வளம் தரும் மார்கழி வியாழன்!
மார்கழி என்றால் காலையில் திருப்பாவை, திருவெம்பாவை பாடி பஜனை செய்வது என்ற அளவில் தெரிந்து வைத்திருப்போம். உண்மையில், இது செல்வ விருத்திக்குரிய மாதம் என்பது, பலர் அறியாதது.ஆடியில் செவ்வாய், வெள்ளி; ஆவணியில் ஞாயிறு; புரட்டாசியில் சனி; கார்த்திகையில் திங்கள்; தை மாதம் வெள்ளி கிழமைகளுக்கு முக்கியத்துவம் தருவது போல, மார்கழி மாதத்திற்குரிய வழிபாட்டு கிழமை, வியாழன்.புரட்டாசி சனியன்று, பெருமாளுக்கு முக்கியத்துவம் தருவது போல், மார்கழி வியாழனன்று, அவரது துணைவியான லட்சுமி தாயாரை, குரு வார விரதம் இருந்து வழிபடுவர்.மார்கழிக்கும், குருவுக்கும் சில சம்பந்தங்கள் உண்டு. மார்கழி மாதத்தில் சூரியன், குருவுக்குரிய தனுசு ராசியில் சஞ்சரிப்பார். குருவுக்கு இன்னொரு பெயர், பிரகஸ்பதி. இவரைத் தன் குருவாக ஏற்றவர் சூரியன்.ஆக, தன் ராசிக்கு வரும் சூரியனின் தேவைகளை தடையின்றி நிறைவேற்றி வைப்பார், குரு. அவர், மார்கழியில் மிகுந்த மனமகிழ்ச்சியுடன் இருப்பார். தாயும், தந்தையும் மகிழ்ச்சியாக இருக்கும் நேரத்தில், ஒரு குழந்தை என்ன கேட்டாலும் கிடைக்கும். அதுபோல, தன் மாணவனின் வருகையால் மகிழ்ந்திருக்கும் குரு, தன்னை வழிபடுபவர்கள் கேட்பதைத் தருவார்.குருவுக்குரிய கிழமை, வியாழன். இதனால் தான், மார்கழி வியாழக் கிழமைகளுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.மகாராஷ்டிராவில், மார்கழி குரு வார விரதம் என்ற பெயரில், இதை மிகுந்த சிரத்தையுடன் அனுசரிப்பர். அன்று, மகாலட்சுமி வழிபாட்டுக்கு முக்கியத்துவம் தரப்படும். மார்கழியின் ஒவ்வொரு வியாழனன்றும், காலையே லட்சுமி பூஜையை நடத்தி விடுவர். இதை நம் வீடுகளில் நடத்துவது, பெரும் செல்வ வளத்தை தரும். இந்த பூஜை மிகவும் எளிதானது. பூஜை அறையிலோ, திருவிளக்கின் முன்போ மகாலட்சுமி படத்தை அலங்கரித்து வைக்க வேண்டும். படத்தின் முன் பெரிய இலை விரித்து, நுால் சுற்றிய ஒரு செம்பு அல்லது கலசத்தில் தண்ணீர் ஊற்றி, அதன் மேல் மாவிலை வைக்க வேண்டும்.இலையில் பச்சரிசி, நெல், இனிப்பு வகைகள், வெற்றிலை, பாக்கு படைக்க வேண்டும். மகாலட்சுமி குறித்த ஸ்லோகங்கள், பாடல்களைப் பாடி, கற்பூரம் அல்லது நெய் தீபம் காட்டுங்கள். மனப்பூர்வமாக இதைச் செய்தால் போதும். மகாலட்சுமி மகிழ்ந்து, செல்வ வளம் தருவாள். மார்கழியின் எல்லா வியாழக்கிழமைகளிலும் இந்த பூஜையைச் செய்ய வேண்டும். குபேரனுக்கும் மிக விருப்பமான நாள், வியாழன். மார்கழியின் வளர்பிறை அஷ்டமி திதியும், முக்கியமான நாள். அன்று சிவன் கோவில்களை மூன்று முறை வலம் வந்தால், கன்னிப் பெண்களுக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமையும். திருமணமானவர்கள் தீர்க்க சுமங்கலிகளாக விளங்குவர். விவசாயிகள் அதிக விளைச்சல் பெற, சிவன் அருள் செய்வார்.மார்கழி தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வழிபட்டால், குடும்ப பாதுகாப்புக்கு நல்லது.மார்கழி மாதம் லட்சுமி விரதம் அனுஷ்டித்து, சகல வளமும் பெறுங்கள்.தி. செல்லப்பா