உரையாடல் கலையில் இலக்கணம்!
ஒரு பேச்சாளர், மேடையில் பேசிய பின், வீட்டிற்கு வந்து, தம் மனைவியிடம், 'இன்றைக்கு நான் நேரம் போனதே தெரியாமல் பேசினேன்...' என்று பெருமையடித்துக் கொண்டார்.கெட்டிக்கார மனைவியோ, 'உங்களுக்கு நேரம் போனது தெரியாமல் போயிருக்கும். பாவம்... கூட்டம் என்ன பாடு பட்டுச்சோ, தெரியலை...' என்றார்.பலரது உரையாடல்கள் கூட, இப்படி தான் அமைந்து விடுகின்றன. ஒரு பக்க சுவாரசியமாய்!உரையாடல் எனும் அற்புதக் கலையின் அருமை தெரியாதவர்கள், இதை தவறாக பயன்படுத்துபவர்கள் என, இவ்விஷயத்தில், இரு ரகத்தினர் உண்டு.உரையாடல் என்பது, மேடைப் பேச்சோ, உபன்யாசமோ, உபதேசமோ அல்ல என்பதை, முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஆம்... இதில், பகிர்வு தேவை. 50 - 50 என இல்லாவிட்டாலும், 75 - 25 வரை கூட போகலாம்.உதாரணமாக, ஒருவர், மற்றவருடன், 30 நிமிடம் உரையாடல் நடத்தினால், 15 - 15 நிமிடங்களை, இருவரும் பேச எடுத்துக் கொண்டால், அது, நல்ல உரையாடல் அல்லது ஒருவர், 23 நிமிடங்களும், மற்றவர், ஏழு நிமிடங்களும் பேசியிருக்கலாம் தவறில்லை. வயது மிகுந்தவர்கள், அறிவாளிகள் மற்றும் துறை வல்லமை உள்ளவர்கள் ஆகியோர், சற்று கூடுதலாகப் பேசினால், ஏழு நிமிடக்காரர்களுக்கு, இதில் நன்மை உள்ளது.உரையாடலில், எதிராளியின் மனநிலை என்ன என்பதை தெரிந்து கொள்வது முக்கியம். அவசரத்தில் இருப்பவர்கள், உடல் அவதியுடன் இருப்பவர்கள், பெரும் பிரச்னையை சந்தித்துக் கொண்டிருப்பவர்கள், 'மூட் - அவுட்' ஆனவர்கள் மற்றும் பேசுபவரோடு நல்லுறவு இல்லாதவர்கள் ஆகியோரிடம் போய், 'இந்தா பிடி... நான் சொல்வதைக் கேட்டுக்கொண்டே இரு...' என ஆரம்பித்து, கதாகாலட்சேபம் நடத்தினால், பாவம், எதிராளிகள்!'அறுத்துத் தள்ளிட்டாம்பா... பேசியே கொல்றாம்பா... இந்தாளை யார் கேட்டாங்க... இவன் கதையெல்லாம் நான் கேட்டுத் தொலைக்கணும்ன்னு எனக்கென்ன தலையெழுத்தா... துருவித் துருவி கேள்வி கேட்டு, என்னமா குடையுறான் தெரியுமா...' என்பன போன்ற விமர்சனங்களையெல்லாம், நாம் வாங்காமல் இருக்க வேண்டும் என்றால், உரையாடல் என்பது கொடுக்கல், வாங்கலாக இருக்க வேண்டுமே தவிர, ஆதிக்கப் போக்காக அமைந்துவிடக் கூடாது.ஒரு உரையாடலில், நாம் பேசும் விஷயம் பற்றி, எதிராளி ஒரு ஆர்வக் கேள்வி கூட கேட்காவிடில், அவருக்கு நாம் பேசும் விஷயத்தில் சற்றும் ஆர்வமில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.எதிராளி, நம்முடனான உரையாடலில் ஆர்வமில்லை என்பதை மேலும் சில வழிவகைகள் மூலமும் மற்றும் உடல்மொழி மூலமும் தெரியப்படுத்த முனைகின்றனர். இதை உள்வாங்கும் மனநிலை நமக்கு வேண்டும்.ஒரு தொழிற்சாலையின் கழிவுப் பொருள், மற்றொரு தொழிற்சாலைக்கு மூலப் பொருளாகி விடுகிறது. உதாரணமாக, அரிசி ஆலையின் தவிடு, மறு தொழிற்சாலையில் தவிட்டு எண்ணெய்க்கான மூலப்பொருளாகி விடுகிறது.இதேபோல், நம், 'தள்ளல்'கள், மற்றவர்களின் தேவைகளாக இருக்குமானால், அதில் தவறில்லை; ஆனால், அவை வெறுக்க தக்கனவாக அமைந்து விட்டால், பாவம் அவர்கள் என்பதோடு பின்னர், வேறு சில கெடுதல்களும் தொடரும்!எதிராளி சுத்தமாக மவுனமாகி விடுவது, பேச்சுத் தலைப்பை மாற்றுவது, வானத்தை மற்றும் கடிகாரத்தை பார்ப்பது, 'இதோ வந்து விடுகிறேன்...' என்று தப்பிப்பது மற்றும் ஏதும் சாப்பிடுகிறீர்களா என்று கேட்பது என்று, இன்னும் பல வகைகளாலும், மற்றவர்கள், தங்கள் சுவாரசிய குறைவை உணர்த்த முற்படும் போது, வாய்க்கு பிளாஸ்திரி போட்டு கொள்ள வேண்டியது தான்.இந்த விழிப்புணர்வுடன் பேசாவிடில், நாம் சொல்ல வந்த அவசியமான விஷயத்தை கேட்கக் கூட, வருங்காலத்தில் ஆள் இருக்காது!லேனா தமிழ்வாணன்