கூட்டுக் குடும்பம்!
ஞாயிற்றுக்கிழமை இப்படி அதிரிபுதிரியாய் விடியுமென்று அன்பழகனும், அன்னபூரணியும் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. அதுவும், வீட்டில், அண்ணனும், அண்ணியும் வந்து தங்கி இருக்கையில்! 'ஆறு மாதமா எவ்வளவு பதவிசா குடும்பம் நடத்தினாள்... மாமா, மாமி என்ற பேச்சிற்கு மறுவார்த்தை இல்லை. மரியாதையில் குறைவில்லை. அப்படிப்பட்டவள், இன்று ஏன் இப்படி பேசினாள்... வீட்டிற்கு வந்தவள மருமகளாக நினைக்காமல், மகளாகத் தானே நடத்தினோம். பெண் பிடித்து போனதால், வரதட்சணை, சீர் செனத்தி எதுவும் எதிர்பாக்காமல், மகனுக்குத் திருமணம் முடித்தோமே...' என்று மனதிற்குள் புலம்பினர்.சிலமணி நேரங்களுக்கு முன் நடந்த நிகழ்வை, மனத்திரையில் கொண்டு வந்தனர், இருவரும்.காலை, ௬:௦௦ மணி; வழக்கம் போல், அன்பழகனும், அன்னபூரணியும் நடைபயிற்சிக்காக புறப்படும் நேரம்... சட்டையை மாட்டியபடி, 'அன்னம்...' என்று தங்கள் படுக்கை அறையை நோக்கி, குரல் கொடுத்தார், அன்பழகன்.'இதோ வந்துட்டேங்க...' என்றபடியே வெளியே வந்தாள், அன்னபூரணி. 65 வயது; ஐந்தே கால் அடி உயரம்; கொஞ்சம் தடிமனான உடம்பு. மஞ்சள் பூசிய முகம், நெற்றி நடுவில் வட்டமாக பொட்டு என, அன்னபூரணி எப்போதுமே மகாலட்சுமி தான்.'போகலாமா...' என்று கேட்டு, இருவரும் ஒரு அடி தான் எடுத்து வைத்திருப்பர். அடுப்படியில் இருந்த மாலினி, வேகமாக வெளியே வந்து, 'அத்தை, மாமா... ஒரு நிமிஷம் நில்லுங்க...' என்றாள்.'என்னம்மா...''உங்க ரெண்டு பேர்கிட்டேயும் கொஞ்சம் பேசணும்...' என்றாள். அவள் குரலில் இறுக்கம்!'நடைப்பயிற்சி போயிட்டு வந்த பின் பேசலாமே...' என்றார், அன்பழகன்.'இல்ல; இப்பவே பேசணும்...''ரொம்ப முக்கியமான விஷயமா?''ஆமாம்...' குரல் கறாராக வந்தது.'காலையில் என்ன பிரச்னை... இரவு கணவன், மனைவிக்குள் ஏதாவது தகராறா... வெளியில் போறவங்கள நிறுத்தி வைத்துப் பேசுவதென்றால் ஏதோ வில்லங்கம் இருக்கணும்...' என்ற எண்ணம் மனதில் ஓட, 'சொல்லுமா...' என்று அமர்ந்தனர்.எதிரில் அமர்ந்த மாலினி, 'அத்தே... என் வேலை என்ன?' என்று கேட்டாள்.'இதென்னம்மா புதுசா கேட்குற... பள்ளிக்கூடத்து ஆசிரியை...' 'என் வீட்டுக்காரர் என்ன வேலை செய்றார்?''அட என்னாச்சு உனக்கு...' என்றாள், அன்னபூரணி.'பதில் சொல்லுங்க...' என்று இறுக்கமாக கேட்டவும், 'வங்கி மேலாளரா இருக்கான்...' என்றாள், அன்னபூரணி.'நாங்க காலையில வேலைக்கு எத்தனை மணிக்குக் கிளம்புறோம்; எத்தனை மணிக்குத் திரும்புறோம்...''காலையில ரெண்டு பேரும், ௯:௦௦ மணிக்குப் புறப்படுறீங்க. மாலையில் நீ, ௫:௦௦ மணிக்கும், அவன், இரவு, ௮:௦௦மணிக்கும் வர்றான்...''