ஹாட்ரிக் ட்ரிபிள்ஸ்!
பிரிட்டனின் கென்ட் மாகாணத்தில் உள்ள சிறிய நகரம், சமீபத்தில் விழாக் கோலம் பூண்டிருந்தது. ரொனால்ட், எரிக், டேவிட் ஆகிய மூன்று பேரின், 80வது பிறந்த நாள் கொண்டாட்டம் நடந்தது தான், இதற்கு காரணம். பிறந்த நாள் கொண்டாடுவதற்கு, எதற்கு இத்தனை ஆர்ப்பாட்டம் என்று தானே கேட்கிறீர்கள்?இவர்கள் மூன்று பேரும் சகோதரர்கள். கடந்த, 1931ல், ஒரே நாளில், மூன்று நிமிட இடைவெளியில் பிறந்தவர்கள். தனக்கு மூன்று ஆண் குழந்தைகள் பிறந்ததை கண்டு, இவர்களது தாயாருக்கு பெரும் அதிர்ச்சி. ஏனென்றால், இவருக்கு ஏற்கனவே, ஒரு ஆண் குழந்தை இருந்ததால், இந்த முறை, பெண் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கையுடன் இருந்தாராம். ஆனால், மூன்று குழந்தைகள் ஒரே நேரத்தில் பிறந்தும், அதில் ஒன்று கூட, பெண்ணாக இல்லாததைக் கண்டு, அவர் அதிர்ச்சி அடைந்தார்.டாக்டர்கள் கூட, 'இந்த குழந்தைகளின் ஆயுசுக்கு நாங்கள் உத்தரவாதம் கொடுக்க முடியாது...' என, கை விரித்தனர். ஆனாலும், அனைத்து பிரச்னைகளையும் முறியடித்து, இதோ... தங்களது, 80வது பிறந்த நாளை, இந்த அதிசய சகோதரர்கள், கோலாகலமாக கொண்டாடி விட்டனர். பிரிட்டனிலேயே, அதிக வயதான, 'ட்ரிப்லெட்ஸ்' என்ற பெருமையும், இவர்களுக்கு கிடைத்துள்ளது.பிறந்த நாள் கொண்டாட்டத்தில், 'பிசி'யாக இருந்த ரொனால்டிடம் கேட்ட போது,'நாங்கள் ஒரே பள்ளியில், ஒரே வகுப்பில் படித்தோம். எங்களை அடையாளம் காண்பதில், ஆசிரியர்களுக்கு சிரமம் இருந்தது. இதனால், சீருடைகளில், எங்களின் பெயர்களின் முதல் எழுத்தை, எழுதி வைத்துக் கொண்டோம்...' என, மலரும் நினைவுகளில் மூழ்கினார்.— ஜோல்னா பையன்.