உள்ளூர் செய்திகள்

உதைபடும் பந்து!

''டேய் முரளி... ரெடியா...'' என்றபடி அறைக்குள் நுழைந்தான் சுரேஷ்.சோம்பல் முறித்து எழுந்தபடி, ''என்னடா காலங்காத்தால...'' என்றான் முரளி.''மறந்துட்டீயா... இன்னிக்கு உன்ன ஒரு இடத்துக்கு அழைச்சுட்டு போறேன்னு சொன்னேனே...'' என்று சுரேஷ் கூறியதும், ''ஓ... அந்த மடத்துக்கா...'' என்றான்.''ஆமாம்; அங்கருக்கிற சாமியார் ரொம்ப பிரபலம். சொன்னால் சொன்னபடி நடக்கும்ன்னு பேசிக்கிறாங்க,'' என்றான்.''எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை கிடையாதுன்னு சொன்னேனே...''''எனக்காக ஒரு முறை வா; உன்னோட படிச்ச நாங்க எல்லாரும் ஏதோ ஒரு வேலையில் இருக்க, எங்களை விட நல்லா படிச்ச உனக்கு மட்டும் எதுவும் அமையாதது பெரும் குறையா இருக்கு,'' என்றான் சுரேஷ்.''டேய் சுரேஷ்... என்னைப் பெத்தவங்க கூட இவ்வளவு கவலைப்பட்டதில்லயேடா...''''அப்படிச் சொல்லாத... நாலு பேரைப் போல தன் மகனும் வேலைக்கு போகணும்; நாலு காசு சம்பாதிச்சு, காலாகாலத்துல கல்யாணம் செய்து, குழந்தை பெத்து வாழ்க்கையில செட்டிலாகணும்ன்னு ஆசைப்படாம இருப்பாங்களா... எங்கே அழுத்திச் சொன்னால், ஒரே பிள்ளையான நீ வருத்தப்படுவியோன்னு பயந்து, கவலைய மனசுக்குள்ள வச்சுக்கிட்டு, உன்னை, செல்லம் கொஞ்சிகிட்டிருக்காங்க. இப்ப இல்லாட்டாலும், ஒருநாள், உனக்கும் அந்த கவலையும், ஏக்கமும் எட்டிப் பார்க்கும்.''நீ எடுக்கிற ஒவ்வொரு முயற்சியும் தட்டிப் போகுதுன்னா, மனித முயற்சிக்கு அப்பால் ஒண்ணு இருக்கு. அதுதான், உனக்கு முட்டுக்கட்டை போடுது. அது என்னன்னு தெரிஞ்சு, அதற்கு உண்டான பரிகாரம் செய்து, அந்த தோஷத்தை கழிச்சுடலாம்,'' என்றான் சுரேஷ்.''அடப்பாவி.... எப்படா நீ, நூத்துக் கிழமானே... பொறுக்க முடியல; வந்து தொலையறேன்,'' என்று எழுந்தான் முரளி.அப்போது அங்கே வந்த முரளியின் அம்மா, விஷயத்தை கேட்டதும், ''சுரேஷ்... நீ, அவனுக்காக ரொம்ப மெனக்கிடுறே... எப்படியாவது அவனுக்கு விடிவு கிடைச்சா போதும்ப்பா,'' என்றாள்.''எதுக்கும்மா பெரிய வார்த்தையெல்லாம் சொல்றீங்க... உங்க வீட்ல சாப்பிட்டிருக்கேன்; அதோட அவன் என் நண்பன். இதக் கூட செய்யாம இருந்தா எப்படி! என்ன... ஏதாவது ஒரு கம்பெனிக்கு அழைச்சுட்டு போக வேண்டிய நான், ஆசிரமம், சாமியார்ன்னு கூட்டிட்டு போறது, ஒரு மாதிரியா இருக்குன்னாலும், எதற்கும் இதையும் முயற்சி செய்து பாத்துடுவோமேன்னு தான்,'' என்றான்.''தப்பில்லே... நம்ம சொல் வேலை செய்யாத போது, எங்கிருந்தாவது ஒரு நல்ல சொல் விழுந்து பலிச்சா போதும்,'' என்றாள் முரளியின் அம்மா.''புறப்படலாமா,'' எனக் கேட்டு, கடனே என்று கிளம்பி வந்தான் முரளி.பைக்கில் ஏறி அமர்ந்தவன், ''மந்திரிச்சு தாயத்தெல்லாம் கட்டுவாங்களாடா...'' என்று கேட்டவன், தொடர்ந்து, 'உள்ளங்கையில சூடத்தக் கொளுத்தி, வேப்ப மரத்தை சுத்த விடுவாங்களோ... அப்படி ஏதும் நடந்தா, மவனே... உன் தலையில, எரியற சூடத்தை வச்சுட்டு, திரும்பிப் பார்க்காம வந்துகிட்டேயிருப்பேன்,'' என்றான் முரளி.ஆனால், வந்த இடத்தில் கற்பூரம், வேப்பிலைக்கு வேலை இல்லை. கொஞ்சமாய் தாடி நரைத்த, வட்டக் கண்ணாடி போட்டிருந்த, 50 வயதுக்காரர், முரளியின் கையை இழுத்து வைத்து பூதக் கண்ணாடியில் ஆராய்ந்தவர் முகம், கசப்பை விழுங்கியதை போல் அஷ்ட கோணலாக மாற, அவனை, ''வெளியில் இரு,'' என்று அனுப்பினார். அவர் முக மாற்றத்தை கவனித்த முரளி, சிறு புருவச் சுளிப்புடன் வெளியேற, சுரேசஷுக்கு அழைப்பு வந்தது.சுரேஷ் அறைக்குள் சென்றதுமே, ''வேஸ்ட்டு தம்பி,'' என்று ஆரம்பித்த சாமியார், ''துஷ்ட ரேகை, நீசப் பார்வை. உன் நண்பனால துரும்பைக் கூட அசைக்க முடியாது; காலத்துக்கும் தண்டச்சோறு. இவனால யாரும் சுகப்பட முடியாது. இவனுக்கு சம்பாதிக்கிற பாக்கியமே இல்லை. கிடைத்தாலும் துடைச்சு தூக்கி எறிவான். துணிச்சலும், முயற்சியும் கைவிட்ட சோம்பல்காரன். துருப்பிடித்த இரும்பு! கடைசி வரை பெத்தவங்களுக்கு பாரம்; தண்டச் சோறு போட்டு அழ வேண்டியது அவங்க தலை எழுத்து,'' என்றார்.''என்ன சாமி இது... தலையில கல்லைத் தூக்கி போடறீங்களே... ஒரு நல்ல வார்த்தை சொல்லக் கூடாதா...'' என்றான் சுரேஷ்.''உனக்கு சொல்றேன்... அவனோடு சேராம, விலகி உன் வேலையப் பார். இது தான் நான் சொல்ற நல்ல வார்த்தை. அவனுக்குள் ஏழரைச் சனி, சோம்பல் ரூபத்தில் இறங்கி முடக்கிப் போடுதுப்பா; ஒண்ணும் விளங்காது போ,'' என்றார்.''அவன பெத்தவங்க ரொம்ப கவலையில இருக்காங்க. ஆனாலும், என்னைக்காவது ஒரு நாள் அவனுக்கு நல்லது நடக்கும்ன்னு நம்பிக்கையில் இருக்காங்க,'' என்றான் சுரேஷ்.''அவன் தனக்கே நல்லவனில்ல; அப்புறம் எப்படி பெத்தவங்களுக்கு நல்லவனாக இருக்க முடியும். நேரமாச்சு கிளம்பு; கட்டணம் வேணாம், போ... இனிமே இது மாதிரி உதவாக்கரைகளை அழைச்சுக்கிட்டு வராதே...'' என்றார்.மனம் கனக்க வெளியில் வந்த சுரேஷ், முரளியைக் காணாமல் திகைத்தான்.அங்கிருந்தோரை விசாரிக்க, அவர்களில் ஒருவர், ''அவர் இப்பதான் கோபமா எழுந்து போனாரு... நீங்க உள்ளே பேசிகிட்டிருந்தது, அவருக்கு மட்டுமில்ல, எங்களுக்கும் கேட்டது. சாமியார் சொன்னதக் கேட்டதும் எங்களுக்கே கஷ்டமாப் போச்சு. மூக்கும், முழியும் லட்சணமா இருக்கிற அந்த பிள்ளைக்கு, இந்த சின்ன வயசுல இப்படியொரு சாபமா... பாவம்,'' என்று உச்சுக் கொட்டினார்.பைக்கை உதைத்துக் கிளப்பிய சுரேஷ், சிறிது தூரத்தில் கோபத்துடன் வேகவேகமாக நடந்து கொண்டிருந்த முரளியை நெருங்கி, ''டேய் முரளி... நில்லுடா...'' என்று கூறியவாறே பைக்கில் இருந்து இறங்கினான்.முரளியின் முகம் கோபத்தாலும், அவமானத்தாலும் கொதித்து போயிருந்தது. சுரேஷின் சட்டைக் காலரை கொத்தாக பிடித்து, ''எத்தனை காலம்டா காத்திருந்தே... இப்படியொரு இடத்துக்கு கூட்டி வந்து, நாலு பேருக்கு முன், என்னை கையாலாகதவன்னு பட்டம் கட்டி அவமானப்படுத்த... வேணாம் வேணாம்ன்னு சொல்லியும் வலிய இழுத்து வந்து அசிங்கப்படுத்தியேடா... சீ... உன்னையெல்லாம்...'' என்று பிடித்து தள்ளினான்.''அவன் எல்லாம் ஒரு சாமியாரா... அயோக்கிய பய... ஒரு ரேகையை வச்சு, முக்காலமும் சொல்ற மூஞ்சிய பாரு. இப்படியாடா ஒரு சாமி சொல்வான்... தப்பாவே இருந்தாலும், பூசி மெழுகி பரிகாரம் சொல்லி, ஆறுதல் படுத்தறவந்தாண்டா சாமி! அப்பட்டமா போட்டு உடைச்சி நசுக்கி தள்ளுறவன் நச்சு ஆசாமிடா. நீங்க ரெண்டு பேரும் கூட்டுக் களவாணிகள்; இனி நீ என் முகத்திலேயே முழிக்காதே. வீட்டுப் பக்கம் வந்தே காலை உடைப்பேன்,'' என்றான் முரளி.''முரளி...''''பேசாதே...''''முரளி...''''போடா துரோகி,'' என்று கோபமாக கூறி, விறுவிறுவென நடந்து சென்றான்.மாலையில், முரளி வீட்டிற்கு சென்றான் சுரேஷ். ஹாலில் அமர்ந்திருந்த முரளியின் அம்மாவிடம், ''முரளி இருக்கானாம்மா,'' என்று கேட்டான்.''போன இடத்துல என்னப்பா நடந்துச்சு... அந்த சாமியார் என்ன சொன்னார்... அவன் முகமே சரியில்லயே... அடிபட்ட நாகம் மாதிரி சீறிக்கிட்டேயிருந்தான். என்ன நடந்ததுன்னு கேட்டா, ஒண்ணும் சொல்லாம, 'இவங்களுக்கு நான் யாருன்னு காட்டறேன்; என்னையாடா லாயக்கில்லாதவன்னு சொன்னீங்க'ன்னு கறுவிக்கிட்டே இருந்தான்...'' என்றாள்.''வேற ஒண்ணுமில்லம்மா... சாமியார் கொஞ்சம் நெகடிவா பேசிட்டார். அதுல கொஞ்சம், 'மூடு அவுட்' ஆயிட்டான். அவன் போக்குல விடுங்க; நான் ரெண்டு நாள் கழிச்சு வந்து அவன பாக்கிறேன்,'' என்று திரும்பினான் சுரேஷ்.சில நாட்கள் கழித்து, சுரேஷ், முரளி வீட்டிற்கு சென்ற போது, வீட்டில் அவன் இல்லை. அவன் அம்மாவிடம் விசாரித்த போது, ''எங்ககிட்ட கூட சொல்லல. சூட்கேஸ்ல ரெண்டு, 'செட்' டிரஸ்சை எடுத்து கிட்டு அதிகாலையிலேயே கிளம்பி போயிட்டான். இதுவரை எந்த தகவலும் இல்ல; கடவுளே... அவனை எங்கே தேடுவோம்... சும்மாயிருந்தாலும் என் பிள்ளை கண் எதிரில் இருந்தான். இப்ப வீட்டை விட்டு போய்ட்டானே... ஒரு சொல் பொறுக்க மாட்டானே; கோபக்காரனாச்சே... இப்ப வீட்டை விட்டு போயிருக்கான்னா, அவன் மனசு எந்த அளவுக்கு நொந்து போயிருக்கும். நல்லது செய்யறதா நினைச்சு, எங்களுக்கு வினையை தேடி வச்சுட்டியேடா பாவி,'' என்று அழுது புலம்பினாள் முரளியின் அம்மா.நெஞ்சில் கத்தி பாய்ந்தது போலிருந்தது. மனதை, பயம் கவ்விக் கொண்டது; 'அவன் மட்டும் தவறான முடிவுக்கு போய்விட்டால்...' என்று நினைக்கும் போதே, 'தவறான முடிவுக்கு போறவன், ரெண்டு செட் மாற்று துணி எடுத்துக்கிட்டா வெளியேறுவான்...' என்றது மனம்.