காலையில வீட்டில என் வேலை என்ன?''காலை, ௫:௩௦ மணிக்கு எழுந்து, வாசல் தெளிச்சு, கோலம் போட்டு முடிச்சதும், எல்லாருக்கும் காபி; அடுத்து சமையல், கிளம்பல்ன்னு வேலை சரியாய் இருக்கும்...''உங்களோட வேலை என்ன?''காலையில மாமாவோட நடை பயிற்சிக்குப் போயிட்டு வந்து, உனக்கு சமையலுக்கு காய்கறி நறுக்கிக் கொடுப்பேன்...''மாமா உங்க வேலை என்ன?''நடைப்பயிற்சி முடிஞ்சு வந்ததும் பத்திரிகை படிப்பேன்; மின்சார, தொலைபேசி, தண்ணீர் கட்டணங்கள் கட்டுவேன். மார்க்கெட்ல காய்கறி வாங்கி வருவது, கடைக்கு போவது என் வேலை...' என்று கூறியதும், 'உங்க ரெண்டு பேருக்கும் இந்த வேலை பத்தாது...' மாலினியின் குரல், சிறிதும் பிசிறில்லாமல் கறாராக வந்தது.'என்னம்மா சொல்றே...' என்றார், அன்பழகன்.'நீங்க ரெண்டு பேரும் செய்ற வேலை, பத்தாது. அத்தை... இனி, நீங்க, சலவை இயந்திரத்தில் துணிகளை துவைச்சு, காய வைச்சு, எடுத்து மடிச்சு வைக்கணும்...' என்றாள்.'இதெல்லாம், நீதானே செய்தே மாலினி...' என்றாள், அன்னபூரணி.'இப்போ முடியல; எனக்கு பள்ளிக் கூடத்துல வேலை அதிகமா இருக்கு. சாயந்திரம் இந்த வேலைகள செய்ய முடியல...''உனக்கு கஷ்டம்ன்னா, இனி நான் செய்றேன்...' தலையாட்டினாள், அன்னபூரணி.'மாமா... நீங்க அத்தை மடிச்சு வைக்கும் துணிகளை எடுத்துப் போய் சலவைக் கடையில் கொடுத்து, தேய்ச்சு வாங்கிட்டு வரணும்...''இந்த வேலைய அருண் தானேம்மா செய்தான். அலுவலகம் போகும்போது எடுத்துப் போய் கொடுத்து, திரும்பும் போது வாங்கி வருவான்...''அது அவருக்கு கஷ்டமா இருக்கு; காலையில சலவைக்கடை சமயத்தில் திறந்திருக்கு, திறக்காமலிருக்கு. திறக்காத நேரத்தில் அலுவலகத்திற்குச் சுமந்து போய், திரும்ப வரும்போது கொடுத்து, அடுத்த நாள் வாங்கி வர வேண்டி இருக்கு...''சரிம்மா... இனி அந்த வேலைய நானே செய்றேன்...''அதோட, அத்தே... இனி, இட்லி, தோசைக்கு மாவு அரைக்கிற வேலையையும் நீங்க தான் செய்யணும்...'என்றாள்.மனைவிக்கு கொடுக்கப்பட்ட கூடுதல் பாரத்தை பொறுக்காமல், 'எதுக்கும்மா... திடீர்ன்னு இந்த தடாலடி?' என்றார், அன்பழகன்.'இதுல என்ன மாமா தடாலடி இருக்கு... நாங்க ரெண்டு பேரும் வேலைக்குப் போய் உழைச்சு, களைச்சு வர்றோம். இதெல்லாம் நீங்களா உணர்ந்து, வேலைய பகிர்ந்துக்குவீங்கன்னு எதிர்பாத்தோம்; எத்தனை நாளைக்குத் தான் நாங்களே இந்த சுமைகளை சுமக்கிறது...''எங்களால முடிஞ்ச வேலைகள செய்துட்டுத் தானே இருக்கோம்...' என்றார், அன்பழகன்.'பத்தாது; இன்னும் எங்ககிட்டேயிருந்து புடுங்கிச் செய்யணும்...''நான் சமைக்கணுமா மாலினி...' என்றாள், அன்னபூரணி.'