உள்ளூர் செய்திகள்

பசுமை நிறைந்த நினைவுகளே! (24)

ஒவ்வொரு வருடமும், குற்றால சீசன் டூருக்காக, கூப்பன் போடும் வாசகர் கூட்டம் அதிகரித்து கொண்டே போகிறது. கூப்பன்கள் கொண்ட தபால் மூட்டைகள், மூன்று சக்கர சைக்கிளில் வந்த காலம் போய், இப்போதெல்லாம், சரக்கு வாகனங்களில் வந்து கொண்டிருக்கிறது.லட்சக்கணக்கில் வரும் கூப்பன்களில் இருந்து, பதினைந்து பேரைத்தான் தேர்வு செய்ய முடியும். இது, வாசகர்களுக்கும் தெரியும். ஆனாலும், 'நாங்க ரொம்ப வருஷமா கூப்பன் போடுகிறோம்; இந்த முறையாவது தேர்வு செய்து அழைத்துப் போங்களேன்...' என்று, தங்களது ஆதங்கத்தை, கூப்பனுடன் இணைத்து சிறு குறிப்பு எழுதி அனுப்புவர்.ஆனால், அந்த குறிப்பையே கோபத்துடன் எழுதி அனுப்பியவர் தான், விழுப்புரம் வாசகி யாஸ்மின். அவரது விலாசத்தை புரிந்து கொள்ளக் கூட முடியாத அளவிற்கு கிறுக்கலுடன் எழுதியிருந்தார். ஆனால், அவர் அந்த வருட டூருக்கு தேர்வாகியிருந்தார்.அவரது வீட்டு, லேண்ட் லைனோ, மொபைல் எண்ணோ குறிபிட்டப் படாததால், அவரது கடிதத்துடன், விழுப்புரம் சென்றேன். இம்மாதிரி நேரத்தில் பெரிதும் உதவுபவர்கள் போஸ்ட் ஆபிஸ் நண்பர்கள் தான். எப்படி டாக்டர் எழுதுவது மருந்துக் கடைக்காரருக்கு மட்டும் புரிகிறதோ அது போல, தபால் ஊழியர்கள், எப்பேர்பட்ட கையெழுத்தையும் படித்து விடும் திறமைசாலிகள். நேராக அவர்களிடம் போய், யாஸ்மின் எழுதிய கடிதத்தை கொடுத்து, 'இந்த விலாசம் எங்கு இருக்கிறது?' என்று கேட்டேன்.'உட்காருங்க சொல்றேன்...' என்று சொன்ன போஸ்ட் மாஸ்டர், டீ வாங்கிக் கொடுத்தார்; டூர் பற்றி நிறைய விவரம் கேட்டார். பிறகு சைக்கிளில் கொண்டு போய் விட, ஒரு ஆளை ஏற்பாடு செய்தார். 'விலாசம் சொன்னால் போதாதா... ஏன் இவ்வளவு சிரமம்...' என்றபோது, 'நான் அந்துமணியோட வாசகர். இது கூட செய்யாட்டி எப்பிடி...' என்றவர், 'அந்துமணியை எனக்கு பல காரணங்களால் பிடிக்கும். அதுல ஒரு காரணம், 'பத்து வருடங்கள் சுற்றிக்கொண்டு போய்ச் சேர்ந்த கடிதம் என்றெல்லாம் செய்தி அடிக்கடி வருகிறதே... இதெல்லாம், தபால் துறையின் அக்கறை இல்லாத தன்மைதானே?' என, வாசகர் ஒருவரின் கேள்விக்கு, 'நீங்கள் ஏன் அதை அப்படி பார்க்கிறீர்கள்... பத்து வருடங்களானாலும், அது சாதாரண தபால்தானே என, தூக்கிப் போடாமல், பத்திரமாக பாதுகாத்து, கொண்டு போய் கொடுத்து கடமையாற்றுபவர்கள் என்ற கண்ணோட்டத்தில் பாருங்கள். பாராட்ட தோன்றும்...' என்று, அந்துமணி வாரமலர் இதழில் தந்த பதில்தான் சார் எங்களை எல்லாம் உற்சாகப்படுத்துகிறது...' என்றார்.யாஸ்மின் வீட்டிற்கு சென்று, கதவை தட்டியதும், திறந்தவர் யாஸ்மின்தான். விவரம் சொன்னதும், அவரால் நம்பவே முடியவில்லை. என்னை வீட்டிற்குள் கூப்பிட்டு உட்கார வைக்க கூட தோன்றாத உற்சாகத்துடன், வீட்டிற்குள் ஓடிப்போய் அம்மாவை கட்டிப்பிடித்து, விவரம் சொல்லி குதித்தார். அவரது அம்மா, 'முதல்ல வாசல்ல நிற்கிறவரை உள்ளே கூப்பிடு...' என்றதும், பழையபடி ஓடிவந்து, வீட்டிற்குள் அழைத்துச் சென்றார்.அம்மா, அப்பா, அக்கா, அண்ணன், தம்பி என்ற அந்த குடும்பத்தில், யாஸ்மின்தான் பட்டப்படிப்பு முடித்தவர். ரொம்ப வருடமா குற்றால டூர் பற்றி படித்தவர், கூப்பன் போடுவதில் நாட்டமில்லாமலே இருந்தாராம். அந்த வருடம்தான், என்ன தான் நடக்கிறது பார்ப்போமே என்று போட்டாராம்.'யார் தேர்வா னாலும், நான் தேர் வாகமாட்டேன் என்றே நினைத் தேன்...' என்றவர், டூர் பற்றிய விவரங்கள் முழுவதும், குடும் பத்துடன் உட்கார்ந்து கேட்டார். முதலில் அப்பா அல்லது அண்ணனுடன் வருவதாக இருந்தவர், டூரின் பாதுகாப்பு மற்றும் சிறப்பு பற்றி தெரிந்து கொண்டதும், தன் இளைய சகோதரி சாண்டியுடன் வந்திருந்தார்.