உள்ளூர் செய்திகள்

தை பிறந்தால் வலி பிறக்கும்!

மழலைச் செல்வம் இல்லாதவர்கள் தை மாதத்தில், திருவாரூர் மாவட்டம், திருச்சேறை சாரநாதப் பெருமாள் கோவிலில் உள்ள குழந்தைப் பெருமாளை வழிபட்டால், பிரசவ வலிக்கு ஆளாவர் என்பது ஐதீகம். இவரை, ஐந்து புதன்கிழமை தரிசித்து, வெள்ளை மலர்களால் அர்ச்சித்தால், சுபயோகம் ஏற்படும் என்பதும் நம்பிக்கை.திரேதா யுகத்தில் விஷ்ணுவின் வழிகாட்டுதல் படி, பூலோகத்தில் மண் எடுத்து, கும்பம் செய்தார், பிரம்மா. அதில், வேதம், சாஸ்திரங்களை ஆவாஹனம் செய்து, அடுத்த யுகத்திற்கான பணிகளை துவங்கினார். பிரம்மா செய்த கும்பம் உள்ள தலம், கும்பகோணம் என்றும், குடம் செய்ய மண் எடுத்த இடம், சார ஷேத்திரம் என்றும் அழைக்கப்பட்டது. சார ஷேத்திரமே தற்போது, திருச்சேறை எனப்படுகிறது.காவிரிக்கும், கங்கைக்கும் தங்களுக்குள் யார் பெரியவர் என்ற போட்டி உண்டானது. கங்கைக்கும் மேலான சிறப்பை பெற விரும்பிய காவிரியிடம், விஷ்ணுவை நோக்கி தவமிருக்கும்படி கூறினார், பிரம்மா.திருச்சேறை தலத்தில், பெருமாளை நினைத்து தவமிருந்தாள், காவிரி. அவளுக்கு குழந்தை வடிவில் சாரநாதப் பெருமாள் காட்சியளித்தார். பின், கருட வாகனத்தில் தாயார்களுடன் எழுந்தருளினார். குழந்தை வடிவில் வந்ததால், 'மாமதலைப்பிரான்' என்ற பெயர் பெற்றார். 'மதலை' என்றால் குழந்தை. இவரை, தை மாதத்தில் வழிபடுபவர்களுக்கு, பிரசவ வலி ஏற்படும். அதாவது, குழந்தை பாக்கியம் கிடைக்கும்.இக்கோவிலில், ராஜகோபுரத்துடன் இரண்டு பிரகாரங்கள் உள்ளன. பெருமாளும், சாரநாயகி தாயாரும் தனித்தனி சன்னிதிகளில் வீற்றிருக்கின்றனர்.சங்கு, சக்கரம், செந்தாமரை, கதாயுதம் ஏந்தி நிற்கிறார், மூலவர். வைகுண்டத்தில் விஷ்ணு கையில் தாமரை இருப்பதைப் போல, இங்கும், மூலவர் கையில், தாமரை இருப்பது விசேஷம்.ராஜகோபாலன், ராமர், மணவாள மாமுனிகள், கண்ணன், காவிரி சன்னிதிகளும் உள்ளன.திருச்சேறையில், சாரநாத பெருமாள், சாரநாயகி, சார விமானம், சார புஷ்கரணி ஆகியவற்றுடன் சார ஷேத்திரம் என்ற பெயருடனும் திகழ்வதால், 'பஞ்சசார ஷேத்திரம்' என, அழைக்கப்படுகிறது.உற்சவர் பெருமாள், பஞ்ச லட்சுமி என்னும் ஐந்து தேவியருடன் வீற்றிருக்கிறார். ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி, சாரநாயகி ஆகியோருடன், மார்பில், லட்சுமியை தாங்கியிருப்பது சிறப்பு.ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் நரசிம்மர், அர்த்த மண்டபத்தில் வீற்றிருக்கிறார். இவருக்கு, சுவாதி நட்சத்திரத்தன்று, திருமஞ்சனமும், பானகத்துடன் தளிகையும் (உணவு) படைக்கப்படுகிறது. எண்ணிய எண்ணம் நிறைவேற, நரசிம்மருக்கு, வெள்ளியன்று பானக நிவேதனம் செய்வர். ஐந்து புதன் கிழமை, வெள்ளை மலர்களால் அர்ச்சனையும் செய்வர்.தைப்பூசத்தன்று, காவிரிக்கு அருள்புரிந்தார், பெருமாள். இதையொட்டி தை மாதம் பிரம்மோற்சவம் நடத்தப்படுகிறது. அட்சய திருதியையன்று, கருட சேவை நடக்கும்.கும்பகோணத்தில் இருந்து, 15 கி.மீ., துாரத்தில் திருச்சேறை உள்ளது. தி. செல்லப்பா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !