பசுமை நிறைந்த நினைவுகளே.... (32)
நாம் பாதுகாப்புடன் வாழ, நாட்டின் எல்லையில், உடலை ஊடுருவும் கடும் குளிரில் ஊன், உறக்கம் துறந்து, உறவுகளை பிரிந்து, தன் சுக துக்கங்களை மறந்து, தேசம் காப்பவர்கள் நம் ராணுவ வீரர்கள்.கடந்த, 99-ம் ஆண்டு, 'லைன் ஆப் கன்ட்ரோல்' எல்லைதாண்டி வந்து நம்மையும், ராணுவத்தையும் சீண்டிக்கொண்டே இருந்தனர் பாக்., படையினர். வாயால் பேசி பயன் இல்லை என்பதை உணர்ந்த பின், அடிக்கு அடியாக, இந்தியா கொடுத்த அதிரடி தான் கார்கில் போர்!ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கார்கில் நகரை மையப்படுத்தி நடைபெற்றதால், கார்கில் போர் என்றழைக்கப்பட்டது. சில நாட்கள் நடைபெற்ற அந்த போரில், நம் பலம் என்ன என்பதை உணர்த்தி, பாக்., படையினரை, ஓட ஓட விரட்டிய வீரமான நாட்கள் அவை.'எங்களுக்குள் சண்டை இட்டுக் கொள்வோம்; அது சகோதர சண்டை. ஆனால், எங்களோடு யாரும் சண்டையிட வந்தால், விட மாட்டோம்; ஒற்றுமையாக இருந்து அடித்து துவம்சம் பண்ணுவோம்' என, உலகிற்கு உணர்த்திய தீரமிக்க நாட்கள் அது.நம் தாய் திருநாட்டின் மண், மானம், வீரம் காக்க, கார்கில் போரில், தங்கள் இன்னுயிரை தந்தவர்கள், 527 பேர்; கண், கை, கால்கள் போன்ற உடல் உறுப்புகளை இழந்து ஊனமுற்றவர்கள், 1,363 பேர்.நேதாஜி சுபாஷ் சந்திரபோசுக்கு பின், நம் நாட்டு ராணுவத்தின் பலத்தை, உலகம் முழுவதும் உணரச் செய்தது, இந்த கார்கில் போர்.இயற்கை பேரிடர் வரும்போது, தோழமையுடன் தோள் கொடுப்பது மட்டுமல்ல, எதிரிகளிடமிருந்து நாட்டைக் காக்க, குண்டு மழைகளுக்கு நடுவே புகுந்து, எதிரியை ஓட ஓட விரட்டி, துவம்சம் செய்யவும் தயங்காத தைரியம் கொண்டது நமது படை என்பதை, இன்றைய தலைமுறைக்கு உணர்த்தியதும், கார்கில் போர்தான்.இத்தகைய தியாகம் செய்திட்ட ராணுவ வீரர்களுக்கு, நாம் எப்போதும் அவர்களுடனே இருக்கிறோம் என்பதை தெரிவிக்கும் வகையில், வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலியும், இருப்பவர்களுக்கு மரியாதை, உற்சாகம், ஊக்கத்தை தரும் வகையில், தினமலர் இயக்குனர் ஆதிமூலம் அவர்களின் திட்டமிடலில், தமிழகம் முழுவதும், தினமலர் சார்பில், கார்கில் தீபாஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.கார்கில் போரில் ஒரு கண்ணையும், கேட்கும் திறனையும் இழந்த, ராணுவ வீரர் கார்த்திகேயன் நடராஜன் முன்னிலையில், மதுரை காந்தி மியூசியத்தில், தீபாஞ்சலி நிகழ்ச்சி நடந்த போது, முதல் முறையாக, அவ்விடம் மக்கள் கூட்டத்தால், நிரம்பி வழிந்தது.மதுரை தினமலர் இயக்குனர் எல்.ராமசுப்பு அவர்கள் தலைமையில், ராணுவ வீரர் கார்த்திகேயன் நடராஜன், தீபமேற்றிய அந்த நிகழ்ச்சியை பார்த்தவர்கள் மனதில், நம் ராணுவம் பற்றிய மதிப்பு, பல மடங்கு கூடியது.நிகழ்ச்சியில் பார்வையாளர்களில் ஒருவராக கலந்துகொண்ட அந்துமணி, கனத்த உள்ளத்துடன் காணப்பட்டார். பின்னர், இந்த போரின் வீர விளைவுகள் குறித்து, தன், பா.கே.ப., பகுதியில், நிறைய எழுதினார். காரணம், இலங்கையில், போர் மேகம் சூழ்ந்த நிலையில், ராணுவத்துடன் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் என்பதால்.இந்த நிகழ்ச்சி முடிந்த மறுநாள், வாரமலர்- குற்றால டூர், மதுரையில் இருந்து துவங்கியது. பல்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த டூர் வாசகர்கள், முதல் நாள், மதுரையில் நடந்த இந்த நிகழ்ச்சி குறித்து அறிந்திருக்கவில்லை.