மூச்சுப்பிடிப்பு அம்மன்!
வாயுத்தொல்லை, மூச்சுத்திணறல் ஏற்பட்டால், மருத்துவரை பார்க்கிறோம். அப்படி பார்த்தும் சரியாகாதவர்கள், விருதுநகர் மாவட்டம், திருச்சுழி பூமிநாதர் கோவிலில் உள்ள மூச்சுப்பிடிப்பு அம்மன் சன்னிதியில், நிவாரணம் வேண்டி வழிபடுகின்றனர்.இரண்யாட்சன் என்னும் அசுரன், பூமாதேவியை கடலுக்குள் ஒளித்து வைத்தபோது, பெருமாள் அவனை அழித்து, அவளை மீட்டார். இறந்தவன் அசுரனாயினும், அவனது அழிவுக்கு தானும் ஒரு காரணம் என்பதால் வருந்திய பூமாதேவி, சிவனை வழிபட்டு, விமோசனம் பெற்றாள். பூமாதேவிக்கு அருள் செய்த சிவன், 'பூமிநாத சுவாமி' என்னும் பெயரில், இங்கு அருள் செய்கிறார். பிற்காலத்தில், 'திருமேனி நாதர்' என்ற பெயர் ஏற்பட்டது.ஒரு சமயம், உலகம் அழிந்த காலத்தில், இத்தலத்தை வெள்ளம் சூழ்ந்தது. மன்னன் சந்திரசேகர பாண்டியன், மக்களை காக்கும்படி, பூமிநாதரை வேண்டினான். யோகி வடிவில் சிவன் வந்து, ஓரிடத்தில் சூலத்தால் குத்தினார். அங்கு பள்ளம் உண்டாகி, பிரளய நீர், அதற்குள் சுழித்து சென்றது. இதனால், இவ்வூர், 'திருச்சுழி' ஆனது.சாபத்தால் கல்லாக மாறிய, கவுதம முனிவரின் மனைவி அகலிகை, ராமனின் பாத துாசு பட்டு, சுயவடிவம் அடைந்தாள். இந்த தம்பதிக்கு, சிவ தரிசனம் வேண்டுமென்ற ஆசை இருந்தது. இதற்காக இங்கு தவமிருந்தனர். சுவாமி, அவர்களுக்கு மணக் கோலத்தில் காட்சி தந்தார். பங்குனியில் நடக்கும் திருக்கல்யாணம், இவர்கள் முன்னிலையில் நடக்கும். நடராஜர் சன்னிதி எதிரே கவுதமர், அகலிகைக்கு சிலை உள்ளது.இங்கு, மறைந்த முன்னோர் மோட்சம் பெற, அர்ச்சகரிடம் நெய் கொடுத்து, சிவனுக்கு பின்புறமுள்ள திருவாச்சியில், தீபம் ஏற்றுகின்றனர். இதை, 'மோட்ச தீபம்' என்பர். முன்னோருக்கு திதி, தர்ப்பணம் கொடுக்க தவறியோர், இந்த வழிபாட்டைச் செய்கின்றனர். தை, ஆடி அமாவாசைகளில் இதைச் செய்வது, முன்னோரின் ஆசியைப் பெற்றுத்தரும்.நிலப் பிரச்னை, வாஸ்து குறைபாடு உள்ளோர், தங்கள் நிலத்திலிருந்து சிறிது மண் எடுத்து வருகின்றனர். அத்துடன், கோவில் வளாகத்திலுள்ள மண்ணையும் சேர்த்து, பூமிநாதர் சன்னிதியில் வைத்து பூஜிக்கின்றனர். அதை, பிரச்னை உள்ள இடத்தில் இட்டால், விரைவில் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.இங்குள்ள, துணைமாலை நாயகி சன்னிதியில், திருமணத்தடை நிவர்த்திக்கு, மஞ்சள் கயிறு வைத்து வேண்டிக் கொள்கின்றனர். இவள், சகாய முத்திரை காட்டி, பக்தர்களுக்கு சகாயம் செய்வதால், 'சகாயவல்லி' என்றும் பெயருண்டு.அம்பாளுக்கு கீழுள்ள பீடம் அல்லது எதிரில் தான், ஸ்ரீசக்ரம் இருக்கும். ஆனால், அம்மன் சன்னிதி எதிரேயுள்ள அர்த்த மண்டபத்தின் மேல் சுவரில், ஸ்ரீசக்ரம் உள்ளது. இதை, 'ஆகாய ஸ்ரீசக்ரம்' என்கின்றனர்.கோவிலில் இருந்து சற்று துாரத்தில், இந்த ஊரின் பெயரில், 'சுழியல் சொக்கி' கோவில் உள்ளது. துர்க்கையின் அம்சமான இவளது மூக்கும், சுழித்து இருக்கிறது. வடக்கு நோக்கி இருக்க வேண்டிய துர்க்கை, இங்கு, கிழக்கு நோக்கி இருப்பதை, சுந்தரர், தன் பதிகத்தில் பாடியுள்ளார்.மூச்சுப்பிடிப்பு ஏற்பட்டு சிரமப்படுவோர், அம்பாள் சன்னிதி கொடி மரம் அருகிலுள்ள துாணில், மூச்சுப்பிடிப்பு அம்மனுக்கு, நல்லெண்ணெயில் மஞ்சள் கலந்து தடவி வணங்குகின்றனர். வாயுத்தொல்லை, மூட்டு வலியால் அவதிப்படுவோரும், இதே வழிபாட்டைச் செய்கின்றனர்.உலகம், தனக்குள் அடக்கம் என்பதை உணர்த்தும், 'அண்டபகிரண்ட விநாயகர்' இங்கு அருள் புரிகிறார். கோவிலைச் சுற்றிலும் எட்டு திசைகளில், அஷ்ட லிங்கங்கள் உள்ளன. ரமண மகரிஷி, இவ்வூரில் அவதரித்தவர். இவர் பிறந்த, 'சுந்தர மந்திரம்' இல்லம், கோவில் அருகில் உள்ளது.மதுரையில் இருந்து, 50 கி.மீ., துாரத்தில் அருப்புக்கோட்டை. இங்கிருந்து, 13 கி.மீ., சென்றால், திருச்சுழியை அடையலாம்.தி.செல்லப்பா