு ஐந்து நாள் சென்று, அங்குள்ள நிலையை அறிந்து வாருங்கள்...' என, ஆசிரியர் கூற, வாய்ப்புக்கு, நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்து, மகிழ்ச்சியுடன், பயணத்துக்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தேன்.சென்னையில் இருந்து கொச்சிக்கு, விமானத்தில், ஒன்றே கால் மணி நேர பயணம். இதற்கு முன், ஒரே ஒரு முறை, சென்னை - மதுரை இடையே, சோகமானதொரு தருணத்தில், விமானத்தில் சென்றிருந்தாலும், மகிழ்ச்சியான விமான பயணத்திற்காக, இந்த வாய்ப்பளித்த, அனைவருக்கும், மானசீகமாக நன்றி கூறினேன்.பிரமாண்டமான சென்னை மாநகரம், சிறுசிறு சதுரங்களாக மறைந்து, வெண்பஞ்சு மேகங்களுக்கு மத்தியில், விமானம் மிதந்து சென்றதை, துளித் துளியாக ரசித்தேன்.கொச்சியில், மதியம் இறங்கியதும், வெயில் சுள்ளென முகத்தில் அறைந்தது. வெள்ளத்தால் இந்நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டதன் சுவடு, துளி கூட தெரியவில்லை. அனைத்தையும் மறந்து, மக்கள் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தனர். நகரம் முழுவதும், சினிமா பேனர்கள், போஸ்டர்கள், அரசியல் விளம்பரங்கள் ஆக்கிரமித்து இருந்தன.விமான நிலையத்தில் இருந்து, தங்கும் விடுதிக்கு காரில் சென்றபோது, டிரைவரிடம் பேசினேன். அவர், 'வெள்ள நிவாரணமாக, நாடு முழுவதிலிருந்து உதவிகள் குவிந்தன. குறிப்பாக, தமிழகத்தில் இருந்து கிடைத்த நிதியுதவி, ஏராளமான பொருளுதவிகள், எங்களை மீண்டெழ செய்தது...' என, நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.நான் சென்றபோது, கொச்சி நகரம், பரபரப்பாகவே இருந்தது. தமிழகம் போலவே, இங்கும் அரசே மதுபானங்களை விற்பனை செய்கிறது. ஆனால், 'பார்' வசதி கிடையாது. நம் ஊர் போல, தெருக்களில் நின்று, யாரும் மது அருந்துவதை பார்க்க முடியவில்லை. இது தவிர, ஒரு சில, 'பர்மிட் பார்'கள் உள்ளன.மதுபான கடைகளின் வாசல்களில், பெண்கள், குழந்தைகளுடன் நின்று, லாட்டரி சீட்டு விற்பதைப் பார்க்க, பரிதாபமாக இருந்தது. அதேவேளை, லாட்டரி அரக்கனை, நம் ஊரில், முன்னாள் முதல்வர், மறைந்த ஜெயலலிதா, எப்போதோ ஒழித்து கட்டியதை நினைத்து, பெருமிதமாகவும் இருந்தது.வணிக வளாகங்கள், திரையரங்குகள் என, சென்னைக்கு சற்றும் குறைவில்லாத நகர தன்மைகள் இங்கும் நிறைந்து காணப்படுகின்றன. ஆட்டோ டிரைவர்கள், நியாயமான கட்டணம் வசூலிக்கின்றனர். குறைந்த கட்டணமே, 30 ரூபாய் தான். அந்த குறையை நிவர்த்தி செய்யவோ என்னவோ, டாக்சி டிரைவர்கள், அநியாய வாடகை வசூலிக்கின்றனர். கொச்சியில், மெட்ரோ ரயில் ஓடுகிறது. மேலும், விரிவாக்கம் செய்து கொண்டிருப்பதால், நகரில் பயங்கர போக்குவரத்து நெரிசல். அதே நேரம், கொச்சி, கோட்டயம் என, எந்த நகரமாக இருந்தாலும், இரவு, 8:30 மணிக்கெல்லாம் கடைகளை, பூட்டி விடுகின்றனர்.பிரமாண்ட ஜவுளி கடைகள், வணிக வளாகங்கள் என, எதுவுமே, 9:00 மணிக்கு மேல் திறந்திருப்பது இல்லை. இதனால், இரவு நேர போக்குவரத்து நெரிசல் இல்லை; சில உணவு விடுதிகள் மட்டுமே திறந்திருக்கின்றன. நேரத்தில் துாங்கி, அதிகாலை எழும் வழக்கமுள்ளவர்கள் போலும்.கொச்சியில், ஒரு விடுதியில் தங்கி, ஓய்வு எடுத்த பின், மறுநாள் காலை, 10:00 மணிக்கு, 128 கி.மீ., பயணமாக, சாலை வழியே, மூணாறு கிளம்பினோம்.— தொடரும்.எஸ்.ஜெயசங்கர நாராயணன்