அந்த வருட டூரின் ஆரம்பத்திலேயே பஸ்சில், 'இறைவனி டம் கையேந்துங்கள்...' என்று பாட்டுப்பாடி, டூரை உற்சாகமாக ஆரம்பித்து வைத்தவரும் அவரே! டூரில் இவருக்கு இணை பிரியாத தோழிகளாக தெய்வானையும், கிறிஸ்தவரான ரோசாவும் அமைந்து விட்டனர். 'நாங்கள் மத இணக்க தோழிகள் மட்டுமல்ல; மனதால் இணக்கமான தோழிகள்...' என்று, அடிக்கடி கூறுவார் யாஸ்மின்.டூரில் கலந்து கொண்டு திரும்பும் அனைத்து வாசகர்களும், தவறாது சொல்லும் வார்த்தை, 'இப்படி ஒரு சந்தோஷத்தை, வாழ்க்கையில் அனுபவித்ததே இல்லை. வருடாவருடம் வரணும்ன்னு தோணுது; ஆனா, வர மாட்டோம். ஏன் தெரியுமா... இந்த சந்தோஷமும், மனநிறைவும் மற்ற வாசகர்களுக்கும் கிடைக்கணும் என்பதற்காக...' என்பர். இந்த வார்த்தையை காப்பாற்றுவதற்காக, ஒரு முறை கலந்து கொண்ட வாசக, வாசகியர் மறுமுறை கூப்பன் அனுப்ப மாட்டார்கள். இது, வாரமலர் வாசகர்கள், தங்களுக்கு தாங்களே ஏற்படுத்திக்கொண்ட பெருமைமிகு லட்சுமண கோடு.இந்நிலையில், ஒரே ஒரு வாசகி மட்டும் இரண்டாவது முறையும் கூப்பன் அனுப்பி, தேர்வு செய்யப்பட்டிருந்தார்.யாஸ்மின் வந்து சென்ற சில வருடங்களுக்கு பின், விழுப்புரத்தில் இருந்து, வஹிதா என்பவர், அனுப்பிய கூப்பன் தேர்வானது. வழக்கம் போல வாசகியைத் தேடி, அவர் வீட்டிற்கு போயிருந்தேன். 'வாங்க சார்... எப்படி இருக்கிறீங்க,' என்ற குரல், வீட்டின் உள்ளே இருந்து கேட்டது.'எங்கேயோ கேட்ட குரலாக இருக்கிறதே... யாராக இருக்கும்...' என்று பார்த்தால், அதே யாஸ்மின்!குற்றாலமும்,திருமலைக்கோவிலும்...செங்கோட்டை வட்டத்தில், பண்பொழி எனும் ஊரின் மேற்கே, சுமார் 3 கி.மீ., தொலைவில், மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில், இயற்கை எழில் மிகுந்த குன்றின் மீது அமைந்துள்ளது பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோவில். செங்கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து, 7 கி.மீ., தூரப்பயணம்.திரு என்றால் அழகு என்றும், திருமகள் வாசம் செய்யுமிடம் என்றும் பொருள். எழில் மிக்க மலையை கொண்டுள்ளதால், இத்தலம், திருமலை என்று அழைக்கப்படுகிறது.மேற்கு தொடர்ச்சி மலை, காவி மலை ஆகிய மலைகள், இம்மலையுடன் இணைவதால், இதனை, திரிகூட மலை என்றும் கூறுவர்.இளமைக்கோலத்தில், குமரன் குடிகொண்டிருக் கும் இத்தலம், 400 அடி உயர முள்ள குன்றின் மீது அமைந்துள்ளது. 544 படிக்கட்டுகள் வழியாக சென்று, சன்னிதியை அடையலாம். படிகளில் ஏறிச்செல்லும் போது, இளைப்பாற மண்டபம் உண்டு. மேலும், கார் போன்ற வாகனங்களில், மலைக்கு சென்று வர, மலைப்பாதையும் தற்போது போடப்பட்டுள்ளது.இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் இக்கோவிலின், தல விருட்சம் புளியமரமாகும். இரண்டாயிரம் ஆண்டு பழமையானதாக கருதப்படும் இப்புளியமரத்தின் கீழ், ஆதி உத்தண்ட வேலாயுதரின் சன்னிதி உள்ளது.இங்குள்ள பூஞ்சுனை, ஆண்டு முழுவதும் வற்றாது காணப்படும். இதில், நாள் தவறாமல் குவளை மலர்கள் பூப்பதால், பூஞ்சுனை என்றழைக்கப்படுகிறது. இச்சுனையின் புனித நீரால்தான், நாள்தோறும் திருமலை குமரனுக்கு அபிஷேகம் நடத்தப்படுகிறது.இந்த குன்றின் மீதிருந்து பார்க்கும் போது, தென்படும் இயற்கை காட்சிகளும், அப்போது ஏற்படும் பரவசமும், அனுபவித்தே உணர வேண்டியது.— அருவி கொட்டும்.-எல்.முருகராஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !