கண்ணாடி திரை!
அசாதாரண அமைதி நிலவியது, வீட்டில்.அம்மாவும், மகனும் ஒருவர் மீது ஒருவர், கோபமாக இருக்கின்றனர் என்பது, தெரியவே செய்தது, ராஜனுக்கு.இதில், தலையிட விரும்பவில்லை அவர்.கோபத்துக்கான காரணம், சின்ன விஷயம் தான்.'அம்மாவுக்கு, வர வர, இங்கிதமே தெரியலை... எதுவா இருந்தாலும், அவங்ககிட்ட சொல்லிட்டு, அவங்க அனுமதியோடு தான், செய்யணும்ன்னு நினைக்கிறாங்க...'அது எப்படி சரி வரும். நான் என்ன சின்ன குழந்தையா... எனக்கும் கல்யாணம் ஆகிடுச்சு, புது பெண்டாட்டி எதிரில், அம்மா, என்னை சிறு பிள்ளை போல நடத்தறது கொஞ்சமும் பிடிக்கலை...' -இது, பிரதீப்பின் வாதம்.'இது என்ன, நம்ப வீட்டில் புதுசா... எதுவா இருந்தாலும், நான் கேட்க தான் செய்வேன்... எப்போதும் சொல்லிட்டு தானே போவான், இப்ப என்ன புது பழக்கம்... நான் கேட்பது, ஒண்ணும் தப்பில்லையே... 'ஷாப்பிங்' போறேன்னு கிளம்பினாங்க, அவங்களுக்கும் சேர்த்து சமைத்து வைத்து காத்திருந்தேன்...'சாயந்தரம் வந்து, 'என் பிரண்ட், விருந்துக்கு கூப்பிட்டதை மறந்துட்டேன்... அவன் வீட்டுக்கு போய் சாப்பிட்டோம்... எங்களுக்கு சாப்பாடு வேண்டாம்...'ன்னு சொல்றான்...'இதை, முதலிலேயே சொல்லிட்டு போயிருக்கக் கூடாதா... இவனுக்காக, நான் சமைச்சு வச்சு காத்திருந்தது தான் மிச்சம். அதைக் கேட்டால் கோபம் வருது... கல்யாணமானாலும், அவன் என் பிள்ளை தானே...' - இது, பத்மாவின் வாதம்.யாருக்கு தீர்ப்பு சொல்வது?''மாமா... இந்தாங்க, காபி,'' என்றாள், மருமகள் வித்யா.''உன் அத்தைக்கு கொடுத்தியா?''''இப்ப வேண்டாம்... அப்புறம் குடிக்கிறேன்னு சொல்லிட்டாங்க,'' என்றாள்.''அவ அப்படி தான். நீ போட்டு எடுத்து வந்து கொடு, குடிப்பாள்,'' என்றார், ராஜன்.கல்யாணம் பேசி முடித்தவுடன், மகனை அழைத்து, 'பிரதீப்... நீ, இந்த ஊரிலேயே வேலை பார்க்கிறே... இவ்வளவு நாள் எங்களோடு இருந்தே... இனி, உனக்குன்னு மனைவி, குடும்பம் அமையப் போகுது... நாளைக்கு, மாமியார், மருமகள்ன்னு எந்த பிரச்னையும் வராம, சுமூகமா இருக்கணும்ன்னா, நீ தனியா போறது தான் நல்லது...' என்றார், ராஜன்.'நீங்க என்னப்பா சொல்றீங்க... ஒரே பிள்ளை... இவ்வளவு பெரிய வீடு... நான் ஏன் தனியா போகணும்... அப்படியென்ன பிரச்னை வரப்போகுது...'வர்றவள்கிட்டே நான் பேசிக்கிறேன். கடைசி வரை, என் அம்மா, அப்பாவோடு தான் இருப்பேன்... நீ எல்லாரையும் அனுசரிச்சு நடந்துக்கன்னு சொல்றேன்... எங்களால் எந்த பிரச்னையும் வராது... இந்த பேச்சை, இத்தோடு விடுங்க...' என்றான், பிரதீப்.'