உள்ளூர் செய்திகள்

தூரத்து சொந்தம்!

அதிகாலை, 5:00 மணி. அழைப்பு மணி மற்றும் கதவு தட்டப்படும் சத்தம், இரண்டும் மாறி மாறி கேட்டது. ''காலங்காத்தால யாருன்னு போய் பாருங்கப்பா,'' என்று உரக்கச் சொன்ன பிறகே, அப்பாவை இழந்து, இரண்டு வாரங்கள் கடந்த விஷயம் சுரீரென்று உறைத்தது. மன வேதனையை அடக்கி, மெல்ல எழுந்தேன்.அப்பாவின், 16ம் நாள் காரியத்தை முடித்தும், அவரைத் தான் இன்னும் மறக்க முடியாமல் மனது அரற்றிக் கொண்டிருக்கிறது.'பாவம் மனுஷன், ராத்திரி பகல்ன்னு பார்க்காம குடும்பத்துக்காக மாடா உழைச்சி, ஓடா தேஞ்சிப் போனவர். நானும், தங்கையும் சிறு வயதிலேயே தாயை இழந்து நிர்க்கதியாய் நின்றபோது கூட, தனக்கென ஒரு துணையை தேடிக் கொள்ளாமல், பிள்ளைங்க தான் முக்கியம்ன்னு, எங்களுக்காகவே வாழ்ந்தவர்.'ராத்திரியெல்லாம் துாங்கவே மாட்டார். கூப்பிட்ட குரலுக்கு பதறியடித்து கேட்கிற ஒரே ஜீவன், அவர் தான். அவரும் போய் சேர்ந்துட்டார். ம்ம்... நாம குடுத்து வச்சது அவ்வளவு தான்...' என, நினைத்துக் கொண்டேன்.மீண்டும் அழைப்பு மணி ஒலிக்கவே, கதவை பட்டென்று திறந்தேன். இருளில் எதிரில் நின்றவரின் உருவம், மங்கலாக தெரிந்தது. விளக்கை போட்டு, கதவுக்கு வெளியில் நின்றிருந்தவரை பார்த்தவுடன், எரிச்சல் அதிகரித்தது.வெற்றிலை பாக்கு போட்டு பழுப்பேறிய பற்களைக் காட்டியபடி, ''நல்லா இருக்கியாப்பா,'' என, கேட்டார், துாரத்து சொந்தமான, கும்பகோணம் பெரியப்பா சுந்தரம். அவர் முகத்தைப் பார்த்தவுடன், உடம்பெல்லாம் எரிந்தது.'இந்த ஆளுக்கு அறிவே இருக்காது போல. அப்பா இருக்கும்போது, மாசா மாசம் முதல் வாரத்தில் வந்து, ரெண்டு நாள் தங்கி, ஊர் கதையெல்லாம் பேசி, கணிசமான ஒரு தொகையை கறந்துகிட்டு தான் ஊருக்கு கிளம்புவார். செத்த பிறகும், விடாமல் திரும்பவும் எதுக்கு வந்து நிற்கிறார்?' என, நினைத்தபடி, பெயருக்கு, ''வாங்க...'' என்றேனே தவிர, உள்ளுக்குள் கோபம் கொப்பளித்தது. 'அப்பா இருந்தவரை, அவர் வாங்கும் ஓய்வூதியத்தில் வீட்டு செலவுக்கென்று ஒரு தொகையை கொடுப்பார். எனக்கும், அது பெரிய உதவியாய் இருக்கும். இப்போது அவர் இல்லாமல், என் ஒரு ஆள் வருமானத்தில், இரண்டு பிள்ளைகளை படிக்க வைத்து, வீட்டு வாடகையும் கொடுத்து, குடும்பத்தை ஓட்டுவதே பெரும்பாடாக இருக்கிறது. இந்நிலையில், இந்த மாதிரி ஆளுங்கல்லாம் அடிக்கடி வந்து போனால், எப்படி சமாளிக்க முடியும்?'பாவம் பார்த்து, ஒத்த ரூபாக்கூட கொடுக்கக் கூடாது. 100 - 200 கை செலவுக்குன்னு கொடுத்தா, அதுதான் சாக்குன்னு மாசா மாசம் வர ஆரம்பிச்சுடுவார். எப்படியாவது நாசூக்கா பேசி, இனிமே இந்த பக்கம் வராதீங்கன்னு சொல்லி ஒரேடியா இவருடைய உறவையும், வரவையும், 'கட்' பண்ண வேண்டியது தான்...' என, நினைத்துக் கொண்டேன்.''மூர்த்தி, நல்லா இருக்கியா... என்னப்பா நான் பாட்டுக்கு கேட்டுட்டு இருக்கேன். நீ எதோ யோசனையா இருக்குற மாதிரி தெரியுது. வீட்ல சம்சாரம், பிள்ளைங்கல்லாம் சவுக்கியமா? ''ராத்திரி, 8:00 மணி பஸ் ஏறினேன்; 4:00 மணிக்கே கொண்டு வந்து, இறக்கி விட்டுட்டான். சரி, அதுவும் ஒரு விதத்துல நல்லது தான். நீ ஆபீசுக்கு கிளம்புறதுக்கு முன், உன்னை பார்த்து பேசலாமில்ல.''''ம்ம் உள்ளே வாங்க. அவ துாங்குறா, எழுந்தவுடன் காபி போட்டு தரச் சொல்றேன்,'' என்றேன். ''இருக்கட்டும்பா, அதுக்கு என்ன நம் வீடு தானே... டிபனோடு சேர்த்தே காபியும் குடிச்சுட்டா போச்சு,'' என கூறியபடி, எடுத்து வந்த கனமான பையை, என்னிடம் நீட்டினார்.''என்ன இது?'' கையில் வாங்காமலேயே கேட்டேன்.''நம் தோட்டத்தில் விளைஞ்ச நாட்டுச்சோள கதிரு. சுட்டு சாப்பிட்டா, நல்லா இருக்கும். அடியில் மரவள்ளிக்கிழங்கு வச்சிருக்கேன்; இட்லி தட்டுமேல வச்சு அவிச்சா, அஞ்சு நிமிஷத்துலே பூப்போல வெந்துடும். தேங்காய் துருவிப் போட்டு, அது மேலே சீனியை துாவி, சூடா சாப்பிட்டா, அருமையா இருக்கும். உனக்கு பிடிக்குமேன்னு எடுத்துட்டு வந்தேன்.''''இதெல்லாம் இங்க யாரும் சாப்பிட மாட்டாங்க. பிள்ளைகளுக்கு, 'ஸ்வீட் கான்' தான் பிடிக்கும். இந்த நாட்டுச் சோளத்தை தொட்டுக்கூட பார்க்க மாட்டாங்க. எனக்கு சுகர் வந்ததிலிருந்து கிழங்கெல்லாம் சாப்பிடுறதில்லை. இத எதுக்கு சுமந்துட்டு வந்தீங்க, இங்க ஓரமா வைங்க.''அடுத்து அவர் பேசுவதை கேட்க பொறுமையின்றி, ''நீங்க, அந்த சோபாவுல படுத்துக்குங்க. எனக்கு ரொம்ப, 'டயர்டா' இருக்கு. கொஞ்ச நேரம் துாங்கிட்டு வரேன்,'' என, அறைக்குள் நுழைந்து கதவை தாழிட்டேன்.படுக்கையிலிருந்து எழுந்த மனைவி தேவி, என்னை பார்த்தவுடன், ''யாரு அந்த கெழடு வந்திருக்கா... எத்தனை நாள், 'டேரா' போடப் போறாரோ... ஊருக்கு கிளம்பறதுக்குள்ளே என் பிராணனை வாங்கிடுவார்.''''இல்ல, அவரை ரொம்ப நாளெல்லாம் தங்க விடப்போறதில்ல. 'இனிமேல் இந்த பக்கம் வராதீங்க'ன்னு ஆபீஸ் போகும்போது அவரையும் கூட்டிட்டுப் போய் பஸ் ஏற்றி விட்டுத்தான் மறு வேலை,'' என்றேன்.''எதையாவது சொல்லி அவரை கிளப்பற வழியைப் பாருங்க. ஊரிலிருந்து நாளைக்கு எங்க அப்பா - அம்மா வர்றாங்க. அவங்க வர்றதுக்குள்ள அவரை அனுப்பிட்டீங்கன்னா நல்லா இருக்கும்,'' தேவியின் குரலில் கோபம் கொப்பளித்தது. ''அத நான் பார்த்துகிறேன். நேரம் ஆயிடுச்சு, நீ போய் பசங்களுக்கு வேண்டியதை தயார் பண்ணு,'' என்று, அவளை சமாதானப்படுத்தினேன்.எல்லாருடனும் நானும் தயாராகி ஹாலுக்கு வந்தேன். பேரன், பேத்திகளை பார்த்தவுடன் முகம் மலர்ந்தார், சுந்தரம். ''கண்ணுங்களா, நல்லா இருக்கீங்களா... நல்லா படிக்கிறீங்களா?'' என்றவர், தொண்டையை செருமியபடி, ''என்னப்பா மூர்த்தி, 8:00 மணிக்கே ரெடியாயிட்டே... ஆபீசுக்கு சீக்கிரமா போகணுமா?'' என, கேட்டார்.''அதெல்லாம் ஒண்ணுமில்லை. ஆபீஸ், 10:00 மணிக்குத்தான். பிள்ளைங்களை ஸ்கூல்ல கொண்டு விடணும்.'' ''ஏன் வேன் என்னாச்சு?''''வேனுக்கு மாசம், 2,000 ரூபாய் தண்டம் அழுவணுமேன்னு நிறுத்திட்டேன். அப்பாவோட வருமானமும் இல்ல. அதனால, இனிமே செலவை குறைச்சு, குடும்பத்த ஓட்ற வழியை பார்க்கணும். இதற்கிடையில் திடீர் திடீர்னு ஆஸ்பிட்டல் செலவு. ''அதுமட்டுமா, விருந்தாளிங்க தொல்லை வேற. அவங்களுக்கு சோறு மட்டும் போட்டாலாவது பரவாயில்லை; வழி செலவுக்கும் கொடுக்கணும். இப்படியே போனால், நானும், என் பிள்ளைங்களும் நடுத்தெருவுலதான் நிற்கணும். அதனால் தான் யாரையும் வீட்டுக்கு கூப்பிடறதில்லை.''சரி, நீங்க எப்ப கிளம்புறீங்க பெரியப்பா? ஏன் கேக்குறேன்னா, நான் ஆபீஸ் முடிஞ்சி வர ரொம்ப நேரமாகும். அதுக்கு அப்புறம், உங்களுக்கு ஊருக்கு போறதுக்கு பஸ் கிடைக்கிறது கஷ்டம். அதான் நான், ஆபீஸ் போகும்போதே, உங்களை பஸ் ஏற்றி விட்டுடட்டுமா?'' பட்டென்று முகத்துக்கு நேராக கேட்டேன்.அவர் முகம் போன போக்கை பார்க்க கொஞ்சம் சங்கடமாகத்தான் இருந்தது. ஆனால், வேறு வழி தெரியவில்லை. பட்டும் படாமல் சொன்னா புரிஞ்சிக்கிற ரகமில்லை. முகத்துக்கு நேராக சொன்னால் தான் உரைக்கும்.''உங்கிட்ட முக்கியமான விஷயம் ஒண்ணு பேசணும். மொதல்ல பிள்ளைகளை ஸ்கூல்ல விட்டுட்டு வா, பிறகு பேசிக்கலாம். அப்புறம், உன் தங்கை விமலாவை பார்த்துட்டு, நாளைக்கு காலையில கிளம்பிடலாம்ன்னு இருக்கேன்.''''விமலா வீட்டுக்கு எதுக்கு போறீங்க... இங்க நடக்கிறதெல்லாம் அங்க சொல்றதுக்கா? எங்களுக்குள்ள பேச்சு இல்லைன்னு உங்களுக்கு தெரியுமில்ல. இங்க வந்தீங்கன்னா இங்கிருந்து கிளம்புற வழியை பாருங்கள்.''தேவி, பெரியப்பாவுக்கு டிபன் எடுத்து வை. பசங்கள ஸ்கூல்ல விட்டுட்டு வந்தவுடனே அவரை பஸ் ஏத்தி விடணும். சரி, சாப்பிட்டு தயாரா இருங்க; பிள்ளைகளை ஸ்கூல்ல விட்டுட்டு வந்துடறேன்,'' கொஞ்சம் கடுமையாகவே பேசி, வாசற்படியில் இறங்கினேன்.விமலாவை நினைத்தவுடன், கோபம் கோபமாக வந்தது. கூட பிறந்த தங்கை தான், விமலா. செல்லமாக வளர்ந்தவள். ஒருத்தனைக் காதலிச்சு, சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டு ஓடிப் போயிட்டாள்.