ஆனாலும், தினமலர்- - வாரமலர் இதழ் வாசகர்கள், ஒத்த கருத்துடையவர்கள் என்பதை எடுத்துக்காட்டும் வகையில், டூரின் துவக்க நாளன்று, வாசகர்கள் அறிமுகத்தின் போது, 'சார் ஒரு நிமிஷம்...' என்றபடி, வாசகி ராதாமணி என்பவர் எழுந்து, 'இன்று கார்கில் போர் வெற்றியால், நாமும், நாடும் தலை நிமிர்ந்து இருக்கிறோம்; ஆனால், இதற்காக, நம் சகோதரர்கள் பலரை இழந்துள்ளோம். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அனைவரும் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்துவோம்...' என்றார்.அதன்படி, மவுன அஞ்சலி செலுத்தப்பட்டு, அடுத்த வழக்கமான நிகழ்வுகள் நடைபெற்று முடியும் போது, திருப்பூரில் இருந்து வந்திருந்த வாசகி கே.மஞ்சுளா, எழுந்து, 'வெறுமனே அஞ்சலி செலுத்தினால் மட்டும் போதாது; நமக்காக அவர்கள் இழந்ததற்கு ஈடாக, நாம் என்ன கொடுத்தாலும் சமமாகாது என்றாலும், அவர்களது குடும்பங்களுக்கு நம் ஆறுதல் என்பது, பொருளாதார ரீதியிலும் இருக்க வேண்டும். மற்றவர்கள் என்ன செய்வர் என்று எண்ணாமல், நான் என்ன செய்யப் போகிறேன் என்பதை முடிவு செய்ய வேண்டிய தருணம் இது...' என்று சொல்லி, கையோடு கொண்டு வந்திருந்த பெரிய உண்டியல் ஒன்றை அரங்கில் வைத்து, 'தினமலர் வாசகர்கள் நிவாரண நிதியின் என் முதல் பங்கு...' என்று சொல்லி, ஒரு தொகையை போட்டார். அவரைத் தொடர்ந்து, மற்ற வாசகர்களும் நிவாரண நிதி போட, டூர் முடிவதற்குள், உண்டியலை நிரப்பி கொடுத்து விட்டார்.கணிசமாக திரண்ட அந்த தொகை, பின், மாவட்ட ஆட்சித் தலைவரிடம் நிவாரண நிதியாக வழங்கப்பட்டது. அதன்பின், 'கார்கில் நிவாரண நிதி' என்று, பலரும் பல மடங்கு திரட்டினாலும், அந்த கணத்தில், இந்த எண்ணத்தை, முதன் முதலில், மக்கள் மனதில் விளைவித்தது, வாரமலர் இதழ் வாசகர்கள் தான் என்பதை, நினைக்கும் போது, பெருமிதத்தால் நெஞ்சு பூரிக்கிறது.இப்படிப்பட்ட பெருமையான நிகழ்வுகள் மட்டுமின்றி, சில புதுமையான நிகழ்ச்சிகளும் அந்த வருட டூரில் நடந்தன. அது பற்றி, அடுத்த வாரம் பார்ப்போம்.— அருவி கொட்டும்.குற்றாலமும், தென்மலையும்! குற்றாலம் பக்கம் உள்ள செங்கோட்டை - கொல்லம் ரயில் மார்க்கத்தில், கேரளா மாநில எல்லைக்குள் இருக்கிறது தென்மலை, 13 கண் ரயில் பாலம். 100 ஆண்டுகளுக்கும் மேலான பழமை மிக்கது. குதூகலமான பயண அனுபவத்தை தரக்கூடிய இந்த தென்மலை, 13 கண் பாலத்தின் மீது, ரயில் ஊர்ந்து செல்வதை பார்க்கும் போதே சந்தோஷம் ஏற்படுகிறது. பாலத்தின் மீது, ரயிலில் பயணம் செய்தால் அந்த சந்தோஷத்தை, வார்த்தையில் வர்ணிக்க முடியாது. இப்பாலம், 102.72 மீட்டர் நீளமும், 5.18 மீட்டர் அகலமும், அபாயமற்ற வளைவுகளையும் கொண்டது. 100 ஆண்டுகளைக் கடந்தும், பாலத்தின் உறுதித் தன்மை சற்றும் குறையவில்லை. இப்பாலத்தில், ரயில் செல்லும் போது, ரயிலில் இருந்து கீழே பார்த்தால், அடிவயிறு சற்று கலங்கும்.பிராட்கேஜ் பாதை பணிக்காக, இப்பாலத்தை இடிக்க, ரயில்வே துறை முடிவு செய்த போது, 'பழமையான இந்த பாலத்தை இடிக்க கூடாது...' என்று, மக்கள் கொதித்தெழுந்து, போராட்டங்கள் நடத்தினர். அதன் விளைவு, பாலம் உடைக்கப்படாமல் மீட்கப்பட்டு விட்டது.தற்போது, பாலத்தின் பழமையையும், பராம்பரியத் தன்மையையும் மாற்றாமல், பிராட்கேஜ் பணிகள் நடந்து வருகின்றன.பணிகள் முடிந்து, பாலத்தின் வழியாக, மீண்டும் அகலபாதையில் ரயில் போகும் போது, பழைய அந்த அனுபவத்தை, மீண்டும் பெறலாம். -எல்.முருகராஜ்