என்னங்க... உங்களுக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு... கல்யாணமானதும், நம்ப பிள்ளையை தனியா போகச் சொன்னீங்களாமே... எதுக்குங்க, கடைசி வரை நம்ம இரண்டு பேரும், ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்துட்டு இருக்கறதுக்கா...'வேண்டாங்க... பேரன், பேத்தின்னு பிறந்து, எல்லாரும் ஒண்ணா, ஒத்துமையா சந்தோஷமா இருப்போம்... நீங்க கவலையை விடுங்க... மருமகள்கிட்ட எந்த பிரச்னையும் பண்ண மாட்டேன்... நல்லபடியா பார்த்துப்பேன்...' என்றாள், பத்மா.சொன்னது போலவே, மருமகளிடம் பிரியத்துடன் நடந்து கொண்டாள். எல்லா வேலைகளையும் சொல்லிக் கொடுத்தாள், பத்மா.ஏதும் அறியாமல் செய்தாலும், 'உனக்கு இது புதுசு வித்யா... போக போக சரியாயிடும். குழம்பு அடிப் பிடிச்சுடுச்சுன்னா நல்லா இருக்காது, துாக்கி ஊத்து... வேற செய்யலாம், எவ்வளவு நேரம் ஆகப்போகுது...' என்பாள்.இப்படி போய் கொண்டிருந்த குடும்பத்தில், மருமகள் - மாமியாருக்கு இடையில் பிரச்னை இல்லை. கல்யாணம் ஆன பிறகு, அம்மாவுக்கும், பிள்ளைக்கும் இடையில் அடிக்கடி வாக்குவாதம் நடக்கும்.'நீ மட்டும் தானே போறே... கார் எதுக்கு, 'பைக்'கில் போனால் என்ன... சினிமாவுக்கு போறதுன்னு முடிவு பண்ணிட்டா, காலையிலேயே சொல்லிடு... எங்களுக்கு இட்லி ஊத்தி வச்சுடுவேன்... நீங்க சினிமா முடிச்சு, ஓட்டலில் சாப்பிட்டு வந்திடுங்க... இரவு, நாங்க இட்லியை சாப்பிட்டுக்குவோம்... வேலை மிச்சமாகும்...' என்பாள்.'இதோ பாரு, எல்லாத்திலும் தலை நீட்டறதை முதலில் நிறுத்து... எனக்கு எப்ப தோணுதோ, அப்ப சினிமாவுக்கு போவேன்... பைக், கார் வச்சிருக்கேன்... எதில் போகணும்ன்னு நினைக்கிறேனோ, அதில் போவேன்...' என்பான், பிரதீப்.பிரதீப்பின் பதிலில் கோபப்படும் பத்மா, முகத்தை துாக்கி வைத்துக் கொள்வாள்.அன்று ஞாயிற்றுக்கிழமை -பேப்பர் படித்து முடித்தவர், ''வித்யா... வித்யா,'' என, மருமகளை அழைத்தார், ராஜன்.''கூப்பிட்டீங்களா, மாமா!''''உன் புருஷனையும், அத்தையையும் நான் கூப்பிட்டேன்னு வரச் சொல்லும்மா,'' என்றார்.இருவரும் வந்து, ஆளுக்கொரு பக்கம் முகத்தை திருப்பியபடி உட்கார்ந்திருந்தனர்.''எதுக்குப்பா கூப்பிட்டீங்க... இந்த வீட்டில், இவங்க சொல்றதை தான், எல்லாரும் கேட்கணும்... இவங்க இஷ்டபடி தான் நடக்கணும்ன்னு நினைக்கிறாங்க... அது சரி வராதுப்பா... நீங்க சமாதானம் பேச வேண்டாம்,'' என்றான், பிரதீப்.''சரிப்பா... உங்க இரண்டு பேரையும் சமாதானப்படுத்த விரும்பலை... இந்த பிரச்னைக்கு யோசிச்சு, ஒரு முடிவுக்கு வந்து, அதை சொல்ல தான் கூப்பிட்டேன்.''உன் அம்மா, எப்பவுமே இப்படி தான்... இது, உனக்கு புதுசு இல்லை... எதையும் முன் கூட்டியே தெரிஞ்சுக்க ஆர்வம்... பிள்ளை, தன் பேச்சை தட்டமாட்டான்கிற நம்பிக்கை... எதையும் அன்பாக, தன்மையாக சொல்றதை விட, உரிமையோடு அதிகாரமாக சொல்வது தான், அவள் பழக்கம்.''இவ்வளவு நாள், தப்பாக தெரியாத விஷயம்... இப்ப முதிர்ச்சி அடைஞ்சதாக நினைக்கிற... அவள் சொல்ற எதையும், உன்னால் ஏத்துக்க முடியலை...''இப்படியே போனா, நம் குடும்பத்தில் ஒற்றுமை பாதிக்கும்... ஒரே இடத்தில், ஆள் ஆளுக்கு முகத்தை துாக்கி வச்சுட்டு நடமாடணும்... கல்யாணத்துக்கு முன் சொன்னதை தான், இப்பவும் சொல்றேன்...''நீயும், வித்யாவும் தனி வீடு பார்த்து போயிடுங்க... நாளும், கிழமையும் ஒண்ணு சேர்வோம்... அம்மாவின் தலையீடும் இருக்காது... நீயும், உன் இஷ்டத்துக்கு இருக்கலாம்... இரண்டு பேருக்கும் இடையில் இரும்பு திரை விழுந்தாச்சு, அகற்றுவது கஷ்டம்ப்பா... இது தான் என் முடிவு... என்னப்பா சொல்ற,'' என்றார், ராஜன்.''மாமா... நான் கொஞ்சம் பேசலாமா,'' என்றாள், வித்யா.''சொல்லும்மா,'' என்றார்.''நீங்க சொல்ற முடிவு, தப்பு மாமா... சொல்லப் போனால், விஷயமே இல்லை... இவங்க ரெண்டு பேர் கோபத்துக்கும் காரணம், 'ஈகோ!' யார் முதலில் இறங்கி வர்றதுங்கிறது தான், அவங்களுக்குள் இருக்கிற பிரச்னை...''நம்ப பிள்ளை செய்யிறது எல்லாம் சரியாக தான் இருக்கும்ன்னு அம்மா நினைக்கணும். நம்ப அம்மா தானே, கேட்டால் கேட்டுட்டு போறாங்க... 'சரிம்மா, இனி, சினிமாவுக்கு போகணும்ன்னு முதலிலேயே முடிவு பண்ணினா சொல்றேன்... திடீர்ன்னு போனா, சொல்ல முடியாது...'ன்னு பக்குவமா சொல்லலாம்...''காரோ, பைக்கோ எது சவுகரியமோ, அதில் போகட்டும்ன்னு அத்தையும் விட்டுடணும்... இதெல்லாம் அல்ப விஷயங்கள்... இதுக்கு மேல, இருவருக்கும் இடையில் இரும்புத் திரை விழுந்துடுச்சுன்னு சொல்றீங்க... ''இவங்களுக்கு இடையில் இருப்பது, கண்ணாடி திரை தான் மாமா... அதை யார் வேணும்னாலும் உடைச்சுட்டு வரலாம்... அவங்க விட்டு தர வேண்டியது, 'ஈகோ'வை தான்... அம்மாவுக்கும், பிள்ளைக்கும் இடையில், என்ன மாமா பெரிய கோபம்... அவங்க ஒருத்தர் மேல் ஒருத்தர் வச்சிருக்கிற பாசமே, அதை சரி பண்ணிடும்... நீங்க எழுந்து வாங்க மாமா,'' என்றாள், வித்யா.மவுனமானான், பிரதீப்.''இன்னைக்கு ஞாயிற்றுக் கிழமை. சிக்கன் பிரியாணி செய்யட்டுமா... இல்லை, சிக்கன் குழம்பு, வறுவல் செய்யட்டுமா பிரதீப்,'' என்றாள், பத்மா.''உனக்கு எது சவுகரியமோ... அதை செய்மா... நீ எது செய்தாலும், நல்லா இருக்கும்,'' என்றான், பிரதீப்.மாமனாரும், மருமகளும் ஒருவரையொருவர் பார்த்து சிரிக்க, பிரதீப்பின் தலையை அன்பாக வருடினாள், பத்மா.பரிமளா ராஜேந்திரன்