உள்ளூர் செய்திகள்

தருமர் பார்வையும், துரியோதனன் பார்வையும்!

ஞாயிற்றுக்கிழமை —பிரகாசம் மதிய சாப்பாட்டை முடித்துக் கொண்டபின், மனைவி மரகதத்துடன், முற்றத்தில் அமர்ந்து, வழக்கம் போல் பேச்சுக் கச்சேரியை துவங்கினார். பொதுவாக, வெளிநாட்டில் இருக்கும் மகன், மருமகள், பேத்தி குறித்தும், வேலைக்காரி கேட்டிருக்கும் சம்பள உயர்வு, தங்கம் விலைச் சரிவு, சீனாவின் அத்துமீறல் என்று, விமர்சனம் போய்க் கொண்டிருக்கும்; இடையிடையே தன் சொந்த ஊரான பேச்சிப்பள்ளம் குறித்தும் பேசுவார்.பேச்சிப்பள்ளம், ஒரு சிறிய ஊர் என்றாலும், ஆறு, ஏரி, தோப்பு, வயல்வெளின்னு பசுமையாய் இருக்கும். தம் இளம் வயதை, ஊரில் வெகு இன்பமாய் கழித்தவர் என்பதால், சென்னை வந்து இரண்டு தலைமுறையான பின்பும், ஊரை மறக்க முடியவில்லை. பத்து விஷயம் பேசினால், அதில் இரண்டு, பேச்சிப்பள்ளத்தைப் பற்றி இருக்கும். இப்போது, பேச்சு முழுக்க பேச்சிப்பள்ளத்தை பற்றித்தான். காரணம், நேற்று வந்த சங்கரன் சார்.சங்கரன் ரிட்டையர்டு போஸ்ட்மேன்; உறவினர் கல்யாணத்துக்கு சென்னை வந்தவர், அப்படியே பிரகாசம் வீட்டுக்கும், ஒரு விசிட் அடித்தார். மனதுக்கு பிடித்தமானவர்களை, எப்போது பார்த்தாலும் மகிழ்ச்சி தான். வரவேற்று, உபசரித்து, பரஸ்பரம் நலம் விசாரித்தபின், 'எப்படி இருக்குங்க நம்ம ஊரு...' என்று, குழந்தையைப் போல் ஆவலாக கேட்டார். அவர் சிரித்து, 'நீ இல்லைங்கற குறையத் தவிர வேறயில்லை. முன்ன விட, ஊரு ரொம்ப வசதியா இருக்கு...' என்றவர், சிமென்ட், இணைப்புச் சாலை, ஊரை முத்தமிட்டு செல்லும் மினி பஸ், தரம் உயர்த்தப்பட்ட பள்ளிக்கூடம், பெருகியிருக்கும் வேலை வாய்ப்புகள் என்று, பட்டியலிட்டு, 'பக்கத்து டவுனுக்கு, கோக், பீட்சா, பர்கர் வந்துட்டா கூட, நம்ம ஊரு இன்னமும் இயற்கை வளத்தை இழக்கல. உலகமே வறண்டாலும், சிவன் கோவில் குளத்து தண்ணீ வத்தாது. அல்லியும், தாமரையும் பூத்து குலுங்குற அந்தக் குளத்திலருந்து தான், ஊர் மக்கள் குடி தண்ணீ எடுக்கறாங்க. இயற்கை வேளாண்மை, நீர் மேலாண்மைன்னு, புது தொழில் நுட்பத்தில, பயிரு நல்லா செழித்து வளருது. சென்னையில பாக்க முடியாத சிட்டுக்குருவிகளும், கரிச்சானும் நம்ம ஊரு பக்கம் சந்தோஷமா வாழுதப்பா. வயல்ல கொக்குங்க, ஒத்தக்கால்ல தவம் இருக்கு. ஊணாங்கொடியும், ஊமத்தச் செடியும் நம்ம ஊர்லதான் பார்க்க முடியும்...' என்று, பெரிய பட்டியலே வாசித்தார்.கவித்துவமான, அவர் பேச்சை கேட்டதில், அப்போதே அவருடன் சேர்ந்து ஊருக்கு, ஒரு நடை போய்விட்டு வர வேண்டுமென்று தோன்றியது பிரகாஷுக்கு. மேற்கொண்டு, கேசவன் மகன் டாக்டராகியிருப்பதையும், சிங்காரத்தின் மகள், இன்ஜினியருக்கு வாழ்க்கைப்பட்டு, லண்டனுக்கு சென்ற தகவலையும் சொன்னார். நிறைய பேருக்கு ஐ.