ஏன் சமைச்சு எங்கள அனுப்பலாமே... காலையில எல்லா வேலையும் செய்து அரக்கப் பரக்க ஓடாம, ஆசுவாசமாய்க் கிளம்ப உதவியாய் இருக்குமே...' என்றாள்.அன்னபூரணிக்கு இது சரியாகத் தோன்ற, 'சரி மாலினி... இனி, நானே தினமும் சமைக்கிறேன்; விடுமுறை நாள்ன்னா நீ சமைக்கலாம்...' என்றாள்.மனைவி முழு நேர சமையல்காரி ஆகிவிடுவாளோ என்கிற பயம் வந்தது, அன்பழகனுக்கு!'இது சரி வராது மாலினி; அவளுக்கு உடல் ஒத்துழைக்காது. வயசாயிடுச்சு...' என்றார்.இது, மாலினிக்குள் சூட்டைக் கிளப்பியது.'அதென்ன... அத்தை செய்யுறேன்னு சொல்றாங்க; நீங்க மறுக்குறீங்க...' என்று சீறினாள்.'இதோ பார் மாலினி... இன்னைக்கு நீயும், உன் புருஷனும் செய்ற இந்த மொத்த வேலைகளையும் விட கூடுதலாக, ஒரு காலத்தில் நாங்க செய்தோம். எங்கம்மா, அப்பா விவசாயிகள். காலையில எழுந்ததும், தோட்டம் துரவுன்னு கிளம்பிடுவாரு, எங்கப்பா. ஆடு, மாடு, கோழின்னு பராமரிக்கக் கிளம்பிடுவாங்க, எங்கம்மா. நான் அலுவலகத்துக்கும், இவ பள்ளிக்கூடத்துக்கும் போகணும். கைவேலையப் புடுங்கிக் செய்ய இவளுக்கு ஆள் கிடையாது. ரெண்டு புள்ளைங்க; யார் உதவி, ஒத்தாசை இல்லாமல் எங்க நாலு பேருக்கும் சமைச்சு எடுத்துட்டு, என் அம்மா, அப்பாவுக்கும் சமைச்சு வைச்சுட்டு, எல்லாரும் ஒரு ஸ்கூட்டர்ல கிளம்பணும். மாலை வந்து பார்த்தால், வீடு போட்டது போட்டபடி கிடக்கும்...'காபி போடுறதிலேர்ந்து, எல்லா வேலையும் முடிச்சு, உன் அத்தை படுக்க வரும்போது, தினமும் மணி, 11:00ஐ தாண்டும். அன்னைக்கு, அப்படி உழைச்சவள இன்னைக்கும் உழைக்கச் சொல்றது எந்த விதத்தில் நியாயம்... அன்னைக்கு இவள் உழைச்ச உழைப்புல, பாதி கூட நீ செய்யல புரிஞ்சுக்கோ...' படபடவென்று பொரிந்தார், அன்பழகன்.அசரவில்லை மாலினி.'அன்னைக்கு உழைச்சா, இன்னைக்கு, காலை நீட்டி, சாப்பிடணும்ன்னு சட்டமா... அதெல்லாம் முடியாது...' மாலினி எப்போதும், இப்படி பதிலுக்குப் பதில் பேசியது இல்லை. இப்போது ஏன் இப்படி நடக்கிறாள் என்பது அன்பழகனுக்கு விளங்கி விட்டது.'இதோ பார் மாலினி... உனக்கு தனிக்குடித்தனம் போக விருப்பம்ன்னா, தாராளமாய், மகராசியாய், சந்தோஷமாய்ப் போகலாம். இப்படி, எங்ககிட்ட சண்டைப் போட்டுப் போகணும்ன்னு அவசியமில்ல...' என்றார்.உடனே கோபத்துடன், 'இப்போ நான் உங்ககிட்ட தனிக்குடித்தனம் போறேன்னு சொன்னேனா... நான் என்ன கேட்டேன்; நீங்க என்ன சொல்றீங்க. எனக்கோ, என் புருஷனுக்கோ இந்த நிமிஷம் வரை அந்த ஆசை கிடையாது; நாங்க தனிக்குடித்தனமும் போக மாட்டோம்...' என்று உரக்கக் கத்தினாள்.'அப்போ நாங்க கிளம்பறோம்...' என்றார் கோபத்துடன், அன்பழகன்.'ஏன் நீங்க கிளம்பி... எங்க ரெண்டு பேருக்குள்ளே பிளவை ஏற்படுத்தவா... அதெல்லாம் கூடாது; நீங்க இங்க தான் இருக்கணும். சொல்ற வேலையைச் செய்யுங்க...' விறைப்பாய்ச் சொல்லி, விசுக்கென்று எழுந்து, அடுப்படிக்கு சென்றாள், மாலினி.இருவரும் ஒருவரையொருவர் பார்த்து மலைத்தனர்.பின், மெல்ல எழுந்து வெளியில் நடந்தனர்.''ஏங்க... என்னைக்கும் இல்லாத திருநாளாய், இன்னைக்கு எதுக்கு மாலினி இப்படி ஒரு ஆட்டம் போடுறா...'' என்று கேட்டு, கணவன் மவுனத்தைக் கலைத்தாள் அன்னபூரணி.''அது தான் சொன்னேனே... அவளுக்கு தனிக்குடித்தனம் போக ஆசை.'' ''அதான் இல்லன்னு சொல்லிட்டாளே...''''அப்படி சொல்லி நம்மை ஏமாத்துறா; நல்லவள் போல் நடிக்கிறாள்.''''அப்படியா சொல்றீங்க...''''அப்படித் தான்,'' என்றார் அழுத்தமாக!''இவ்வளவு நடக்குது... மாடியில் இருக்கிற நம்ம பையன் எட்டிப் பார்த்தானா பாருங்க...'' மனதில் இருந்த ஆதங்கத்தைக் கொட்டினாள்.''இதுக்கு என்னதாங்க தீர்வு...'' யோசனையாய் அவரைப் பார்த்தாள்.''அதான் எனக்கும் தெரியல,'' என்றார்.''என்னவோ போங்க... உங்க அண்ணனும், அண்ணியும், அவங்க பையனோட சண்டை போட்டு கோவிச்சுக்கிட்டு வந்து, நம்ம வீட்டுல தங்கி இருக்கிற இந்த நேரத்துல, இவ இப்படி சண்டை போட்டது தான் கஷ்டமா இருக்கு; அவங்க நம்மள பத்தி என்ன நினைப்பாங்க,'' என்று வருத்தப்பட்டாள்.''அது தான் எனக்கும் வருத்தம்; அவங்க இல்லாத சமயத்துல, இதையெல்லாம் நம்மகிட்ட கூறியிருக்கலாம். இனி, அவங்க முகத்தில எப்படி முழிப்பேன். தம்பி தாங்குவான்னு நம்பி வந்தவங்க. இப்போ, இங்கே எப்படித் தங்குறதுன்னு நெனைப்பாங்களே...'' என்றவருக்கு குரல் உடைந்தது.அப்போது, அன்பழகனின் மொபைல் போன் ஒலித்தது. அவர் அண்ணன் தான் அழைத்தார்.''ஹலோ... சொல்லுண்ணா...''''நானும், உங்க அண்ணியும் எங்க வீட்டுக்கு கிளம்பிப் போறோம்ப்பா...''''ஏன்... இந்த திடீர் முடிவு?''''நாங்க இருக்கும் போதே, உன் மருமக உங்க ரெண்டு பேரையும் இப்படி விரட்டுறா... இந்த நிலைமை நாளைக்கு எங்களுக்கும் வராதுன்னு என்ன நிச்சயம்...''''அதுக்காக இப்படி அரக்கப் பரக்கக் கிளம்பணுமா...''''உங்ககிட்ட சொல்லிட்டு கிளம்பலாம்ன்னு தான் நினைச்சோம்; ஆனா, நீங்க எங்கள விடமாட்டீங்க. அதான், நீங்க வீடு திரும்பறதுக்குள்ளே, போயிடலாம்ன்னு கிளம்பிட்டோம்; வருத்தப்படாதப்பா...'' என்று சொல்லி இணைப்பை துண்டித்தார். அன்பழகன் மனம் கனத்தது.''என்னங்க விஷயம்?'' என்று கேட்டாள், அன்னபூரனி.விஷயத்தை சொன்னார்.'கஷ்டம்ன்னு வந்தவங்கள கூட, நிம்மதியாய் தங்க விடாமல் செய்துட்டாளே... பாவி...' என, மனசு கொதித்தது.''விடக் கூடாது; அவளது அகம்பாவம், அதிகாரத்த முளையிலேயே கிள்ளி எறியணும்,'' என்றார், அன்பழகன். இருவரும் வீட்டிற்குள் நுழைந்ததும், வேகமாய் வந்து, அவர்கள் கால்களில் நெடுசாண்கிடையாக விழுந்து,'எங்கள மன்னிச்சிடுங்க...' என்றனர், மகன் அருணும், மாலினியும்!தம்பதிகள் இதை எதிர்பார்க்கவில்லை.''தப்பெல்லாம் செய்துட்டு, இப்படி அடாவடியாய் மன்னிப்புக் கேட்டால் எப்படி...'' என்றார், அன்பழகன்.'நீங்க மன்னிச்சேன்னு சொன்னத்தான் உங்க காலை விடுவோம்...'என்றனர்.''மன்னிசுட்டேன்னு சொல்லுங்க... புள்ளைங்க ரொம்ப நேரமாய் கால்ல விழுந்து கிடக்காங்க...'' பெற்றவள் மனம் இளகியது.''எதுக்கு மன்னிப்புன்னு கேள்...'' மனைவியைப் பார்த்தார்.''நாங்க நடத்தின அடாவடி நாடகத்துக்கு...'' என்றான், அருண்.''புரியல...''''என்ன தான் வீட்ல சண்டை, சச்சரவு, கஷ்டம், நஷ்டம் இருந்தாலும், பெரியப்பாவும், பெரியம்மாவும் வீட்டை விட்டு வந்துருக்கக் கூடாது. கோபம், தாபம் இருந்தால் ஒரு ரெண்டு நாள் இடம் மாறி இருந்துட்டு, உடனே வீட்டுக்குப் போயிடணும். அப்போ தான் மகன், மருமகள், பேரன், பேத்தின்னு உறவு ஆரோக்கியமா இருக்கும். இது புரியாமல், 'நமக்கு தாங்க ஆள் இருக்கு, தங்க முதியோர் இல்லம் இருக்கு'ன்னு கிளம்பினா, எல்லாம் குட்டிச்சுவராகும்; பாசம், நேசமில்லாமல், எல்லாரும் தனித் தீவாய் மாறிப் போயிடுவாங்க.''ஏற்கனவே, உலகம் அப்படித்தான் ஆகிட்டு இருக்கு. நம்ம குடும்பமும் அப்படி ஆகக் கூடாதுன்னு தான், நாங்க ரெண்டு பேரும் திட்டம் போட்டு, உங்க ரெண்டு பேர்கிட்டேயும் சண்டை போட வைத்தேன். மாலினி அதை திறமையா செய்தா...'' என்றான், அருண்.''நாங்க எதிர்பாத்தபடி பெரிய மாமா, மாமி கிளம்பிட்டாங்க. 'தம்பி மருமகளிடம் பேச்சு வாங்குறத விட நம்ம மகன், மருமகளிடம் பேச்சு வாங்குறது நல்லதுங்க'ன்னு பெரிய அத்தை, மாமாகிட்ட சொன்னாங்க.''நீங்க வந்தபின் சொல்லிட்டுப் போங்கன்னு சொன்னதுக்கு, 'அது சரி வராது; போன் செய்து சொல்லிக்கிறோம்'ன்னு சொன்னாங்க. போகும்போது, 'தயவு செய்து உங்க மாமனார், மாமியார சண்டை போட்டு துரத்திடாதீங்க'ன்னு எங்களுக்கு அறிவுரை வேற...''இது தப்புன்னாலும், இனிமே நாங்க தப்பு செய்தாலும், நீங்க எங்கள விட்டு எங்கும் போகக் கூடாது. சாகிற வரை கூட்டுக் குடும்பமாய், சந்தோஷமாய் இருக்கணும். இது தான் எங்க ஆசை. எல்லாத்தையும் மறந்து, எங்கள மன்னியுங்கள் மாமா,'' என்று மாலினி சொல்ல, 'எப்பேர்ப்பட்ட பிள்ளைகள்...' அன்பழகனும், அன்னபூரணிக்கும் மனசு குளிர்ந்தது. அவர்களை அணைத்து, 'மன்னிச்சுட்டோம்...' என்றனர் கோரஸாக! காரை ஆடலரசன்