குவிப்போம் வெற்றிகளை!
நவ.,17 கந்தசஷ்டிஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று, சூரபத்மனை வென்று, அவனை ஆட்கொண்டார் முருகப்பெருமான். அந்நாளே கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது. திருச்செந்தூர் கடற்கரையில் சூரசம்ஹாரம் நிகழ்ந்ததால், இங்கு, இவ்விழாவை காண்பது விசேஷம்.சூரபத்மன் வதம் தவிர்த்து, கந்த சஷ்டி விழாவிற்கு, மகாபாரதத்தில் வேறு காரணமும் கூறப்பட்டுள்ளது.ஒருசமயம், உலக நன்மையின் பொருட்டு, ஒரு புத்திரனை வேண்டி, ஐப்பசி மாத அமாவாசையன்று துவங்கி, தொடர்ந்து ஆறு நாட்கள் யாகம் நடத்தினர் முனிவர்கள். யாக குண்டத்தில் எழுந்த தீயிலிருந்து, ஒவ்வொரு நாளும் ஒரு வித்து வீதம், ஆறு வித்துகள் சேகரிக்கப்பட்டன. ஆறாம் நாளில் அந்த வித்துகளை ஒன்றாக்கிட, முருகப்பெருமான் அவதரித்தார்; அந்த நாளே, கந்தசஷ்டி!பொதுவாக, முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா ஆறு நாட்கள் நடக்கும். ஆனால், திருச்செந்தூரில், முதல் ஆறு நாட்கள், சஷ்டி விரதம் இருப்பர். ஆறாம் நாள் சூரசம்ஹாரமும், ஏழாம் நாளில் முருகன், தெய்வானை திருக்கல்யாணமும், அடுத்த ஐந்து நாட்களுக்கு, கல்யாண கோலத்தில் ஊஞ்சல் சேவை என, 12 நாட்கள் கொண்டாடப்படுகிறது.விழாவின் முதல் நாள் அதிகாலையில், ஹோம மண்டபத்திற்கு மூலவரின் பிரதிநிதியாக வள்ளி, தெய்வானையுடன் ஜெயந்திநாதர் (முருகன்) எழுந்தருளுவார். அப்போது, முருகனின் வெற்றிக்காக யாகம் துவங்கும். யாககுண்டத்தை சுற்றிலும் சிவன், அம்பிகை, நான்கு வேதங்கள், முருகன், வள்ளி, தெய்வானை, மகாவிஷ்ணு, விநாயகர், சப்த குருக்கள், வாஸ்து பிரம்மா, தேவர்கள், சூரியன், அஷ்டதிக் பாலகர்கள் மற்றும் துவாரபாலகர்கள் ஆகிய தேவதைகளை கும்பத்தில் எழுந்தருளச் செய்வர்.யாக பூஜை முடிந்தவுடன், சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளுவார் ஜெயந்திநாதர். ஆறாம் நாளன்று, தனித்து கடற்கரையில் எழுந்தருளி, சூரனை சம்ஹாரம் செய்வார்.பின், பிரகாரத்திலுள்ள மகாதேவர் சன்னிதியில் எழுந்தருளுவார். அப்போது, சுவாமியின் எதிரே, ஒரு கண்ணாடியை வைப்பர். கண்ணாடியில் தெரியும் ஜெயந்திநாதரின் பிம்பத்திற்கு, அபிஷேகம் செய்வார் அர்ச்சகர். இதை சாயாபிஷேகம் என்பர். 'சாயா' என்றால் நிழல் எனப்பொருள்.போரில் வெற்றி பெற்ற முருகனை குளிர்விக்கும் விதமாக, இந்த அபிஷேகம் நடக்கும். இந்நிகழ்ச்சிக்குப் பின், சன்னிதிக்கு திரும்புவார் முருகன். அத்துடன் சூரசம்ஹார வைபவம் நிறைவடையும்.மறுநாள், முருகன் தெய்வானை திருக்கல்யாணம் நடக்கும். அன்று காலை, தபசு மண்டபத்தில் முருகனை மணம் புரிய வேண்டி தவமிருப்பாள் தெய்வானை. மாலையில் குமரவிடங்கர் (முருகனின் உற்சவர் வடிவம்) முருகனின் பிரதிநிதியாக மயில் வாகனத்தில் தபசு மண்டபம் சென்று நிச்சயதார்த்தம் செய்து கொள்வார். நள்ளிரவில், திருக்கல்யாண மண்டபத்தில் இருவரும் எழுந்தருள, அங்கு திருமணம் நடக்கும். மறுநாள், தெய்வானையுடன் வீதியுலா வருவார் சுவாமி.இந்த இனிய காட்சிகளைக் காண, திருச்செந்தூர் செல்வோம்; செந்தில்நாதன் அருளுடன் வெற்றிகளை குவிப்போம்!தி.செல்லப்பா