டி., படிக்க வாய்ப்பு கிடைத்து, படித்து வருவதாகவும், கணேசன் வாத்தியாருக்கு நல்லாசிரியர் விருது கிடைத்திருப்பது பற்றியும், பெருமையாகச் சொல்லி, சற்று ஓய்வெடுத்து விட்டுச் சென்றார்.அதைப்பற்றி பேசிக் கொண்டிருக்கும்போது, வாசலில் வந்து நின்ற ஆட்டோவில் இருந்து, ஒரு ஆள் இறங்கி, குழப்பமாக வீட்டைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தார். யாராக இருக்கும் என, நினைத்து, வெளியில் வந்து பார்க்க, அது பல்ராம்! ஊர்க்காரர்.''வந்து ரொம்ப நாளாச்சா, வீடு அடையாளமே தெரியல. அப்போ வீட்டுக்கு பக்கத்துல, காலி மனைகளா இருந்துச்சு. திரும்பி பார்க்கறதுக்குள்ள, 'மளமள'ன்னு கட்டடங்களா பெருகிடுச்சே,'' என்று, வியந்தபடியே உள்ளே வந்த பல்ராம், ''இப்ப என்ன விலை போகுது கிரவுண்டு,'' என்று கேட்டார்.''இடம் வாங்க வந்தியா,'' என்று, விசாரித்தார் பிரகாசம்.''ஹூம்... எங்க இடம் வாங்கறது... ஊரில இருக்கற எட்டு ஏக்கர் நிலத்தையும், பம்பு செட்டையும், வித்துக் கொண்டாந்தாக்கூட, அரை கிரவுண்டு வாங்க முடியாது போலிருக்கே... எப்பவும் நீ அதிர்ஷ்டசாலி தான். மலிவு விலைக்கு கூவிக் கூவி வித்தபோது, சல்லிசா வாங்கிப் போட்டுட்ட,'' என்றபடி, மஞ்சள் பையைப் பிரித்து, உள்ளிருந்து பத்திரிகை ஒன்றை உருவி, ''பையனுக்கு கல்யாணம் வச்சிருக்கேன்,'' என்றார்.மரகதம், வெயிலுக்கு இதமாக, சர்பத் கொண்டு வந்து கொடுத்தாள்.சர்பத் சாப்பிட்டதில், கொஞ்சம் ஆசுவாசம் அடைந்த பல்ராமிடம், ''ஊரு நெலவரம் எப்படி,'' என்று, கேட்டது தான் தாமதம்...வீட்டிற்குள் இருக்கும் நவீன சாதனங்கள், வாழ்க்கை சவுகரியம் எல்லாத்தையும் பார்வையால் ஆராய்ந்து கொண்டிருந்த பல்ராம், ''அது கிடக்கு; ஊரா அது. இருக்க இருக்க குட்டிச்சுவரா போய்கிட்டிருக்கு,'' என்று, முகம் சுளித்தார்.''என்னப்பா சொல்ற...''''அட ஆமாங்கறேன்; மனுஷங்களுக்கெல்லாம், நல்ல புத்தியே கிடையாது. அகப்பட்டதையெல்லாம் சுருட்ட அலையறானுங்க. காசு சேர சேர, அவனவனுக்கும் குளிர் விட்டுப் போச்சு; யாரும் யாரையும் மதிக்கறதில்ல. அந்த ஊரிலே இருக்குறதுக்கு, பதிலா பேசாம இந்தப் பக்கமா வந்துட்டாலாவது, உங்களப் போல வசதியா செட்டிலாய்டலாம்,'' என்றான் பல்ராம்.''என்னப்பா... இப்படி சொல்றே. நம்ம ஊரப் பத்தி இங்கே பெருமையா பேசிக்கிட்டிருக்கேன். சங்கரன் சார் கூட நல்லபடியா தானே சொல்லிட்டு போனாரு.''''அனாசாரத்தை தன் வாயால் ஏன் சொல்லணும்ன்னு அடக்கி வாசிச்சிருப்பாரு. நான் எதையும் வெளிப்படையாவுல சொல்லிடுவேன்.''''அதுக்காக குட்டிச்சுவர்ன்னா சொல்லுவாங்க.''''நாம சின்னப்புள்ளயா இருந்த காலத்தில, ஏதோ கொஞ்சம் நல்லா தான் இருந்துச்சு. இப்ப எல்லாம் மோசம். தர்மலிங்கம் தெரியுமில்ல... முன்னாள் பஞ்சாயத்து தலைவர். அவர் பொண்ணு, எவனோடயோ ஓடிப் போயிருச்சு. முன்னெல்லாம் இப்படி நடந்திருந்தா அப்பன்காரன் தூக்குப் போட்டு சாவான். ஆனால், இந்த ஆள் என்னடான்னா மானமில்லாம, தலைய நிமித்திக்கிட்டு, தெருவுல நடக்கறாரு. நம்ம நடராஜன் மகன் இருக்கான்ல்லே... அவன் சீட்டு நடத்தி, லவட்டிக்கிட்டு தலைமறவாயிட்டான். வாத்தியார் மகன் சொக்கன கவுன்சிலரா, நிறுத்தினோம். அவன் அத்தனையும், அடிச்சு உலையில போட்டுகிட்டு மாளிகை கட்றான். நம்ம காலத்தில பொண்ணும், பையனும் ஒண்ணா நின்னு பேசி பாத்திருப்போமா... இப்ப ஏழாங்கிளாஸ் பொடிசுங்க கூட, ஜோடி போடுதுங்கன்னா பார்த்துக்க.''என்னத்துக்கு வாயை கிண்டுற. என் மகன் கல்யாணத்த, இன்னும் ரெண்டு வருஷத்துக்கு தள்ளி வெச்சுக்கலாம்ன்னு இருந்தேன். அதுவரைக்கும் விட்டு வைக்க மாட்டானுங்க போலிருக்கு. அவனவன், தன் பொண்ணுங்கள என்னென்னமோ சொல்லி ஏவி விடறானுங்க. எப்படியும், இவன கவிழ்த்துப்புடனும்ன்னு மேலே மேலே வந்து விழறாளுங்க... அதிலும், ஒரு படி மேலே போய், நம்ம நாராயணசாமி இருக்காருல்ல அவரு, தன்னோட பேத்திய, என் மகன் கெடுத்துப்புட்டான்னு பஞ்சாயத்தே வைக்கப் பார்க்கறாரு...'' ''யாரு... தியாகி நாராயணசாமியா?''''தியாகி இல்ல; துரோகி. நீ அந்த காலம் போல, நம்ம ஊர நினைச்சுடாத. உன்னை போல ஆளுங்க பாதம் படவே லாயக்கில்லாத ஊரா போயிடுச்சு. அதான், கல்யாணத்தையே பக்கத்தூரு மண்டபத்துல வச்சிருக்கேன். பையன் கல்யாணத்த முடிச்ச கையோட, நானும் ஊரை காலி செய்திடலாம்ன்னு இருக்கேன்,'' என்று எழுந்தார். ஒரு முறுவலுடன் வழியனுப்பினார் பிரகாசம்.''என்னங்க... உங்க ஊரப் பத்தி ஆளுக்கொரு விதமாய் பேசறாங்க,'' என்று, கேட்டாள் மரகதம்.''பல்ராம் சொல்றதக் கேட்டு, ஒரு தீர்மானத்துக்கு வந்திடாதே. ஆரம்பத்திலிருந்தே, இவன் பொறாமக் குணம் பிடிச்சவன். தன்னை விட யாரும் நல்லா இருந்துறக் கூடாது; உடனே ஏதாவது குற்றம் குறை சொல்லிக்கிட்டிருப்பான். அந்த குணம், இத்தனை வயசாகியும் இன்னும் அவனுக்கு மாறல. இப்ப கூட கவனிச்சியா... பத்திரிகை கொடுக்க வந்தவன், என்னையோ உன்னையோ பாத்தானா... நல்லா இருக்கீங்களா, பையன் என்ன பண்றான்னு, ஒரு வார்த்தை விசாரிச்சானா... வந்ததிலிருந்து வீட்டையும், வசதியையும் தானே எடை போட்டுக்கிட்டு இருந்தான். இந்த இடத்த வாங்க, அந்த நாளிலே நான் எத்தனை கஷ்டப்பட்டேன்னு அவனுக்கும் தெரியும். இருந்தாலும், என்ன சொன்னான் பாத்தியா... கூவிக் கூவி வித்தாங்களாம். மலிவு விலையில், வளைச்சு போட்டுட்டேனாம்; தான் வாங்கலையேங்கற ஆதங்கம். அதே நேரம், ஊருல பம்ப் செட்டோடு, எட்டு ஏக்கர் நிலம் இருக்கிற பெருமைய சொல்லிக் காட்டி, எனக்கு அங்கே வீட்டத் தவிர, வேற சொத்து இல்லங்கறதையும், குரூரத்தோடு குறிப்பிடுறான். இதிலிருந்து தெரியல, அவன் பேச்சில எந்த அளவுக்கு பொய் கலந்திருக்கு,'' என்றேன்.''அப்படின்னா சங்கரன் சார் சொன்னதெல்லாம் உண்மை. பல்ராம் சொன்னதெல்லாம் பொய்ன்னு சொல்றீங்களா...''''ஒரேயடியாய் அப்படி சொல்லிட முடியாது. எங்கேயும் நல்லதும் கெட்டதும் கலந்துதான் இருக்கும். ஆனா, அது அவரவர் பார்வையைப் பொறுத்தது. பல்ராம் கண்ணுக்கு ஓடிப் போனவங்களும், சீர்கெட்டவங்களுமா தெரியுது. ஆனா, சங்கரன் சார் பார்வையில டாக்டர், இன்ஜினியர், நல்லாசிரியராக வர்றவங்களைத் தெரியுது. அவர் நல்லவர்; எல்லாத்துலயும் நல்லதையே பாக்கிறார். பல்ராம் அவன் தன்மையோட பாக்கிறான். தியாகி நாராயணசாமி ஊருக்கே கவுரவம் சேர்க்கிற நல்ல மனுஷன். தியாகி பென்ஷனக் கூட வாங்க மறுத்தவர். அவருக்கு பல்ராம் உறவுக்காரன். அந்த அடிப்படையில, தன் பேத்திய, பல்ராம் மகனுக்கு கட்டிக் கொடுக்க வற்புறுத்தியிருப்பார். தவிர, இவன் சொல்லுறது போல, கீழ்த்தரமாக நடந்திருக்க மாட்டார்.''ஒரு சமயம் பகவான் கண்ணன், தருமருக்கும், துரியோதனனுக்கும், ஒரு பரீட்சை வைச்சாராம்; தருமர கூப்பிட்டு, 'ஊருக்குள்ள போயி கெட்டவங்க எத்தனை பேர்ன்னு எண்ணிட்டு வா'ன்னு சொல்லியிருக்காரு. அதே போல், துரியோதனகிட்டேயும், 'ஊர்ல நல்லவங்க எத்தனை பேர் இருக்காங்கன்னு கணக்கெடுத்துட்டு வா'ன்னு சொன்னாராம். ரெண்டு பேரும் ஊருக்குள்ள போயி, சல்லடை போட்டு அலசிவிட்டு, கண்ணன் எதிரில வந்து நின்னாங்களாம். அப்போ தருமர் சொன்னாராம்... 'நல்லா தேடிப் பாத்துட்டேன். ஒரு கெட்டவனக் கூட காணோம் எல்லாருட்டயும் ஏதாவது ஒரு நல்ல குணம் இருக்குது'ன்னு சொன்னாராம். ஆனா, துரியோதனனோ, 'ஒரு நல்லவங்களக் கூட காணோம். எல்லாருமே பொறாமைக்காரர்களா, வஞ்சகர்களா, இருக்கறாங்க'ன்னு, சொன்னானாம். அது மாதிரி தான், இந்த பல்ராம் கதையும்,'' என்றார்.''அப்படின்னா சங்கரன் சார் தருமரு, பல்ராம் துரியோதனனா,'' என்று கேட்டு, சிரித்தாள் மரகதம்.''துரியோதனன அப்படி ஒரேயடியாய் கெட்டவன்னு சொல்ல முடியாது. ஒரு இக்கட்டான நேரத்தில, கர்ணன ஆதரிச்சு, அவனுக்கு நாட்டையும் கொடுத்து, அரசனாக்கி அழகு பாத்த பெருந்தன்மை, அவன்கிட்ட இருந்துச்சு. அதுபோல பல்ராமன்கிட்டயும் நல்ல குணமும் இருக்கும். இப்ப என்னமோ, அந்தக் குணம் வெளிப்படல,'' என்றார் பிரகாசம்.அந்த மட்டுக்கு, தன் கணவனிடம், கெட்டவனிடமும் நல்லதைப் பார்க்கும், நல்ல தன்மை இருக்கிறதே என்று, மனதுக்குள் பெருமைபட்டு, எழுந்து போனாள் மரகதம். படுதலம் சுகுமாரன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !