ஒத்தையடிப் பாதை!
பெரும் பொறியாளர்களால் படாதபாடுபட்டு உருவாக்கப்பட்ட சாலைகளை விட, சாதாரண மக்களால் உருவாகும் ஒத்தையடிப் பாதை, அதிக அளவில் புழக்கத்தில் இருக்கும். நாளடைவில் அந்த ஒத்தையடிப் பாதையே, பெரும் சாலையாகவும் மாறும். அப்படி மாறிய வரலாறு...குருவை எனும் கிராமத்தில், பீமய்யா என்ற குயவர் வாழ்ந்து வந்தார். நேர்மை தவறாமல் தொழில் செய்து வந்த அவர், இறை பக்தி மிக்கவர். அவருக்கு ஒரு கால் ஊனம். அதைப் பற்றிக் கவலைப்படாமல், கடவுள் மீது அதிக பக்தி கொண்டு, நன்றி சொல்லி, வணங்குவார்.குயவரின் பக்திக்கு வசப்பட்ட பெருமாள், புரட்டாசி சனிக்கிழமையன்று, அவர் கனவில், தன் திருவடியைக் காண்பித்து, 'பக்தா, உன் பக்தியின் பெருமையை எப்போது அடுத்தவர் கூற, நீ அறிகிறாயோ அன்று உனக்கு முக்தி அளிப்பேன்...' என்று கூறி, மறைந்தார்.கனவில், பெருமாளை தரிசித்தவர், தான் கண்ட வடிவத்தை அப்படியே களி மண்ணால் வடித்து வைத்தார். அத்துடன், புரட்டாசியில் ஒவ்வொரு சனிக்கிழமையும், விரதமிருந்து வழிபாடு செய்தார்.விரதமும், வழிபாடும் கூடக்கூட, தன்னிலை மறந்த குயவர், தான் பிசைந்த களி மண்ணையே சிறு சிறு மலர்களாக பாவித்து, தான் வடித்து வைத்திருந்த இறைவனின் திருவடியில் சமர்ப்பித்து வந்தார்.அதேசமயம், ஏழுமலையானிடம் பக்தி கொண்ட அரசர் ஒருவர், இறைவனை தங்க மலர்களால் அர்ச்சிக்க ஏற்பாடு செய்திருந்தார். நாளாக நாளாக, வழிபாடு முடிந்து பார்த்தால், தங்க மலர்களோடு, களி மண் மலர்கள் சிலவும் இருந்தன. குழப்பத்தில் ஆழ்ந்த அரசர், 'பெருமாளே, என்ன சோதனை இது...' என புலம்பி, முறையிட்டார்.'மன்னா, எனக்கு பீமய்யாவின் வழிபாடே உகப்பானது. நீயே போய்ப் பார் அதை...' என, அரசனின் கனவில் கூறி மறைந்தார், இறைவன்.உடனே, குயவரின் குடிசைக்கு போனார், அரசர்.களி மண் படிந்த ஆடையுடன், தன்னிலை மறந்து, களி மண்ணையே மலர்களாக்கி, எதிரிலிருந்த வேங்கடாசலபதியின் திருவடிக்கு இட்டுக்கொண்டிருந்த குயவரை கண்டார். கண்கள் மூடியிருந்த நிலையிலும், அவற்றிலிருந்து கண்ணீர் பெருகியதை கண்டார், அரசர்.ஓடிப்போய் அப்படியே கட்டிப்பிடித்து, 'ஐயா, நான் என்னதான் தங்க மலர்களாலேயே வழிபாடு செய்தாலும், களிமண் மலர் கொண்டு வழிபாடு செய்த உங்கள் அருளால் தான், கனவில் கார்மேனியன், தன் எழில் வடிவத்தைக் காட்டி அருளினார்...' என்று, குயவரின் ஆழமான பக்தியைப் பாராட்டவும் செய்தார்.குயவரின் பக்தியை அடுத்தவர்கூற கேட்டதும், அவருக்கு முக்தி கிடைக்கும் என்று இறைவன் கூறியது உண்மையானது.மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என, கண்ணனே கீதையில் கூறியிருந்தாலும், புரட்டாசி சனிக்கிழமை, ஏழுமலையானுக்கு உகந்த நாளாக கருதுவதற்கு காரணம், குயவரின் துாய்மையான பக்தி தான். பி.என்.பரசுராமன்