தாய்மையின் சீற்றம்!
''சாரதாம்மா, நீங்க கொஞ்ச நேரம், இந்த பெஞ்சுல உட்கார்ந்திருங்க. நீதிபதி ஐயா, மதிய உணவு முடிஞ்சு வந்ததும், முதல்ல நம்ம கேசுக்கு தான் தீர்ப்பு கொடுக்க போறாரு. கண்டிப்பா, நமக்கு சாதகமாகத் தான் இருக்கும்.''நலிந்த புன்னகையை உதிர்த்தாள் சாரதா. ஜூனியர் அட்வகேட், அந்த இடத்தை விட்டு அகன்றதும், அந்த விஸ்தாரமான ஹாலில் கண்களை ஓட்டினாள்.அவளுக்கு நேர் எதிர்புறம் போடப்பட்டிருந்த இருக்கைகளில் அவள் பெற்ற மக்கள் மூவரும் அமர்ந்திருந்தனர். அம்மாவின் பார்வை தங்கள் மேல் விழுவதைக் கண்டதும், அவசர அவசரமாக மூவரும் முகத்தை திருப்பிக் கொண்டனர்.பழைய நினைவுகளில் மூழ்கினாள் சாரதா .'என்னங்க, நம்ம பசங்க மூணு பேரும், நாளைக்கு ஒண்ணா வரதா போன் செய்திருக்காங்களே... என்னவாயிருக்கும்?''உன்னை மாதிரி தானே நானும். அவங்க வந்தா தான் எனக்கும் தெரியும்...'பத்மநாபன், சாரதா தம்பதியினருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள். மூவரும் திருமணம் முடித்து, தனித் தனியாக இருக்கின்றனர். இவ்வளவு நாட்களாக கட்டு செட்டாக குடும்பம் நடத்தி, மூவரையும் படிக்க வைத்து, திருமணமும் செய்து வைத்தனர். சாரதாவின் நகைகள் எல்லாவற்றையும் போட்டு தான், மகளுக்கு திருமணம் செய்திருந்தனர்...பத்மநாபன் மூன்று மாதங்களுக்கு முன் தான், தனியார் நிறுவனத்திலிருந்து ஒய்வு பெற்றார். அப்போது வந்த பணம், 30 லட்சத்தை வங்கியில் போட்டு வைத்திருக்கிறார். பென்ஷன் கிடையாது. ஆதலால், வருமானத்திற்காக மாலையில், பிளஸ் 2 மாணவர்களுக்கு, அக்கவுன்ட்ஸ் சொல்லி தருகிறார். சாரதா, பள்ளி இறுதி வரை மட்டுமே படித்திருக்கிறாள். அதனால், அவளுக்கு நன்கு தெரிந்த சமையல் கலையை வைத்துக் கொண்டு, அக்கம் பக்கத்து பெண்களுக்கு குக்கரி வகுப்பு எடுக்கிறாள்.மறுநாள், பிள்ளைகள் வரும் மகிழ்ச்சியில், தடபுடலாக சமைத்திருந்தாள் சாரதா.அவர்கள் வந்ததும், பார்த்து, பார்த்து பரிமாறினாள். எல்லாம் முடிந்து ஓய்வெடுக்கும் போது, பெரிய மகன் மோகன், மெல்லப் பேச்சைத் துவக்கினான்.'அப்பா, நீங்க ரிட்டையர்டு ஆகிட்டீங்க. உங்க செட்டில்மென்ட் பணம் சும்மா தானே பேங்குல இருக்கு. அதுக்கு ஒண்ணும் பெரிய செலவில்லையே... நாங்க ஒரு திட்டம் வச்சிருக்கோம். அதை, நீங்க மனசு வைச்சா, நாங்க நடத்தமுடியும். செய்வீங்களாப்பா?' என்றான்.தொடர்ந்து சின்ன மகன் கார்த்திக் . 