உள்ளூர் செய்திகள்

கிறிஸ்துமஸ் மரம்!

உலகிலேயே கிறிஸ்துமஸின் போது, கிறிஸ்துமஸ் மரம் வைப்பது, முதன் முதலில் ஜெர்மனியில் தான் துவங்கியது. 15ம் நுாற்றாண்டிலேயே அங்கு, கிறிஸ்துமஸ் மரம் நடுவது பழக்கத்தில் இருந்துள்ளது.ஒரிஜினல் நார்வே ப்ரூஸ் மரத்தை வெட்டி, கிறிஸ்துமஸ் மரமாக நட்டு, அதில் மெழுகுவர்த்தி ஏற்றி அலங்காரம் செய்வர். நடுநடுவே ஆப்பிள், பலவிதமான கொட்டைகள், பேரிச்சம்பழம் போன்றவற்றை வைத்து, குழந்தைகளுக்கு அவற்றை பரிசாக வழங்குவர்.மின்சாரம் பிரபலமான பிறகு தான், மெழுகுவர்த்திக்கு பதில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டன. இன்று, எல்.இ.டி., விளக்குகள் பொருத்தப்படுகிறது.பத்தொன்பதாம் நுாற்றாண்டின் மத்தியில் தான், கிறிஸ்துமஸ் மரம் வைக்கும் கலாசாரம் ஐரோப்பாவில் பரவியது. அப்போதே, அமெரிக்காவிலும் பரவ ஆரம்பித்தது.அமெரிக்காவில் வெள்ளை மாளிகையில் வைக்கும் கிறிஸ்துமஸ் மரத்தை, 'ப்ளூரூம்' என அழைக்கின்றனர். வெள்ளை மாளிகையில், 1900ம் ஆண்டுகளிலேயே கிறிஸ்துமஸ் மரம் வைக்க ஆரம்பித்து விட்டனர். அமெரிக்காவில், ராக்பெல்லர் சென்டரின் முன், 1933ம் ஆண்டு முதல் கிறிஸ்துமஸ் மரம் வைக்கப்பட்டு வருகிறது. கிறிஸ்துமஸ் மரத்தின் உச்சியில் நட்சத்திரம் அல்லது தேவதை உருவத்தை வைத்திருப்பர்.கடந்த, 1961ல், கென்னடி, அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த போது தான், ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட, 'தீம்'மில் கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரிப்பது ஆரம்பமானது.வெள்ளை மாளிகை முழுவதுக்கும், ஒரே ஒரு கிறிஸ்துமஸ் மரம் தான் வைப்பர் என, எண்ண வேண்டாம். 1997ல், வெள்ளை மாளிகை முழுமைக்கும், மொத்தம், 36 மரங்கள் வைத்திருந்தனர்.வாடிகனில், செயின்ட் பீட்டர் சதுக்கத்தை ஒட்டிய பகுதியில், கிறிஸ்துமஸ் மரம் வைக்கப்படுகிறது. இந்த கிறிஸ்துமஸ் மரத்தை, ஆண்டுதோறும் ஒரு ஐரோப்பிய நாடு அன்பளிப்பாக வழங்குவது வழக்கம். முதல் கிறிஸ்துமஸ் மரம், இத்தாலியிலிருந்து வந்தது. ரஷ்யாவிலும் கிறிஸ்துமஸ் மரம் வைக்கின்றனர். அங்கு, அக்டோபர் புரட்சி நடந்தபோது மட்டும், கிறிஸ்துமஸ் மரம் வைக்க தடை விதிக்கப்பட்டது.இன்று, ஹாங்காக், ஜப்பான், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் மற்றும் தைவான் உட்பட பல நாடுகளில், பிரபல நிறுவனங்களின் முன்புறம், அலங்கார விளக்குகள் பொருத்தப்பட்டு, கிறிஸ்துமஸ் மரங்கள் வைக்கப்படுகின்றன.இந்தியாவிலும் சர்ச்சுகள், வங்கிகள், பெரிய மால்கள் மற்றும் தொழில் நிறுவனங்களில் கிறிஸ்துமஸ் மரம் வைக்கப்படுகிறது.இதன் பின்னணிக்கு சரியான ஆதாரம் இல்லாவிட்டாலும், இன்று சர்ச்சுகள், கதீட்ரல்கள், வீடுகள் என, அனைத்து இடங்களிலும், விரும்பி கிறிஸ்துமஸ் மரம் வைக்கின்றனர்.தொகுப்பு : எம்.லிடியா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !