உள்ளூர் செய்திகள்

பாலைவனத்தில் 1000 மைல்களைக் கடந்த முதல் பெண்!

மங்கோலிய நாட்டின், தெற்கு பகுதியில் உள்ளது கோபி பாலைவனம்.இந்த பாலைவனம்,1,632 கி.மீ., நீளமுள்ளது ஆசியாவிலேயே பெரியதும், உலக அளவில் ஐந்தாவது இடத்திலும் உள்ளது.இந்த பாலைவனத்தை கடக்க, 60 நாட்கள் ஆகும். இதை கடப்பதே, ஒரு சாகசமான செயல். வருடத்திற்கு ஒரு முறை சாகச பிரியர்கள் இணைந்து, இந்த பாலைவனத்தை கடக்கும் செயலில் ஈடுபடுவர்.இதற்காக விண்ணப்பிப்பவர்கள், தகுதி அடிப்படையிலேயே தேர்வு செய்யப்படுவர்.இந்த முறை இதற்காக விண்ணப்பித்தவர்களில், மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சுசிதாவும் ஒருவர்.தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும், 33 வயது பெண்ணான சுசிதா, மலையேறுவது போன்ற சாகச விளையாட்டில் ஈடுபாடு உள்ளவர். பாலைவனத்தை கடப்பது பற்றிய வாய்ப்பு கிடைத்ததும், அதற்கும் துணிந்து விட்டார்.அறுபது நாட்கள் பயணம்... பகலில் அதிகபட்ச வெயிலும், இரவில் அதிக பட்ச குளிரும் நிலவும். எப்போது வேண்டுமானாலும் பாலைவனப் புயல் வீசும். தரையில் நடப்பது போல நடந்து விட முடியாது. அதிகபட்சமாக, ஒரு நாளைக்கு, 25 - 32 கி.மீ., தூரம் வரை நடந்தாலே ஆச்சரியம்தான்.இதுபோன்ற சிரமங்கள் காரணமாக இதுவரை, இரண்டு வெளிநாட்டு பெண்கள் மட்டுமே இந்த பாலைவனத்தை கடந்துள்ளனர். சுசிதாதான் துணிந்து, களம் இறங்கிய முதல் இந்திய பெண்.இதற்காக வீட்டில் இருந்து, 24 கி.மீ., தூரத்தில் உள்ள தன் அலுவலகத்திற்கு பல நாட்கள் நடந்தே போய் திரும்பி வந்து, பயிற்சி எடுத்தார். மேலும், கார் டயர்களை கழுத்தில் மாட்டி, பூங்காக்களில் நடந்து பயிற்சி எடுத்தார்.பதிமூன்று பேர் கொண்ட குழுவில், இவருடன் நளிந்தா என்ற இன்னொரு பெண்ணும் இடம் பெற்றிருந்தார். 800 கி.மீ., கடந்த நிலையில், அந்த பெண், அதற்கு மேல் பயணத்தை தொடர முடியாமல், பாதியிலேயே திரும்பி விட்டார். அதன் பிறகு, தனி ஒரு பெண்ணாக, சுசிதா பயணத்தை தொடர்ந்தார்.பாலைவனத்தின் கடும் வெயிலையும், குளிரையும் கூட சமாளித்தவர், திடீர், திடீரென வீசிய மணல் புயலை சமாளிக்கத்தான் பெரிதும் சிரமப்பட்டார். பயணத்திற்கு பெரிதும் உதவியாக இருப்பவை ஒட்டகம்தான்; ஆனால், இவைகளிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். எவ்வளவோ ஜாக்கிரதையாக இருந்தும், இரண்டு முறை ஒட்டகத்திடம் உதைபட்டு, பெரும் வதைபட்டு இருக்கிறார்.அதன்பிறகு நடுவில் இரண்டு நாள் காய்ச்சல் வேறு. உடன் வந்தவர்கள், 'போதும்... நிறுத்திக் கொள்ளுங்கள்...' என்று சொன்ன போதும், 'முடியாது' என்று மறுத்து, விடாப்பிடியாக நடந்து, தன் லட்சியத்தை எட்டி இருக்கிறார்.கோபி பாலைவனத்தை கடந்த முதல் இந்திய பெண் என்ற பட்டத்தை பெற்ற சுசிதா கூறும் போது... 'பாலைவனம்தானே என்று எளிதில் எடுத்துக் கொள்ள முடியாது. அந்த அளவிற்கு சிரமமும் இருந்தது, அதே அளவிற்கு சந்தோஷமும் இருந்தது. பயணத்தின் போது நான் பார்த்த காட்சிகள் அவ்வளவு அற்புதமானவை...' என்றார். கூடவே அடுத்த சாகசத்திற்கும் தயாராகி விட்டார்.***எல். முருகராஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !