கீதையும் கண்ணனும்!
அனன்யாஸ்சிந்தயந்தோ மாம்யே ஜனா; பர்யுபாஸதேதேஷாம் நித்யாபியுக்தானாம்யோ ஷே க்மம் வஹாம்யஹம்- என்பது கண்ணன் வாக்கு; தன்னையே நினைத்து, உபாசிக்கும் பக்தர்களின் யோக, ஷேமங்களை, தான் வகிப்பதாக, கீதையில் கூறுகிறார் கண்ணன்.யோகம் என்பது, வேண்டியதை பெறுவது; ஷேமம் என்பது, பெற்றதை காப்பாற்றுவது. அதாவது, இறைவன், நமக்கு வேண்டியதை தருவதுடன், அவற்றை பாதுகாக்கவும், செய்கிறார் என்பது இதன் அர்த்தம்.சுகானந்தர் எனும் பாகவதர், மிகுந்த பக்தியுடன் தினமும் ஹரி பூஜை செய்வதுடன், அடியார்களுக்கு உணவு இட்ட பின், மீதமிருப்பதை உண்பதையே வழக்கமாக வைத்திருந்தார். அவருடைய தூய்மையான பக்தியையும், அடக்கத்தையும் கண்ட ஊரார், அவரை புகழ்ந்து, அவருக்கு மரியாதை செலுத்தினர்.ஆனால், ஒரு இடத்தில், நல்லவர் நான்கு பேர் இருந்தால், கெட்டவர்களும் நான்கு பேர் இருப்பர் என்பது தானே உலக நியதி. சுகானந்தரிடம் பொறாமை கொண்ட சிலர், அவரை எப்படியாவது அவமானப்படுத்த வேண்டும் என நினைத்து, ஒரு நாள், தங்கள் கையில் இருந்த லட்டு ஒன்றை அவரிடம் கொடுத்து, 'சுகானந்தரே... பெருமாளுக்கு நைவேத்யம் செய்த லட்டு இது; உண்ணுங்கள்...' என்று கூறி வற்புறுத்தினர்.லட்டை வாங்கி உண்டார் சுகானந்தர். அதுவரை அமைதியாக இருந்தவர்கள், அவர் உண்டு முடித்ததும், 'ஆஹா... நீங்கள் தவறு செய்து வீட்டீர்கள்; இந்த லட்டு பெருமாளுக்கு நைவேத்தியம் செய்தது அல்ல; தூய்மையோ, ஒழுக்கமோ இல்லாத ஒருவன் தயாரித்தது. இப்பாவத்திற்கு நீங்கள் பிராயச்சித்தம் செய்தாக வேண்டும்...' என உரக்க கத்தினர்.அவர்களின் உள்நோக்கத்தை அறிந்த சுகானந்தர், தாம் உண்ட லட்டை, அப்படியே வாயிலிருந்து வெளிப்படுத்தி, 'இந்தாருங்கள் நீங்கள் தந்த லட்டு...' என்று கூறி, அவர்களிடமே ஒப்படைத்தார். வம்பிழுக்க வந்தவர்கள், வாயடைத்துப் போனதுடன், பயந்து, சுகானந்தரின் திருவடிகளில் விழுந்து, மன்னிப்பு வேண்டினர். சுகானந்தரின் மனம் கண்ணனிடமே நிலைத்து இருந்ததால், தீயவர்களின் இகழ்ச்சியையோ, மன்னிப்பையோ அவர் பொருட்படுத்தவில்லை.சில நாட்களுக்கு பின், திருத்தல யாத்திரை புறப்பட்ட சுகானந்தர், தன் மனைவி சுரசுரியை அழைத்து, 'நான் திரும்பி வரும் வரை, பெருமாளையும், பாகவதர்களையும் பூஜை செய்து வா...' என்று சொல்லி புறப்பட்டார். மனைவியும், அவ்வாறே செய்து வந்தாள்.சுகானந்தர் ஊரில் இல்லாததையும், அவர் மனைவி திருத்தொண்டு செய்து வருவதையும் அறிந்த காமுகன் ஒருவன், சுரசுரியை அடையும் நோக்கத்துடன் பாகவதரைப் போல் வேடமிட்டு சுகானந்தர் வீட்டிற்கு வந்தான். சுரசுரியை காமக்கண்களுடன் உற்றுப் பார்த்தான் காமுகன்; அவன் கண்களுக்கு, அந்த உத்தமப் பெண், சீற்றம் கொண்ட புலியின் வடிவில் தெரிந்தாள். அவ்வளவுதான் அங்கிருந்து ஓட்டம் பிடித்தான் தீயவன்.மறுநாள் காலை, சுரசுரியை தேடி வந்த தீயவன், அவள் கால்களில் விழுந்து, 'தாயே... என்னை மன்னித்து விடு...' என வேண்டினான். தல யாத்திரை முடிந்து வந்த சுகானந்தர், விஷயம் அறிந்து, மனம் திருந்திய அவனை, சீடனாக ஏற்று, அருள் புரிந்தார்.தன்னையே நினைத்து, துதிப் போருக்கு அருள் புரிவதோடு, அவர்களை காத்து ரட்சிப்பதுடன், அவர்கள் மூலமாகவே பலரையும் திருத்தி, நல்வழி காட்டி அருள்பவர் பகவான் கண்ணன். இதையே மேலே குறிப்பிட்டுள்ள கீதையின் வரிகள் சுட்டிக்காட்டுகின்றன.பி.என்.பரசுராமன்திருமந்திரம்!சந்திரன் பாம்பொடும் சூடும் சடாதரன்வந்து என்னை ஆண்ட மணிவிளக்கு ஆனவன்அந்தமும் ஆதியும் இல்லா அருள்பொருள்சிந்தையின் மேவித் தியக்கு அறுத்தானே!கருத்து: ஆதியும், அந்தமும் இல்லா அரும்பெரும் ஜோதியான இறைவன், தன்னை அடைந்தவர்களின் சிந்தை இருளைப் போக்கியருளுவார். திருமுடியில் சந்திரனையும், பாம்பையும் சூடியிருக்கும் சிவந்த சடை முடி கொண்ட சிவபெருமான், என்னை ஆட்கொண்டார்.விளக்கம்: முடிவும், தோற்றமும் இல்லாத ஒளிமயமான அந்த இறைவன், என் சிந்தையில் மேவி, என் மயக்கத்தை போக்கி அருளினார்.