அப்பா சாவுக்கு கூட அவளுக்கு செய்தி சொல்லவில்லை. யாரோ சொல்லி வாசலில் நின்று அழுது சென்றவளை, இந்த மனுஷன் ஏன் போய் பார்க்கணும்? விட்டுப் போன உறவை புதுப்பிக்க நினைக்கிறாரோ... இல்ல, விமலாகிட்டயும் கொஞ்சம் காசு கறக்கலாம்ன்னு பிளான் பண்றாரோ? என்னவோ இவர் பாடு, அவள் பாடு நமக்கென்ன?பிள்ளைகளை ஸ்கூலில் விட்டு திரும்பினேன்.வெற்றிலைக்கு கண்ணாம்பு தடவிக் கொண்டிருந்தார், பெரியப்பா சுந்தரம். ''டிபன் சாப்பிட்டீங்களா...'' என்று ஒப்புக்கு கேட்டபடி, உள்ளே நுழைந்தேன். சாப்பிட்டு விட்டதற்கு அடையாளமாக தலையை மட்டும் ஆட்டினார். அவசர அவசரமாக இரண்டு இட்லியை வாயில் திணித்து, மடமடவென்று ஒரு கிளாஸ் தண்ணீரை குடித்து, வெளியில் வந்தேன்.''ஏதோ பேசணும்ன்னு சொன்னீங்களே, என்னன்னு சொல்லுங்க. ஏற்கனவே ஆபீசுக்கு லேட்டாயிடுச்சு. இன்னும் அரை மணி நேரத்துல கிளம்பினால் தான் சரியா இருக்கும்.''''உன் சம்சாரத்தையும் வர சொல்லு, ரெண்டு பேரையும் வச்சுகிட்டு தான் பேசணும்,'' பெரிய பீடிகை போட்டார், பெரியப்பா. முகச்சுளிப்போடு வந்து என்னருகில் அமர்ந்தாள், தேவி. எங்கள் இருவரையும் ஏறிட்டவர், ''ஒரு நிமிஷம் இதோ வந்துடறேன்,'' என்று வாயிலிருந்து வழிந்த வெற்றிலைசாறை துப்பி விட்டு, வந்தமர்ந்தார். பொறுமை இழந்து, இடது கையை திருப்பி, மணி பார்த்தேன். ''மூர்த்தி, ஒரு அஞ்சு நிமிஷம் பேசிட்டு, நான் கிளம்புறேன். அதுக்கு மேல உன்னை தொந்தரவு பண்ண மாட்டேன்.''''மொதல்ல சொல்ல வேண்டியதை சொல்லுங்க. வந்ததிலிருந்து ஏதோ சொல்லப் போறேன் சொல்லப் போறேன்னு சொல்லுறீங்களே தவிர, சொல்ல மாட்டேன்கறீங்க. சீக்கிரம், எனக்கு சமையலறையில் நிறைய வேலை இருக்கு,'' பொறுமை இழந்தவளாக எனக்கும் சேர்த்தே பேசினாள், தேவி.இருவரின் தர்மசங்கடத்தையும் புரிந்து கொண்டவர், அருகில் இருந்த தன் கைப்பை ஜிப்பை திறந்து, ரூபாய் கட்டுகளை எடுத்து, ''மூர்த்தி, இதுல நாலு லட்சம் இருக்கு. பத்திரமா எடுத்து வை,'' என்றார்.என்னைப் போலவே தேவியும் பலத்த அதிர்ச்சியில் இருந்தாள்.''ஏது இந்தப் பணம்... எங்கிட்ட எதுக்கு கொடுக்குறீங்க?'' என் கண்கள் பணத்தின் மேல் தான் இருந்தது. எங்கே திரும்பவும் எடுத்து பையில் வைத்து மூடி விடுவாரோ என்ற பதற்றத்துடனே இருந்தேன்.''இது, உங்க அப்பா, அதான் என் தம்பிக்கு சேர வேண்டிய பணம். உயிரோட இருந்திருந்தா அவன்கிட்ட இதை கொடுத்திருப்பேன். ஆண்டவன் தான் என்ன வச்சிட்டு, அவனை எடுத்துக்கிட்டானே...''