நாட்கள், மாதங்களாகி, மாதங்கள் ஆண்டுகளானது. அவ்வப்போது, தன் பெற்றோருக்கு மட்டும் தன் இருப்பை சுருக்கமாக தெரிவிப்பானே தவிர, எங்கிருக்கிறான், என்ன செய்கிறான் என்ற தகவலை தெரிவிக்கவில்லை.அன்று, சுரேஷ் வீட்டு வாசலில் பெரிய கார் வந்து நின்றது. உள்ளிருந்தவனை அடையாளம் தெரியவில்லை, உற்றுப் பார்த்த போது, முரளி!''முரளி... நீயாடா,'' என்று அதிசயிக்கும் முன், அவனை காரில் இழுத்துப் போட்டு, ''அந்த மொக்கை சாமி உயிரோடு தானே இருக்கான்,'' என்று கறுவியபடி காரை புயலாய் செலுத்தி, மடத்தின் வாசலில் நிறுத்தினான் முரளி.சுரேஷை தரதரவென இழுத்துக் கொண்டு சாமியார் முன் சென்று, ''என்னை தெரியுதா?'' என்று உருமினான்.திடீரென சுரேஷுடன், முரளியைப் பார்த்ததும், ஒன்றும் புரியாவிட்டாலும், பின், நினைவு வந்து சுதாரித்த சாமியார், ''இதை... இதைத் தான் எதிர்பார்த்தோம்,'' என, புன்னகையுடன், நிதானமாக சொன்னவர், ''ஒருநாள், உன் நண்பன் இதோ இந்த சுரேஷ்... என்னை வந்து பார்த்து, 'நினைச்சா மலையளவு சாதிக்கும் வல்லமை கொண்ட என் நண்பன், போதுமான முயற்சி செய்யாம, மந்தமா இருக்கான். அவன் மேல எங்களுக்கு இருக்குற அக்கறை, கவலை எதுவும் அவனுக்கு புரிய மாட்டேங்குது. அவன கூட்டிட்டு வர்றேன்; அருள் வாக்கு மாதிரி ஏதாவது சொல்லி, அவனை மோட்டிவேட் செய்யுங்க'ன்னு சொன்னார். எனக்கு தெரியும்... கால்பந்தை வாயில ஊதி நகர்த்த முடியாது; உதைக்கணும்ன்னு! உதைச்சேன்; அது சரியா, 'கோல்'ல விழும்ன்னு நம்பினேன்; நடந்துருச்சு.''உன் வேகமும், தோரணையும், நீ வந்த காரும் உன் வெற்றிய சொல்லுது; உன்னால முடியும்ன்னு சொல்லி, நம்பிக்கை தருவது போல, உன்னால் முடியாதுன்னு சொல்லி, உசுப்பேற்றி சாதிக்க வைக்கிறதும் ஒரு கலை. ஆழ்ந்த அவமானத்துக்கு ஆளாகும் போது, சிலர் நொந்து போறதும், பலர் வெகுண்டு எழுறதும் உண்டு. உன் விஷயத்தில ரெண்டாவதாக சொன்னது தான் நடந்திருக்கு. ஒருவேளை, நீ நொந்து, துவண்டு போனாலும், உன்னை நிமிர வைச்சுருக்க முடியும். கால்பந்தை, எப்போ, எப்படி உதைச்சா கோலில் விழும்ன்னு நல்ல கால்பந்தாட்டக்காரனுக்கு தெரியும்; நல்லா இரு,'' என்றார்.வெளியில் வந்ததும், ''நன்றின்னு சொல்லிடாதே... உனக்கும், உன் பெற்றோருக்கும், உன் முன்னேற்றம் எத்தனை பெருமையோ, அதைவிட பெருமையும், சந்தோஷமும் எனக்கு! என்ன செய்தே, எப்படி பெரியாளானேன்னு கதை கேட்க விரும்பல. ஆனா, அது ஒரு நல்ல முறையில் வந்த முன்னேற்றம்ன்னு மட்டும் நம்பறேன்; இதை அப்படியே மெயிண்ட்டெய்ன் செய்து, மேலும் வளர்ந்தா போதும்,'' என்று சொல்லி புறப்பட்ட நண்பன் சுரேஷை, கண்ணீருடன் பார்த்தபடி நின்றான் முரளி.எஸ்.பிரகஸ்பதி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !