சீனாவை சுற்றிப் பார்க்க போனேன்... (4)
சீனாவில் எரிச்சல் தரக்கூடிய இரண்டு விஷயங்கள்... ஒன்று, எல்லா ஆண்களுமே, இடம், பொருள், ஏவல் பார்க்காமல், சிகரெட் பிடித்தபடி இருக்கின்றனர்.இரண்டாவது விஷயம், தெரிந்தாலும் ஆங்கிலம் பேசுவதில்லை என்பதில், சீனர்கள் காட்டும் பிடிவாதம். குழுவை விட்டு தெரியாத்தனமாக பிரிந்து விட்டால், திரும்ப வந்து சேர்வது மிக கடினம். ஏதாவது கேட்டால், 'சூசுமா மோஷூ ஹைகூம் நேமிம்...' என்று மூச்சு விடாமல் திட்டுவது போல, அவர்கள் பேசும் மொழியில் இருந்து ஒரு வார்த்தை கூட புரியாது. இதன் காரணமாக, ஆளுக்கு ஒரு அடையாள தொப்பியை அணிந்து, ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொள்ளாத குறையாக, எல்லா ஊரையும் வழிகாட்டியுடன் சுற்றிப் பார்த்தோம்; அது தான் நல்லதும் கூட. ஆனாலும், சுதந்திரமாக ஏதாவது ஒரு இடத்திற்கு போய் வர முடியாதா என்று, சிறு ஏக்கம் ஏற்படத்தான் செய்தது.இந்த ஏக்கத்தை தீர்க்கும் வகையில், செங்காவ் நட்சத்திர ஓட்டலில், ஒருவரை சந்தித்தோம். ராமநாதபுரம் மாவட்டம், தேவகோட்டையை சேர்ந்த, நாகூர் கனி தான் அவர். பலவித கஷ்டங்களுக்கு பின், தற்போது, அந்த நட்சத்திர ஓட்டலில், சமையல் கலைஞராக இருக்கிறார்.'என்னப்பா... நம் ஓட்டலில் சாம்பார் வாடை அடிக்குது...' என்று, தனக்குத் தானே தமிழில் பேசியபடி வந்த அவரை, ஆகா... நம்மூர் தமிழ் மொழி என்றபடி, அவரை சூழ்ந்து கொண்டோம்.அருமையான மனிதர். இருந்த அத்தனை வேலைகளையும் போட்டு விட்டு, இரவு, 10:00 மணிக்கு மேல், செங்காவ் நகரை சுற்றிக் காட்டினார். அருமையாக சீன மொழி பேசுகிறார். சென்ற இடங்களில் எல்லாம் நிறைய சலுகைகள் வேறு. மறுநாள் காலை, சைவம் சாப்பிடுபவர்களுக்கு, மசால் தோசை. அசைவம் சாப்பிடுபவர்களுக்கு முட்டை தோசை, புதினா சட்னி, கார சட்னி என்றெல்லாம் கொடுத்து, அசத்தினார். மாசற்ற அவரது அன்பில், அனைவருமே சொக்கிப் போனது நிஜம்.அன்று காலை உணவை முடித்த கையோடு, 'ஷாவலின் டெம்பிள்!' மதியம், 'புல்லட்' ரயிலை பிடித்து, சீனாவின் தலைநகரமான பீஜிங் சென்று, இரவு தங்க ஏற்பாடு செய்திருந்தனர். மறுநாள், காலையில், 'டினாமன்' சதுக்கம் சென்றோம்.ஒரே நேரத்தில், ஐந்து லட்சம் பேர் கூடக்கூடிய, மிகப்பெரிய சதுக்கம். அந்த அளவிற்கு இல்லாவிட்டாலும், அதில் பாதியளவாவது இருப்பர் என்று சொல்லும்படியாக குவிகின்றனர், பயணியர்.நவீன சீனாவை வடிவமைத்த, மாசேதுங் படம் பெரிதாக வைக்கப்பட்டுள்ளது. அந்த இடம் வரை, கால் வலிக்க நடந்தோம். அதன்பின், பஸ் பிடித்து விடலாம் என நினைத்தால், 'இனிமேல் தான், 3 கி.மீ., துாரம் நடந்து, அரண்மனைகளை பார்க்க வேண்டும்...' என்றார், வழிகாட்டி.முடியாது என்று திரும்ப முடியாது. 'முன்னாடி போங்க, நான் பின்னாடி வருகிறேன்...' என்று ஒதுங்கவும் முடியாது. காணாமல் போனால், அந்த கூட்டத்தில் கண்டுபிடிக்கவும் முடியாது. வேறு வழியின்றி, திரும்பவும், 3 கி.மீ., துாரத்தை, நடந்தே கடந்தோம்.மக்களோடு இடிபட்டு, நடப்பது ஒன்று தான் சிரமமான விஷயமே தவிர, உண்மையில், 'பர்பிட்டன் சிட்டி' என்ற அந்த அரண்மனை வளாகம் பார்க்க வேண்டிய இடம்.வெயில் காலத்தில், வெயிலும், பனிக்காலத்தில், பனியும் உச்சபட்சமாக இருக்குமாம். அரண்மனையை சுற்றிலும், 302 அண்டாக்கள் வைத்துள்ளனர். அதில் நீர் ஊற்றி, விறகு வைத்து எரித்து, எப்போதும், தண்ணீர், குளிராமல் பார்த்துக் கொள்கின்றனர் என்பது போன்ற குறிப்புகளை காதில் வாங்கியபடியே, அரண்மனையை ரசிக்கலாம்.சீனா என்றால், நமக்கு முதலில் கவனத்திற்கு வரக்கூடிய விஷயமான, சீனப் பெருஞ்சுவரை பார்க்க, மதியம் கிளம்பினோம்.மங்கோலியர்களின் படையெடுப்பை தடுப்பதற்காக, கட்டப்பட்ட இந்த சீன பெருஞ்சுவர், 7,000 கி.மீ., துாரத்திற்கு, மலையில், வளைந்து நெளிந்து, நீண்டு செல்கிறது. மொத்த சீனப் பெருஞ்சுவரையும் நடந்து, கடந்தவர்கள், யாரும் இருக்கின்றனரா தெரியவில்லை. அதில், 1 கி.மீ., துாரம் படிகளில் ஏறி நடப்பதற்குள்ளாகவே, மூச்சு வாங்கியது.சீனப் பெருஞ்சுவர் பின்னணி தெரியும்படி, படம் எடுத்து, எல்லாரும் பஸ்சிற்கு திரும்பினோம். சந்திரனிலிருந்து, பூமியை வெறும் கண்ணால் பார்த்தால் தெரிவது, இந்த சீனப் பெருஞ்சுவர் மட்டுமே என்று சொல்பவரும் உண்டு; அதெல்லாம் கட்டுக்கதை என்று மறுப்பவரும் உண்டு. ஆனாலும், உலக அதிசயங்களில் ஒன்றான, இதை அவசியம் பார்க்க வேண்டும். காரணம், சீனப் பெருஞ்சுவர் குறித்த அவ்வளவு குறிப்புகள் இருக்கின்றன.இரவில், ஒலிம்பிக் ஸ்டேடியம், மறுநாள், முத்து நகை செய்யும் தொழிற்கூடம், 'சம்மர் பேலஸ்' என்ற படகு குழாம். கடைசியாக, 'ஷாப்பிங் சென்டர்' சென்று, இரவு, விமான பயணங்கள் மேற்கொண்டு, சென்னை வந்து சேர்ந்தேன்.சென்னை மண்ணை மிதித்ததும், இரண்டு பெரிய கும்பிடு போட்டேன். முதல் கும்பிடு, பயணத்தின்போது எவ்வித வில்லங்கமும் வராமல் பார்த்துக் கொண்ட குருநாதருக்கு. இரண்டாவது கும்பிடு, இப்படி ஒரு பொன்னான வாய்ப்பை வழங்கிய, அந்துமணிக்கு!- முற்றும் -சீன பயணத்தில் கவனிக்க வேண்டியது!சிறந்த வெளிநாட்டு பயண அனுபவத்திற்கு சீன பயணம் சரியான தேர்வு. சுற்றுலா துறைக்கு, சமீப காலமாக மிகவும் முக்கியத்துவம் கொடுப்பதாலும், பிரதமர் மோடி, சமீபத்தில் சீனா சென்று, நட்பை வலுப்படுத்தியதாலும், இந்திய பயணிகளை இன்முகத்துடன் வரவேற்கின்றனர்; சினேகத்துடன் அணுகுகின்றனர்.தனியாக செல்வதை விட, குழுவாக, சிறந்த, 'டிராவல்ஸ்' மூலமாக செல்வது நல்லது. காரணம், விசா, சாப்பாடு, தங்கும் ஓட்டல் போன்ற விஷயங்களை, வழிகாட்டி பார்த்துக் கொள்வார்.'பேஸ்புக், வாட்ஸ் ஆப், கூகுள்' என்று, எதுவுமே அங்கு வேலை செய்யாது. ஓட்டலில் வழங்கப்படும் இலவச, 'வை பை' வசதியும் எடுபடாது என்பதை நினைவில் கொள்ளவும். இங்கிருந்தே, 'இண்டர்நேஷனல் ரோமிங்' போட்டுக் கொள்ளுங்கள் அல்லது அங்கே போனதும், 'சீன மேட்ரிக்ஸ் ப்ரீ பெய்டு கார்டு' வாங்கிக் கொள்ளுங்கள்.மூன்று மணி நேரம் பேசலாம்; ஒரு மாதத்திற்கு செல்லுபடியாகும். நம்மூர் பண மதிப்பில், 2,200 ரூபாய். மொபைல் தொடர்பு இருப்பது மிக அவசியம்.நம்மூர் பணம் அங்கு செல்லுபடியாகாது. நீங்கள் செல்லும் டிராவல்சில் கொடுத்தால், கொடுக்கும் பணத்திற்கு ஏற்ப, அன்றைய மதிப்பு சீன பணமாக, 'யுவான்' கொடுப்பர். 'ஷாப்பிங்' சில இடங்களில் மட்டுமே. ஒரே விலை, பல இடங்களில் பேரம் பேசி தான் வாங்க வேண்டும்; பேரம் பேசுவதற்கு கால்குலேட்டர் உதவும்.நிறைவாக, 'ஒவ்வொரு டிராவல்சும், ஒரு விதத்தில் திறமையானவர்களாக இருப்பர். சீன பயணத்திற்கு, சென்னை அண்ணாசாலையில் உள்ள, 'ஸ்ரீ டிராவல்ஸ்' சிறந்தது. அதன் உரிமையாளர், இளந்திரையன் கண்ணன், ஒவ்வொரு சீன பயணத்தின்போதும், உடன் வருவது சிறப்பு. சீனாவில், தலைவாழை இலை போட்டு, வடை, பாயசத்துடன் சைவ சாப்பாடு போடுவது, இவரது தனிச்சிறப்பு. 30 ஆண்டுகளாக இந்த, 'பீல்டில்' இருக்கிறார். 'தினமலர்' இதழில் மட்டுமே விளம்பரம் தருவார். தினமலர் - வாரமலர் வாசகர்களுக்கு, சிறப்பு சலுகை உண்டு. தொடர்புக்கு: 044 - 4351 8473, 92833 70555. கலைச்செல்வி