எமனின் எதிரிகள்!
சிவலிங்கத்தின் கண்களில் வழியும் ரத்தத்தை நிறுத்த, தன் கண்ணையே தானம் கொடுத்து, கண்ணப்ப நாயனாராக புராணத்தில் என்றும் போற்றப்படுகிறார் திண்ணன் என்ற கண்ணப்பர்.அந்த தானம் கடவுளின் மேல் கொண்ட காதலால் நடந்தது. ஆனால், எத்தனையோ பேர், யார் யாருக்கோ, எதற்கு கொடுக்கிறோம் என்று கூட தெரியாமல், தங்கள் ரத்தத்தை தானமாக கொடுத்து, பல ஆயிரக்கணக் கானவர்களின் உயிர்களை காப்பாற்றும் கடவுளாகின்றனர். பார்க்கப்போனால், இவர்களும் ஒரு விதத்தில் போராளிகள் தான். காரணம், தங்கள் ரத்தத்தை சிந்தி, மரணத்தின் (எமனின்) பிடியில் சிக்கித் தவிப்பவர்களை, காப்பாற்றுவதால்!இப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான், மதுரை செஞ்சிலுவைச் சங்க செயலாளர் ஜோஸ். 64 வயதாகும் இவர், பிறவியிலேயே ஒரு சிறுநீரகம் இல்லாதவர். 19வது வயதில், மதுரை அரசு மருத்துவமனையில், நண்பருக்காக ரத்தம் கொடுக்க தொடங்கிய இவர், 154 முறை ரத்த தானம் செய்து, தன் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்.இது தொடர்பாக அவர் கூறுகையில்:மதுரை சமூக அறிவியல் கல்லூரியில், எம்.ஏ.,பட்டம் பெற்ற நான், பிறந்தது கேரளா மாநிலம் எர்ணாகுளம். தந்தையின் தொழில் காரணமாக, சிறுவயதிலேயே மதுரையில் குடியேறினோம். நன்கு படித்திருந்தும், சேவை செய்வதில், நாட்டம் அதிகமாக இருந்ததால், வேலைக்கு சென்றால், அது முடியாது என்பதற்காக, தேடிவந்த அனைத்து அரசு வேலைகளையும் தட்டிக் கழித்தேன்.என்னுடைய பத்தொம்பதாவது வயதிலிருந்து மூன்று மாதத்திற்கு ஒரு முறை ரத்தம் கொடுத்து வருகிறேன். முன்பு, புது திரைப்படங்கள் வெளிவரும் வெள்ளிக்கிழமையில் தான், அரசு மருத்துவமனையில், ரத்ததானத்திற்கு அதிக கூட்டம் வரும்; காரணம், தானம் செய்பவர்களுக்கு, ஒரு முட்டை, சத்து மாத்திரை, மேலும், 10 ரூபாயும் தருவர். இந்த பணத்தை கொண்டு படம் பார்க்க செல்வர். 'பணத்திற்காக ரத்தம் கொடுக்கக் கூடாது' என்ற சட்டம் வந்ததால், தானம் செய்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.இந்நிலையில், ரத்ததானம் செய்யப் போகும் ஒவ்வொரு முறையும், நண்பர்களை உடன் அழைத்து செல்வேன். பின், ஒவ்வொரு ஊராக சென்று, மக்களை சந்தித்தும், கல்லூரி, தொழில் நிறுவன ஊழியர்களிடம் பேசியும், ரத்ததானம் செய்ய வைத்தேன். இப்படி, ஆண்டிற்கு, 5,000 க்கும் மேற்பட்டவர்கள், என் மூலமாக ரத்ததானம் செய்து கொண்டிருக்கின்றனர்.மனிதனுக்கு பெற்றோர், மனைவி, மற்றும் பிள்ளைகள் என்ற கடமைகளுடன், சமுதாய அக்கறையும் இருக்க வேண்டும். ரத்ததானம் என்பது தொண்டு அல்ல; அது, நம் கடமை. ரத்தம் கொடுப்பது இழப்பு அல்ல, புதிய ரத்த அணுக்களின் வரவு, என்கிறார்.இவரது மனைவி மேரிரான்சம்; தனியார் பள்ளியில் முதல்வராக உள்ளார். இவர்களுக்கு குழந்தை இல்லை. ரத்த சொந்தம் (குழந்தைகள்) இல்லை என, ஒரு நாளும் இவர்கள் ஏங்கியது இல்லை. கண்ணுக்கு தெரியாமல், எத்தனையோ உயிர்களுக்கு, 'ரத்தத்தின் ரத்தமாக' திகழும் இவர்கள், தங்கள் மறைவுற்கு பின், உடல்களை, மதுரை அரசு மருத்துவமனைக்கு தானம் செய்ய பதிவு செய்துள்ளனர்.'யாதும் ஊரே; யாவரும் கேளிர்' என்ற கணியன் பூங்குன்றனாரின் பொன்மொழிக்கு ஏற்ப, ரத்தத்திற்கும் ஜாதி, மொழி, மதம் இல்லை. அனைவரும் சமம் என்ற உணர்வை ஊட்டுவது ரத்தம் மட்டும் தான். அள்ள அள்ள குறையாத அமுத சுரபியாம் ரத்தத்தை, நாமும் தந்து, இதயங்களை கொள்ளை கொள்வோம்!இவரிடம் பேச : 93444 33310.ஆர். ஆனந்த்