பண்ணை விவசாயத்திற்கு வழிகாட்டும் கிருஷ்ணகுமார்!
அழுக்கு படாத வேலை, அசதி ஏற்படுத்தாத, 'குளு குளு' அறை, வேலை நேரம் குறைவாகவும், சம்பளம் அதிகமாகவும், வாரத்தில், இரண்டு நாள் விடுமுறையும் வேண்டும்.இதுதான், இன்றைய பெரும்பாலான இளைஞர்களின் மனநிலை. இவர்களில் இருந்து மாறுபட்டவர் தான், ஆர்.கிருஷ்ணகுமார்!திருச்சியை சேர்ந்த இந்த இளைஞர், படிப்பை முடித்த பின், பார்த்த வேலைகள் எதுவும் திருப்தியை தரவில்லை. சொந்தமாக தொழில் செய்ய வேண்டும், அது, விவசாய சமூகத்திற்கு உகந்ததாக இருக்க வேண்டுமென்று எண்ணினார்.இந்த எண்ணத்தின் வளர்ச்சி தான், இன்று, அவர் நடத்தும், 'ஸ்டேன்டர்டு குரோத் சீட்ஸ் அண்ட் டெய்ரி பார்ம்' நிறுவனம். அரசு வேளாண் பல்கலைகள் அறிமுகப்படுத்தும், தீவன பயிர்களை, மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதும், அது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் தான் இவரது பணி!மேய்ச்சல் நிலம் குறைந்து வருவதாலும், சத்தில்லாத உணவுகளை சாப்பிடுவதாலும் நலிவடைகின்றன, கால்நடைகள். இதனால், பால் உற்பத்தி குறைகிறது.அதனால்,'மனிதர்களை போலவே, கால்நடைகளுக்கும் சரிவிகித, சத்தான உணவு வழங்க வேண்டும்...' என்கிறார், கிருஷ்ணகுமார்.குதிரை மசால், வேலி மசால், முயல் மசால், கோ 4, கம்பு நேப்பியார், கோ 5, சூப்பர் நேப்பியார் போன்ற தீவன பயிர்களை, தன் நிலத்தில் உற்பத்தி செய்து, கால்நடைகளுக்கு வழங்குகிறார். குறைந்த விலை, தரமான தீவனம் என்பதால், இவரது தீவன பயிர்களுக்கு, குஜராத் மாநிலம் வரை வரவேற்பு கிடைத்துள்ளது.இதேபோல், கால்நடைகளுடன் இணைந்த விவசாய பண்ணை நடத்துவது தற்போது பரவலாகி வருகிறது. அப்படி, பண்ணை விவசாயம் செய்வோர், தங்கள் நிலத்தின் தன்மை, நீர் மேலாண்மை போன்ற விஷயங்களில் தீர்வு கிடைக்க, இவரை அணுகுகின்றனர். எந்த மண்ணில், எந்த தீவன பயிர் பயிரிடலாம்; அதற்கேற்ப எப்படிப்பட்ட கால்நடைகளை வளர்க்கலாம், மண்ணை வளமாக்குதல், நீர் மேலாண்மை என பல விஷயங்கள் குறித்து பேசுகிறார். அவரது ஒவ்வொரு வார்த்தையிலும் விவசாயிகளின் நலன் பற்றிய சிந்தனை தான் வெளிப்படுகிறது. இவரை போன்ற இளைஞர்களால் தான் விவசாயம் செழித்து, உணவு உற்பத்தியில் நம் நாடு தன்னிறைவு அடையும்!இவரை தொடர்பு கொள்ள: 90470 40917, 90804 92178.எல்.முருகராஜ்