'இப்ப நானும், அண்ணனும் பேங்கிலும், ரயில்வே துறையிலும் வேலை பார்த்தாலும், ஒரு சின்ன பிசினஸ் தொடங்கலாம்ன்னு இருக்கோம். தங்கை சீதாவோடு மாப்பிள்ளையும் எங்க கூட சேர்ந்துக்கறதா சொல்லியிருக்காரு. நீங்க மனசு வைச்சு, இந்தப் பணத்தை எங்களுக்கு பாகம் பிரிச்சுக் கொடுத்தா, நாங்க உங்க ஆசீர்வாதத்துல முன்னுக்கு வந்துடுவோம்...''அதெல்லாம் சரிப்பா. நீங்களும், மாப்பிள்ளையும் மூணு பேருமே அரசாங்க வேலையில் தான் இருக்கீங்க. கை நிறைய சம்பளமும் வாங்கறீங்க. இந்த ரிஸ்க் தேவை தானா? உங்களுக்கு பிசினஸ் எல்லாம் சரியா வருமா? ஆழம் தெரியாமல் காலை விடுற மாதிரி எனக்குப் படுது...'இதுவரை பேசாதிருந்த சீதா வாய் திறந்தாள். 'அப்பா... <உங்களுக்கு கொடுக்க இஷ்டம் இல்லைன்னா வேண்டாம். உங்க மாப்பிள்ளை மட்டும் தான், எங்க வீட்டில் அடுத்தவுங்க கிட்ட கை நீட்டி சம்பளம் வாங்குற வேலை பார்க்கறார். மீதி அவங்க அண்ணன்ங்க நாலு பேரும், அவங்கவங்க பிசினஸ் பார்த்து, நல்ல வசதியா இருக்காங்க. நம்ம வீடு சொந்த வீடு தான். அம்மாவும், நீங்களும் இப்பவும் சம்பாதிக்கிறீங்க. அது உங்க செலவுக்கு போதும். சும்மா தூங்கிட்டு இருக்கிற பணத்தை தானே கேட்கிறோம். எங்க மேல நம்பிக்கை இருந்தா கொடுங்க. இல்லைன்னா பரவாயில்லை...' என்று கண்களை கசக்கினாள்.'அதுக்குள்ளே அவசரப்படாதேம்மா. ஒரு வாரம் பொறுங்க. நான் அம்மாகிட்ட கலந்து பேசி, ஞாயிற்றுக்கிழமை உங்களுக்கு சொல்றேன்...' என்றார் பத்மநாபன்.மூவரும் அம்மாவிடம் தனியாக பேசி, அவளை தாஜா செய்து விட்டு சென்றனர்.அன்று இரவு, 'சாரு... நீ என்னம்மா சொல்றே?''இதுல நான் சொல்றதுக்கு என்னங்க இருக்கு? நாம வாழறதே நம்ம பசங்களுக்காகத்தான். இனிமே நமக்குன்னு என்னங்க தனி அபிலாஷை இருக்கு?''நமக்கு பென்ஷன்னு எதுவும் கிடையாது. நாளைக்கு உடம்புக்கு ஏதாவது வந்தா என்ன செய்றது? எனக்கு பி.பி., சுகர், எல்லாம் இருக்கு. இப்ப எல்லாம் கண்ட்ரோல்ல இருக்கு. ஆனா, இன்னும் வயசாகும் போது...'முடிக்க விடவில்லை சாரதா. 'எப்பவும் பாசிட்டவாவே நினைக்கணும்ன்னு நீங்க தானே சொல்வீங்க? அப்படியே ஏதாவதுன்னா, நம்ம பசங்க பார்த்துக்கிட்டு சும்மாயிருப்பாங்களா? நாமளே, நம்ம பசங்களை நம்பலைன்னா எப்படிங்க?''அது சரி சாரு... இவங்களுக்கு பிசினஸ் பற்றி என்ன தெரியும்? ஏதாவது ஏடாகூடமா ஆச்சுன்னா என்ன செய்வாங்க? அது தான் என் கவலை...''அதெல்லாம், இந்த காலத்து பசங்க புத்திசாலியா தான் இருப்பாங்க. நீங்க கவலைபடாதீங்க...''இப்ப நான் டியூஷன் எடுக்கறதுல வர்ற பணத்தையும், உன் குக்கரி கிளாஸ்ல வர்ற பணத்தையும் வைச்சுக்கிட்டு, உன்னால சமாளிக்க முடியுமா சாரு?''மனசிருந்தா மார்க்கமுண்டுங்க. நமக்கு சொந்த வீடு. வாடகையும் கொடுக்க வேண்டியது இல்லை. அனுசரிக்க முடியாதா?''அப்புறம் உன் விருப்பம்...' என முடித்து கொண்டார்.அதற்கு பின், காரியங்கள் மளமள வென்று நடந்தன. அந்த ஞாயிற்றுக்கிழமையே, மூவர் குடும்பத்தையும் வரவழைத்து, மூன்று பேருக்கும் தனித்தனியே ரூபாய் பத்து லட்சத்திற்கான காசோலையை கொடுத்தார்.அதற்குப் பின் இரண்டு, மூன்று முறை எப்போதும் வருவதைப் போல், அவர்கள் வந்து போய் கொண்டு இருந்தனர். ஆனால், எப்போது தொழிலைப் பற்றி பேச்செடுத்தாலும், 'இன்னும் தொடங்கலை, ப்ளான் போட்டுக்கிட்டிருக்கிறோம், பேச்சு வார்த்தை நடக்குது, இன்னும் ஒண்ணும் தீர்மானமாகவில்லை...' என்று கூறினார்களே தவிர, என்ன தொழில் தொடங்கப் போகின்றனர் என்பதை பற்றி, ஒன்றும் விளக்கமாக கூறவில்லை.ஆறு மாதங்கள், எந்த பிரச்னையுமின்றி அப்படியே போனது. பத்மநாபனும், அவர்களிடம் தொழிலை பற்றி, அதற்கு பின் எதுவும் கேட்கவில்லை.ஒரு நாள், மதியம் சாப்பிட உட்கார்ந்த பத்மநாபன், அப்படியே மயங்கி சரிந்தார்.அக்கம் பக்கம் இருந்தோரின் உதவியுடன், மருத்துவமனையில் சேர்த்து விட்டு, பிள்ளைகளுக்கு தகவல் கொடுத்தாள் சாரதா.டாக்டர்கள் பரிசோதித்து, உடனே ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறினர்.பிள்ளைகள் பதறியடித்து மருத்துவமனையில் குழுமினர். ஆஞ்சியோ முடித்த மருத்துவர்கள், இதயத்திற்கு செல்லும் ரத்தக்குழாய்களில் மூன்று அடைப்புகள் இருப்பதால், உடனே பை பாஸ் சர்ஜரி செய்ய வேண்டும் என்று கூறி விட்டனர்.சீதா தாயிடம், 'அம்மா...கவலைப்படாதேம்மா, அப்பா சரி ஆயிடுவார்...' என்றாள்.அன்று மாலை டாக்டர், 'நீங்கள் நாளை வீட்டுக்கு போயிடலாம். பணம் ரெடி செய்துட்டு, 'அட்மிட்' ஆகும் போது, ஆப்ரேஷன் செய்துடலாம். அதுவரை, நான் கொடுத்த மருந்து, மாத்திரைகளை ஒழுங்கா சாப்பிடுங்க...''உணவு அட்டவணையும், இன்சுலின் அளவு பற்றிய விளக்கமும் சிஸ்டர் வந்து கொடுப்பாங்க. அதை கரெக்டா எடுத்துக்குங்க. இப்பல்லாம் பைபாஸ் சர்ஜரி ஒன்னும் பெரிய விஷயமில்லை, தைரியமா இருக்குறது தான் முக்கியம்...'வீட்டிற்கு வந்து படுக்கையில் படுத்தார் பத்பநாபன்.'மோகன்... எவ்வளவு ஆகும்ப்பா சர்ஜரிக்கு...''மூணு லட்சத்து, 50 ஆயிரம் ஆகும்ன்னு கவுன்டர்ல சொன்னாங்கம்மா...''சரிப்பா. சீக்கிரம் தம்பிகிட்ட கலந்து பேசி ரெடி செய்...' கணவரின் படுக்கையை சரி செய்தவாறே கூறிய சாரதா, மகனின் இருண்ட முகத்தை பார்க்கவில்லை. ஆனால், அதை கவனித்தார் பத்மநாபன்.மறு நாளிலிருந்து, பிள்ளைகள் யாரையும் வீட்டில் பார்க்க முடியவில்லை. ரெண்டு நாள் பொறுத்தவள் கணவரிடம் பொருமினாள். 'என்னங்க...இந்தப் பசங்க யாரையும் வீட்டுப் பக்கமே காணலை?' பத்மநாபன் ஒன்றும் சொல்லவில்லை. ஒரு கசந்த புன்னகை முகத்தில் ஓடியது.மனம் கேளாமல் மோகனுக்கு போன் செய்தால், ரிங் போய் கொண்டே இருக்க, மகன் எடுக்கவில்லை.கார்த்திக்கிற்கு அடித்தால், 'சுவிட்ச் ஆப்' என்று வந்தது.மீண்டும் மூத்த மகனின் வீட்டுக்கு போன் செய்தாள். மருமகள் சித்ரா எடுத்து, 'அத்தை அவர் வேலைக்கு போயிட்டார். வந்தா சொல்றேன்,' என்று கூறியவள், மறந்தும் மாமனாரை விசாரிக்கவில்லை.எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த பத்மநாபன், 'அவசரத்திற்கு நம்ம வீட்டை விற்று பணத்தை புரட்டலாம். அப்புறம் மீதியை பார்த்துக்கலாம். என்ன சொல்றே? இனிமேல் நாம யாரையும் எதிர்பார்க்கிறது எனக்கு உசிதமா படலை. வீட்டை வித்து, சர்ஜரியை முடிச்சிட்டு, மீதி பணத்தை நம்ம எதிர்காலத்துக்கு வச்சுக்கலாம். எனக்கும் முன்ன மாதிரி, உழைக்க முடியும்ன்னு தோணலை...''நான் நாளைக்கு பெரியவன் வீட்டுக்கு போயிட்டு வரேன். அப்புறம், இது பற்றி யோசிக்கலாம்...' என்று கூறினாள் சாரதா.மறுநாள், மோகனுக்கு போன் செய்யாமல், விடியற் காலையிலேயே கிளம்பி, அவன் வீட்டிற்கு போய் விட்டாள் சாரதா.'வாம்மா... நான் அவசரமா வெளியிலே கிளம்பிக்கிட்டு இருக்கேன். நீ சாப்பிட்டு விட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு போம்மா. அதுக்குள்ளே உன் பேர பசங்க ஸ்கூல் விட்டு வந்துடுவாங்க. அவங்களையும் பார்த்துட்டு போகலாம்...''டேய் மோகன்... அங்க அப்பா, தனியா இருக்கார். சர்ஜரி உடனே செய்யணும். அதுக்காகத் தான் உன் கிட்டே பேச வந்தேன்...''அம்மா, தப்பா நினைக்காதேம்மா. நீங்க கொடுத்த பணத்தை, அப்படியே தொழில்ல போட்டுட்டேன். அது பத்தாம நான் சேர்த்து வைச்ச பணம், சித்ரா நகை, அதுவும் போதாம கடன் வேற வாங்கிட்டேன். இப்ப என்கிட்ட பணம் எதுவும் இல்லை...' என்று நிர்தாட்சண்யமாக பேசினான் மோகன்.நெஞ்சம் பதைத்தது சாரதாவிற்கு, 'சரிப்பா, நான் கிளம்பறேன்...' செருப்பை கூட மாட்டத் தோன்றாமல், கேட்டை நோக்கி நடந்தாள். கேட்டை நெருங்கும் போது தான் காலில் பட்ட சூடு, செருப்பு அணியாததை உணர்த்தியது. வீட்டை நோக்கி திரும்பி நடந்தாள். மோகன் போனில் பேசிக் கொண்டிருந்தது காதில் விழுந்தது.'கார்த்திக்... அடுத்து அம்மா உங்க வீட்டுக்கு வருவாங்க. நீயும், நான் சொன்ன மாதிரியே சொல்லு. மாத்தி உளறினா நீ தான் பாரம் சுமக்கணும். சீதா கிட்டேயும் உஷார் படுத்து...'செருப்பை மாட்டிக் கொண்டிருந்த சாரதாவின் பெற்ற வயிறு பற்றி எரிந்தது.மற்ற பிள்ளைகள் வீட்டிற்கு போகாமல் நேரே, தன் வீட்டிற்கு திரும்பினாள்.சாரதாவின் முகத்தை பார்த்தவுடனேயே விஷயம் புரிந்து விட்டது பத்மநாபனுக்கு. இருவரும் ஒன்றும் பேசிக் கொள்ளவில்லை...மறுநாள் பத்மநாபனின் நண்பர் மாணிக்கத்தை வரவழைத்து, வீட்டை உடனடியாக விற்க வேண்டிய அவசியத்தை கூறினார் பத்மநாபன். மூவரும் கலந்து ஆலோசித்து, முன்னணி தினசரிகளில் விளம்பரம் கொடுத்தனர்.விளம்பரம் வந்த மறுநாளே, நிறைய தொலைபேசி அழைப்புகளோடு நேராகவும், ஆட்கள் வீட்டை பார்த்து போக வந்தனர்.அதற்கு அடுத்த நாள் அந்த அதிர்ச்சி தகவலுடன் வீட்டிற்கு வந்தார் மாணிக்கம். மூன்று பிள்ளைகளும் சேர்ந்து, அந்த வீட்டின் மேல் தங்களுக்கும் பாத்தியதை இருப்பதால் விற்கக் கூடாது என்று, 'ஸ்டே' வாங்க தீர்மானித்திருப்பதாக மாணிக்கத்திடம் கூறியிருக்கின்றனர்.சாரதா அன்று முழுவதும் புலம்பி தீர்த்து விட்டாள். மாணிக்கமும், அவர் மனைவியும் அன்று அங்கேயே தங்கி விட்டனர். இரவு மாணிக்கமும், பத்பநாபனும் நெடு நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.அதற்கு அடுத்த நாள் மாணிக்கம், வழக்கறிஞர் ஒருவரை அழைத்து வந்தார். பூட்டிய அறையில் நீண்ட நேரம், அவர்கள் விவாதித்து விட்டு எங்கேயோ வெளியில் சென்று வந்தனர்.மறுநாள் காலை விடியும் போது, பத்மநாபன் விழிக்கவே இல்லை. தூக்கத்திலேயே கடும் மாரடைப்பினால் உயிர் பிரிந்திருந்தது.மனைவி, உறவு, நட்பு, அக்கம் பக்கம் சகலரும் குழுமி, பத்மநாபனை வழியனுப்பி வைத்தனர்.இந்த கால வழக்கப்படி, ஐந்து நாட்களிலேயே பத்மநாபனின் சகல காரியங்களும் முடிந்தது.மறுநாள், சாரதா தனியாக புறப்பட்டு சென்று, வழக்கறிஞர் கிருபாகரனை சந்தித்தாள்.அதற்கு சில நாட்கள் கழித்து, சாரதாவின் பிள்ளைகள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று சொல்லி கோர்ட் உத்தரவு வந்தது.விஷயம் இது தான்: சாரதா தன் மூன்று பிள்ளைகளின் மேல் கேஸ் போட்டிருந்தாள். 'தன் கணவன் கஷ்டப்பட்டு உழைத்து, கடைசி காலத்துக்கென்று வைத்திருந்த பணத்தை, தன் பிள்ளைகள் தொழில் செய்வதாக கூறி ஏமாற்றி, பிடுங்கிக் கொண்டதால் அவருக்கு பலத்த மன உளைச்சல் ஏற்பட்டது.தன் கணவன் அவ்வாறு ஏமாற, தாமும் காரணம் என்ற சாரதா, பெற்ற பிள்ளைகள் மேல் இருந்த அதீத பாசத்தால், கணவரிடம் அந்த கோரிக்கையை கூறிய தானும் ஒரு குற்றவாளி, என்று சாரதா தன் மனுவில் கூறியிருந்தாள்.'சிறு வயதில் தந்தையை இழந்தவர் தன் கணவர். அவர் அம்மா இட்லி கடை வைத்து, அவரை டிகிரி படிக்க வைத்தது, அவருக்கு வேலை கிடைத்த ஒரு மாதத்தில் இறந்தது, அதற்கு பின் மிக கஷ்டப்பட்டு, அவர் கட்டிய வீட்டை கூட, அவர் மருத்துவ செலவுக்கு விற்க முடியாமல் செய்ய துணிந்த மகன்களின் செய்கைகளை விளக்கி, தன் கணவனுக்கு சொந்தமான அவருடைய ஓய்வூதிய பணத்தை களவாடி, தொழிலையும் தொடங்காத தன் பேராசைக்கார பிள்ளைகளிடமிருந்து அந்த பணம், 30 லட்சத்தை வாங்கிக் கொடுத்து, தவறான வழி காட்டிய தனக்கும், தன்னுடைய மூன்று பிள்ளைகளுக்கும், தண்டனை வழங்குமாறு...' கேஸ் போட்டிருந்தாள்.உணவு இடைவேளை முடிந்து, நீதிபதி உள்ளே நுழைய, தன் நினைவலைகளிலிருந்து மீண்டாள் சாரதா.நீதிபதி முதல் வழக்காக, இவர்களுடையதை எடுத்துக் கொண்டு தீர்ப்பு வழங்கினார்.''சாரதா அம்மாள் கொடுத்த வழக்கு மிகச் சரியானதே. பத்மநாபன் பிள்ளைகளை நம்பி, அவர்களுக்கு ஓய்வுதிய பணத்தை கொடுத்து ஏமாந்தார். ஏற்கனவே, தங்கள் பெற்றோரால் நன்கு படிக்க வைக்கப்பட்டு, நல்ல நிலையில் உள்ள பிள்ளைகள் பேராசையுடன் நடந்து கொண்டதும், சுயநலமாக செயல்பட்டதும், மிக வன்மையாக கண்டிக்கத்தக்கது.''அந்த முப்பது லட்சத்தை, அவர்கள் பெற்றுக் கொண்டதற்கு வங்கி ஆதாரம் உள்ளது. எனவே, அந்தப் பணத்தை அவர்கள் பெற்றுக் கொண்ட நாளிலிருந்து, இன்று வரைக்கும் உள்ள நாளுக்கு, வட்டியுடன் கணக்கிட்டு, அந்தப் பணத்தை மூவரும் சாரதா அம்மாவிடம் திருப்பித் தர வேண்டும்.''பத்மநாபன் வீட்டை பொறுத்த வரை, அது அவர் சுயமாக உழைத்து கட்டிய வீடு. அதை என்ன வேண்டுமானாலும் செய்ய, அவருக்கு உரிமை உண்டு. பத்மநாபன் தன் நண்பரின் உதவியுடன் உயில் எழுதி, அதை பதிவும் செய்திருக்கிறார். அதன்படி அந்த வீடு சாரதாவை சேரும்.''அந்த உயிலில் அவர், 'அந்த வீட்டை' இது போல் பிள்ளைகளால் பாதிக்கப்பட்ட, ஆதரவற்ற பெற்றோர்கள் தங்கும் புகலிடமாக மாற்றச் சொல்லி கூறியிருக்கிறார். அவ்வாறு வரும் ஆதரவற்றவர்களுக்கு, அவர்கள் தங்கள் வாழ்நாளின் கடைசி காலத்தை நிம்மதியாக கழிக்குமாறு அவர்களுக்கு ஏற்ற வேலையை அமைத்துக் கொடுத்து, மன நிம்மதியுடன் வாழ சாரதா வழி வகுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.''சாரதா, இப்போது திரும்பப் பெறும் இந்த, 30 லட்ச ரூபாயை, அந்த இல்லத்தை பராமரிக்கும் நல்ல காரியத்திற்கு செலவழித்துக் கொள்ளலாம்.''அடுத்து, சாரதா அம்மையார் தனக்கும், மகள், மகன்களுக்கும் தண்டனை தருமாறு கோரியிருக்கிறார்.''ஒரு நல்ல தாயாக தன் பிள்ளைகளை நம்பி, சாரதா செய்த செயலில், எந்த வித தப்பும் இல்லை. எனவே, அவருக்கு எந்த தண்டனையும் தேவையில்லை. அவர் கணவர் கேட்டுக் கொண்ட செயலை மேற்கொள்ளும் போது, அவர் மனம் கண்டிப்பாக ஆறுதல் அடையும்.''மகன்கள், மகள் தண்டனை பற்றிப் பார்க்கும் போது, ஒரு நல்ல பெற்றோருக்கு பிறந்தும், தங்கள் தகப்பனாரின் மருத்துவ செலவை ஏற்காமல், கடமை தவறிய பிள்ளைகளை, இந்த நீதிமன்றம் வன்மையாக கண்டிக்கிறது. அவர்களுக்கு தண்டனையாக, அவர்கள் மூவரும் சேர்ந்து, இதே போல் மருத்துவ சிகிச்சைக்கு பணம் இல்லாமல் அவதிப்படும் ஒருவருக்கு, அதற்கான பண உதவியளித்து, அந்த ரசீதை கோர்ட்டில் கட்ட வேண்டும். அதே போல், அந்த சிகிச்சை காலத்தில் மூவரும், அந்த நபரின் அருகில் இருந்து, அவருக்கு தொண்டாற்ற வேண்டும். இதுவே அவர்களுக்கான தண்டனை.''நம் நாட்டின் கலாசாரமான கூட்டுக் குடும்ப முறை. அனேகமாக மறைந்து விட்ட சூழ்நிலையில், மனிதன் பின்பற்ற வேண்டிய மனிதாபிமானம் என்ற அடிப்படைக் குணத்தை கூட இழந்து விடுகின்றனர். இது மிக மோசமான, சமூக சூழல் நிலவ மிக முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது. அத்தகையோர் திருந்துவதற்கான தீர்ப்பாக இது இருந்தால், நீதி தேவதை மனம் மகிழ்வாள்.''இது போன்ற சூழலை, எந்த தாய்க்கும் ஏற்படுத்த வேண்டாம் என்று, இந்த நீதிமன்றம் கேட்டுக் கொள்கிறது,'' என நீதிபதி தன் தீர்ப்பை முடிக்க, சாராதாவின் மனதில் மெல்ல, மெல்ல அமைதி குடிபுகத் தொடங்கியது. *** வி.ஜி.ஜெயஸ்ரீ