நான் சொல்றது எதுவும் உங்களுக்கு விளங்காது. தெளிவாகவே சொல்றேன்... உன் அப்பா சண்முகம், எனக்கு எவ்வளவோ உதவி செய்திருக்கிறான். போன மாசம் கூட, 20 ஆயிரம் பணம் கொடுத்தான். இதுவரைக்கும் எவ்வளவு கொடுத்தான்னு அவனுக்கே தெரியாது. ''ஏன்னா, அவன் மனசு அப்படி. வாரி வழங்கும் வள்ளல். வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரிய கூடாதுன்னு நினைக்கிறவன். ஆனால், நான் அப்படி இல்லை. அவன்கிட்ட பணத்தை கை நீட்டி வாங்குற ஒவ்வொரு முறையும், கடன்காரனாக இருந்து, கணக்கு எழுதி வச்சிருக்கேன்.''இதுவரைக்கும் மொத்தம் இரண்டு லட்சம் கொடுத்திருக்கிறான். ரொம்ப நாளா கோர்ட் கேசுன்னு அலைஞ்சுகிட்டு இருந்தேன். அதாவது, என் மனைவியோட சொத்து கேசு தான். அந்த கேசை வாதாடத்தான் என் தம்பிகிட்ட வந்து, அப்பப்ப பணம் வாங்கினேன்.''இப்ப கேசு என் பக்கம் ஜெயிச்சு, எனக்கு வரவேண்டிய பணமும் கைக்கு வந்துடிச்சு. வாங்குன கடனை வட்டியோடு திருப்பிக் கொடுப்பது தானே முறை. என்ன தான் தாயும் பிள்ளையுமா இருந்தாலும், வாயும் வயிறும் வேறதானே? அதான் வட்டியும் முதலுமா குடுத்துட்டு போகலாம்ன்னு வந்தேன். உன் செலவுக்கும் ஆகுமில்லையா?''தயக்கத்தோடு பணத்தை வாங்கிக் கொண்டேன். 'அவரை சரியா புரிஞ்சிக்காம தப்புக்கணக்கு போட்டுட்டேனே...' என்று, மனசாட்சி, என்னை சாடியது. என்ன பேசுவது என்று புரியாமல் தடுமாறினேன். அவர் கையைப் பற்றியப்படி தழுதழுத்தேன். ''அப்போ நான் கிளம்பட்டுமா மூர்த்தி. நேரா விமலா வீட்டுக்கு போய் அவளைப் பார்த்துட்டு, ராத்திரி பஸ் ஏறிடுவேன். அப்புறம், எப்பவாவது போய் விமலாவை பார்த்துட்டு வா. ''மனசுல ஏதையும் வெச்சுக்காம, உன் தங்கச்சியைப் போய் பார்த்து, அவகிட்ட பேசு. அவளுக்கு உறவுன்னு சொல்லிக்க, கூட பொறந்த அண்ணன், நீ ஒருத்தன் தான் இருக்கே. சரி, நான் கிளம்புறேன், மூர்த்தி. ஷேர் ஆட்டோவில் போனால் விமலா வீட்டு வாசல்லயே இறங்கிக்கலாம். வரட்டுமா?'' ''பெரியப்பா செலவுக்கு பணம்?'' சட்டை பாக்கெட்டில் கைவிட்டு துழாவினேன். அவருக்காக எடுத்து வைத்திருந்த, 100 ரூபாய் என் கையில் சிக்கி, பிசுபிசுத்தது.''வேணாம் மூர்த்தி, நீயே வச்சுக்கோ. பஸ் செலவுக்கு என்கிட்டே பணமிருக்கு,'' என்று தன் சட்டைப்பையில் வைத்திருந்த பணத்தை, எடுத்துக் காட்டினார்.'பாவம், வயசானவரு வந்தவுடனே கிளம்புறாரு. தங்கிட்டு போங்கன்னு சொல்லலாம். ஆனா, எந்த மூஞ்சை வச்சிக்கிட்டு சொல்வது...' நானும், தேவியும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி தலை குனிந்தோம். தெருவில் இறங்கி நடக்கத் துவங்கினார், பெரியப்பா. கண்களில் கண்ணீரோடு அவர் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தேன். டெய்சி மாறன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !