இனப்பற்று!
''என்னை என்ன மாங்கா மடையன்னு நினைச்சியா... யாரைக் கேட்டு வரச்சொன்னே...'' என்று கூறி, கோபத்தில் பெரியசாமி எறிந்த சாப்பாடு தட்டு, சுவரில் பட்டு, உருண்டோடியது.கணவனின் கோபத்தை எதிர்பார்த்தவள் போல், ''உங்க கோபத்த ஏன் சாப்பாடு மேல காட்டுறீங்க... வாரத்துல ஆறு நாளும் புளி சாதம், தயிர் சாதம்ன்னு அரைகுறையா சாப்பிட்டு ஒர்க் ஷாப்புக்கு ஓடுற மனுஷர், ஞாயிற்றுக்கிழமையாவது, ருசியா சாப்பிடட்டுமேன்னு, மெனுக்கெட்டு சாப்பாடு செஞ்சு வச்சுருக்கேன். துாக்கி எறிஞ்சா எப்படி... உட்கார்ந்து சாப்பிடுங்க,'' என்றாள் நிதானமாக, மனைவி தெய்வநாயகி. 'எதைச் சொன்னாலும், சன்னமான குரலில் ஆமோதித்து, தலையசைக்கும் இவளா இப்படி பேசுவது...' என்பது போல் அவளை, வினோதமாக பார்த்தார், பெரியசாமி.''நான் சொன்னத உங்களால ஜீரணிக்க முடியாதுன்னு தெரியும். பிரச்னை, பூனைக் குட்டிய போல வீட்டைச் சுத்தறப்போ யாராவது மணி கட்டித் தானே ஆகணும்...'' என்றவள், ''உங்களுக்கு என் மேல கோபம்ன்னா, ரெண்டு அடி வேணா அடிச்சுக்கங்க... சாப்பிடாம எழுந்து போனீங்கன்னா, இந்த நிமிஷத்துலேர்ந்து சாகறவரை ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிக்க மாட்டேன், தெரிஞ்சுக்குங்க,'' என்றாள், உறுதியாக!விக்கித்துப் போனார் பெரியசாமி.ஆவேசமாய் எழுந்தவர், அப்படியே ஆயாசமாய் நாற்காலியில் சரிந்தார்.இத்தனை ஆண்டு இல்லற வாழ்க்கையில், தெய்வநாயகியின் தீர்க்கத்தை நன்கறிந்தவர் பெரியசாமி.ஆராயாமல் எதையும் சொல்ல மாட்டாள்; சொன்னால் உயிரை பணயம் வைத்தேனும் சாதித்து விடுவாள்.''உட்காருங்க... சாப்பிட்டு முடிச்ச பின், கொஞ்சம் யோசிச்சு பாருங்க...'' என்று கூறி, சாப்பாட்டு தட்டை அவர் முன் நீட்டினாள்.கோபத்தை அடக்க முடியாமலும், அவளது அன்புக் கட்டளையை ஏற்க முடியாமலும் திக்குமுக்காடினார் பெரியசாமி.இயல்பிலேயே பெரியசாமிக்கு ஜாதிப் பற்று அதிகம். நாட்டு விடுதலைக்காக பாடுபட்ட ஒரு தேசிய தலைவரை, தன் ஜாதிக்காரர் என்கிற குறுகிய வட்டத்துக்குள் அடைத்து, அவர் பெயரால் இயங்கி வரும் ஒரு ஜாதிய அமைப்பில் உறுப்பினராய் இருப்பவரும் கூட!அருகே இருக்கும் நகரத்தில் வேலை வாய்ப்புகள் அதிகம் இருந்தாலும், தன் ஜாதியை சேர்ந்தவரின் நிறுவனத்தில் வேலை செய்வதே தனக்கும், தன் ஜாதிக்கும் பெருமையென்று சொல்லி, தினமும் ஒருமணி நேரம் பயணம் செய்து, கோயம்புத்துாரில் உள்ள ஒர்க் ஷாப்க்கு வேலைக்கு சென்று வருபவர்.தன்னைப் போல், தன் மகனையும் இனப்பற்றுள்ளவனாகத் தான் வளர்க்க முயன்றார் பெரியசாமி.ஆனால், மகன் அரவிந்தோ விபரம் வரும் வரை அவரது பேச்சை கேட்டவன், தோளுக்கு மேல் வளர்ந்த பின் பாரதியைப் போல், 'காக்கை குருவி எங்கள் ஜாதி...' என்கிற பொதுவுடைமைக்குள் தன்னை புகுத்திக் கொண்டான்.கல்லுாரி படிப்பு முடிந்த கையோடு, கேம்பஸ் இண்டர்வியூவில், கோவை சிட்கோவில் ஒரு கம்பெனியில், கை நிறைய சம்பளத்துடன் நல்ல வேலையும் கிடைத்தது.வேலைக்கான உத்தரவு கடிதத்தை ஒரு கையிலும், மறு கையில், தன் காதல் மனைவியோடு, மணக்கோலத்தில் வாசலில் வந்து நின்றவனைக் கண்டு, நிலைகுலைந்து போனார், பெரியசாமி.கல்லுாரியில் கூடப் படித்தவளாம்; சொன்னால் அப்பா ஏற்றுக்கொள்ள மாட்டாரென்று, பதிவுத் திருமணமே செய்து வந்துவிட்டான்.ருத்ர தாண்டவமாடினார், பெரியசாமி.செய்வதறியாது திகைத்துப் போனாள், தெய்வநாயகி. பெரியசாமி போட்ட கூச்சலில், தெருவே அவர் வீட்டு வாசல் முன் திரண்டு வந்து, வேடிக்கை பார்த்தது.'அடப்பாவி இப்படி ஒரு காரியம் செய்துட்டு வந்துருக்கீயே... இனி, நம்ம ஜாதி, ஜனங்க முகத்தில எப்படி விழிப்பேன்... இத்தோட உனக்கும், எனக்கும் அப்பன், மகன்ங்கிற உறவே அறுந்துபோச்சு... நான் செத்தாலும், என் மூஞ்சியில விழிக்கக் கூடாது...' என்று திட்டி, வாசல் கதவை சாத்தி, ஆறு ஆண்டுகளாகி விட்டது.தனக்கு மகனே இல்லை என்று பிடிவாதத்தோடு, அவ்வப்போது எழும் அவன் நினைவுகளை அடக்கி, தன் ஜாதி அமைப்பை சேர்ந்த சிலர் அவ்வப்போது மறைமுகமாய் ஏளனம் செய்வதை தாங்க முடியாமல், மன அழுத்தத்தில், உழன்று கொண்டிருந்தார், பெரியசாமி. இந்நிலையில், மதிய உணவு வேளையில், 'அரவிந்த் தன் குடும்பத்தோடு வரப்போறான்...' என்று தெய்வநாயகி சொன்னதும், உறங்கும் புலியை இடறிவிட்டது போல் ஆகிவிட்டது.பதிலேதும் பேசாமல், மனைவி நீட்டிய சாப்பாட்டுத் தட்டை வாங்கி, இயந்திரமாக சாப்பிட்டு முடித்து, வாசல் திண்ணையில் வந்து அமர்ந்தார், பெரியசாமி.அப்போது, அங்கு வந்தார், பெரியசாமியின் நண்பர் இஸ்மாயில் பாய்.வலிந்து வரவழைத்த புன்னகையுடன், ''என்ன இஸ்மாயில்... வீட்டுக்கு கிளம்பிட்டீயா...'' என்றார், பெரியசாமி.''ஞாயிற்றுக்கிழமை மதியத்துக்கு மேல, கடை லீவு தானே...'' என்றபடி, பெரியசாமியின் பக்கத்தில் அமர்ந்தவர்,''அப்புறம்... போன வாரம், சரக்கு வாங்கறதுக்கு கோயம்புத்துார் போயிருந்த போது, சிட்கோவில் இருக்கிற, என்னோட சொந்தக்கார பையன் கம்பெனிக்கு போயிருந்தேன். அங்க மேனேஜரா இருக்கான் நம்ம அரவிந்த்...''ஆள் ஜம்முனு இருக்கான்... என்கிட்டே என்ன பணிவு, மரியாதை... இங்கே ஊர்ல இருக்கும்போது எனக்கு என்ன மரியாதை கொடுத்தானோ, அதே மாதிரி இப்பவும் இருக்கான்பா... அவன் சம்சாரம் பக்கத்தில ஏதோ ஸ்கூல்ல டீச்சரா இருக்காம்; குழந்தைக்கு அஞ்சு வயசாச்சாம்... ரொம்ப நல்லா இருக்காங்க...'' என்றார்.தான் கூறியதற்கு எந்தவித ரியாக் ஷனும் காட்டாமல் அமர்ந்திருந்த பெரியசாமியை பார்த்து, ''உன்னோட வருத்தம் புரியுது; அவன் தான் உலகம்ன்னு செல்லமா வளர்த்தே... என்ன செய்றது... ஆசைப்பட்ட பொண்ண கல்யாணம் செய்துட்டான்... விடு; சந்தோஷமா இருந்துட்டுப் போகட்டும். இனியொரு முறை, அவன், உனக்கு மகனா பொறக்கப் போறானா...'' என்றவர், ''நான் கிளம்புறேன்,'' என்று எழுந்த போது, வாசலில் டாக்சி ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து, தன் மனைவி, மகளுடன், 'டிப் டாப்'பாக இறங்கினான், அரவிந்த்.''வாப்பா... அரவிந்த்...'' என்று வரவேற்றார், இஸ்மாயில் பாய். அவரிடம் புன்னகைத்தபடி, மகளிடம் பெரியசாமியை சுட்டிக் காட்டி, ''போ...'' என்றான், அரவிந்த். ''தாத்தா...'' என்றபடி, இரு கைகளையும் விரித்தபடி பெரியசாமியிடம் ஓடினாள், குழந்தை.திடீரென்று தன் முன் ஓடி வந்த குழந்தையை எடுத்து அணைப்பதா, தடுப்பதா என, செய்வதறியாமல் பிரமை பிடித்தவர்போல் உட்கார்ந்திருந்தார், பெரியசாமி.அதற்குள், வீட்டிற்குள் இருந்து வந்த தெய்வநாயகி, ''வாடா... அரவிந்த்; நல்லா இருக்கியா...'' என்று வரவேற்றாள்.வாசல்படியில், ஒரு நொடி நிதானித்த அரவிந்த், தன் மனைவியிடம், 'உள்ளே வா' என்பதாய் கண்ணசைத்து, வீட்டினுள் நுழைந்தான். தயங்கியபடியே பின் தொடர்ந்தாள் அவள்.பெரியசாமியின் இடுப்பைப் பற்றியது, குழந்தை.வீட்டுக்குள் அழுகை, சிரிப்பு, சந்தோஷம் என, எல்லாம் கலந்த உணர்ச்சிக் குவியலில் திணறிக் கொண்டிருந்தனர்.''வெளிய நிக்குதே அது நம்ம கார்தான்ம்மா... சொந்தமா வாங்கி, கால்டாக்சி ஒண்ணுல, 'டை - அப்'புல விட்டுருக்கேன்... இனி, அப்பா, வேலைக்கு கோயம்புத்துார் போக வேணாம்; இங்க, பக்கத்துல ஒரு ஒர்க் ஷாப்பை லீசுக்கு ஏற்பாடு செய்திருக்கேன்; அதை பாத்துக்கட்டும்... தங்கச்சி கல்யாணத்தை பத்தி கவலையே வேணாம்; நான் பாத்துக்கிறேன்...'' மடமடவென சொல்லிக் கொண்டே போனவனின் வாயை பொத்திய தெய்வநாயகி,''இதெல்லாம் இப்ப யாருடா கேட்டாங்க... முதல்ல சாப்பிட வா... அப்புறம், சாவகாசமா பேசலாம்... நீயும் வாம்மா... குழந்தை எங்கே...'' என்றாள். ''அப்பாகிட்ட இருக்கா... போய் கூட்டிட்டு வர்றேன்...'' என்று வாசலை நோக்கி நடந்தான், அரவிந்த்.தாத்தாவின் இடுப்பை பற்றியிருந்த குழந்தையை தன் பக்கம் திருப்பினார், இஸ்மாயில் பாய்.''குழந்தே... எத்தனாம் கிளாஸ் படிக்கிறே...''''எனக்கு அஞ்சு வயசாறது... அப்ப நீங்களே சொல்லுங்களேன்... நான் எத்தனாம் வகுப்பு படிக்கிறேன்ட்டு...''கேள்விக்கு, கேள்வியையே பதிலாய் தருகிற சாதுரியத்தைக் கண்டு வியந்து, ''ஒண்ணாம் கிளாஸ் தானே படிக்கிறே... 'ரைம்ஸ்' எல்லாம் சொல்வியா...'' என்றார், இஸ்மாயில்.குழந்தையுடன் பேசியதில், அவருக்கும் உற்சாகம் தொற்றிக் கொண்டது.பெரியசாமி கண்கொட்டாமல், முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல், அந்த பிஞ்சு முகத்தையே பார்த்தார்.''ம் தெரியுமே... அதைவிட, திருக்குறளெல்லாம் நிறைய சொல்வேனே...'' என்றது மழலை.''வெரிகுட்... பாரு பெரியசாமி, குழந்தையோட சூட்டிகைய...'' பாராட்டு பத்திரம் வழங்கி, சிறுமியை இழுத்து, தன் மடியில் இருத்தியவர், ''இங்கே பாரு பெரியசாமி... உன் மகன் ஒண்ணும் கொலை செய்துட்டோ, கொள்ளை அடிச்சுட்டோ ஜெயிலுக்கு போயிட்டு வரல... தன்னோட வாழ்க்கைய தானே தேர்ந்தெடுத்துட்டான். இப்ப, நல்ல நிலைமையில இருக்கான்; சரி, இதுவே சோத்துக்கே திண்டாடி, கஷ்ட நிலையில, வேற போக்கிடமில்லாம, உன் கால்ல வந்து விழுந்திருந்தா அப்பவும் இப்படி நிர்தாட்சண்யமாத்தான் இருப்பியா... அப்படி இருந்தா பெத்த மனசு, மனுஷத்தனம் இதுக்கெல்லாம் எந்த அர்த்தமுமே இல்லாம போயிடுமேப்பா...''இந்த காலத்துல வெறுமனே கூட்டம் போடறதுக்கும், கோஷம் போடறதுக்கும் தான் சில அமைப்புகள் இருக்கே தவிர, நாம கஷ்டப்பட்டா கைதுாக்கி விட அவங்க வரப்போறதில்ல. உன்னோட ஜாதிக்காரன்கிட்டே வேலை செய்யறது தான் பெருமைன்னு இங்கே இருக்கிற கம்பெனிய விட்டுட்டு, கோயம்புத்துார் போய் வேலை பார்த்து, என்ன முன்னேற்றத்த கண்டே... இன்னமும் அப்படியேதான் இருக்கே... உன் பையன் என் சொந்தக்காரங்க கம்பெனியில வேலை செய்றான்... அவன் எப்படி இருக்கான்... திறமை, படிப்பு, காதல் இதெல்லாம் ஜாதிக்கும், மதத்துக்கும் அப்பாற்பட்டதுப்பா...''என்ற போது, பெரியசாமியின் முகத்தில் சிறு மாற்றம் தெரிந்தது.தன் மனதில் இருப்பதை கொட்டிவிட்ட இஸ்மாயில் பாய், குழந்தையிடம் திரும்பி, அதன் மோவாயை பிடித்து,''உம் பேரு என்ன குழந்தே?'' என்று கேட்டார்.''தீப்ஷி மாமா...'' என்றபடி, வீட்டுக்குள்ளிருந்து வந்தான், அரவிந்த்.''போங்கப்பா... தாத்தா என்னைத்தானே கேட்டார்... நான் சொல்றதுக்கு முந்தி நீங்க சொல்லிட்டீங்களே...'' சிணுங்கினாள், குழந்தை. இஸ்மாயில் அவளை சமாதானப்படுத்தி, ''சரி சரி... அப்பா பேரை சொல்லிட்டார்; உன் பேருக்கு என்ன அர்த்தம்ன்னு நீ சொல்லேன்... சாமி பேரா...'' என்றதும், உற்சாகத்துடன், ''ஆமா தாத்தா... ஆனா, ஒரு சாமியில்ல; மூணு சாமி...''ஒவ்வொரு விரலாய் மடக்கிக் காட்டி, ''ஒண்ணு தெய்வநாயகி பாட்டி; ரெண்டு, பெரியசாமி தாத்தா; மூணு, எங்க தாத்தாவோட அம்மா, ஷியாமளா பாட்டி; இவங்க மூணு பேரோட முதல் எழுத்துகளை தான் எனக்கு பேரா வச்சுருக்காங்க... நல்லா இருக்கா...'' என்றாள்.பதிலை இஸ்மாயில் பாய்க்கு சொல்லி,கேள்வியை பெரியசாமிக்கு வீசினாள், குழந்தை.அதற்கு மேலும் அமைதியாக இருந்தால், நெஞ்சு வெடித்துவிடும் போலிருந்தது பெரியசாமிக்கு! மழலை குரலில், தன் வைராக்கியத்தை பனிப்பாறையாய் உடைத்தெறிந்த குழந்தையை, வாரியெடுத்து உச்சி முகர்ந்தார், பெரியசாமி.குழந்தையை கொஞ்சியபடி இருந்த பெரியசாமியிடம், ''என்னப்பா... உன் பேத்தியா...'' என்றார், பக்கத்து வீட்டுக்காரர்.''இல்ல; இவ, என்னோட அம்மா...'' என்ற பெரியசாமியின் கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடியது.பின்னால் வந்து நின்ற அரவிந்த், தன் அப்பாவின் தோள்களில் சாய்ந்து, விசும்பி அழ ஆரம்பித்தான்.- கவியகம் காஜுஸ்இயற்பெயர்: தி.தெ.மணிவண்ணன்.வயது: 56. கல்வி: சிவில் இன்ஜினியரிங்.கோவை, பொள்ளாச்சிக்கு அருகில் அங்கலக்குறிச்சி கிராமத்தில் பிறந்த இவர், தற்போது குடும்பத்துடன் கோவையில் வசிக்கிறார்.எழுத்து பணியுடன், சமூக நல பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.கதை, கவிதை மற்றும் கட்டுரை எழுதுவதில் அதிக ஆர்வமுள்ளவர்.