உள்ளூர் செய்திகள்

சகோதர ஒற்றுமை ஓங்கட்டும்!

மார்ச் 24 - கும்பகோணம் ராமர் பிரம்மோற்சவம்!அண்ணன் தம்பிக்குள், சொத்து சண்டை இல்லாத குடும்பங்கள் மிகவும் குறைந்து விட்டன. கூட்டுக்குடும்ப முறை நலிந்து, உறவு முறைக்குள்ளேயே ஏதோ சுபநிகழ்ச்சிகளில் மட்டும் சந்திக்கும் நிலையாகி விட்டது. இந்த நிலையில் இருந்து நம்மை மாற்றிக் கொள்ள வேண்டுமானால், ராம சகோதரர்களின் தரிசனம் வேண்டும்.பொதுவாக, ராமர் கோவில் களில் அவருடன், லட்சுமணனை மட்டுமே பார்க்க முடியும். பரதன், சத்ருக்கனரைக் காண்பது அரிது. அயோத்திக்கு அடுத்தபடியாக, தமிழகத்தில் ஒரு சில கோவில்களில் மட்டுமே, இந்த அரிய தரிசனத்தைக் காணலாம். அதில் ஒன்று, கும்பகோணம் ராமசுவாமி கோவில். இங்கு பங்குனி மாதம் பிரம்மோற்சவம் நடக்கும்.அயோத்தி மன்னர் தசரதருக்கு, புத்திரப் பேறு இல்லை. பிறகு, அவர் புத்திரகாமேஷ்டி யாகம் செய்தார். அதன் பலனாக, விஷ்ணுவே, அவருக்கு குழந்தையாக அவதரித்தார். அவரின் முதல் மனைவி கோசலை, அந்த தெய்வ மகனை பெற்ற புண்ணியவதி. இதையடுத்து, விஷ்ணுவின் கையிலுள்ள சக்கரம், பூமிக்கு வர ஆசைப்பட்டது. அது பரதன் என்ற பெயரில், இரண்டாம் மனைவி கைகேயி வயிற்றில் அவதரித்தது. விஷ்ணு பூமிக்கு வந்த போது, அவருடன் ஆதிசேஷனும் வருவேன் என அடம் பிடித்தது. தன்னை தினமும் தாங்கி தூங்க வைக்கும் அதன் சேவையை பாராட்டி, விஷ்ணு அதை தன் தம்பியாக ஏற்றார். மூன்றாவது மனைவி சுமித்திரைக்கு அக்குழந்தை பிறந்தது. அவரே லட்சுமணன். சுமித்திரைக்கு, விஷ்ணுவின் கையிலுள்ள சங்கின் அவதாரமாக பிறந்த மற்றொரு குழந்தையே சத்ருக்கனன். இந்த சகோதரர்கள், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் வாழ்ந்தனர். தாய் வெவ்வேறு என்ற நிலையிலும் கூட, இவர்களது ஒற்றுமை, இன்று வரை உலகம் வியக்கத்தக்கதாக இருக்கிறது.அண்ணனுக்கு பதிலாக, தற்காலிக ஆட்சி நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் வந்த போது, பரதன், ராமனின் பாதுகையை, சிம்மாசனத்தில் வைத்து மரியாதை செய்து வந்தான். சத்ருக்கனன், தன் அண்ணன் பரதனுக்கு சேவை செய்தான்.ஒருமித்த சகோதரர்களுக்கு, ஒருமித்த சகோதரிகள் மணவாட்டிகளாக அமைந்தனர். ராமனுக்கும், லட்சுமணனுக்கும், ஜனகர் - சுனைனா தம்பதியரின் புத்திரிகளான சீதையும், ஊர்மிளாவும் மனைவி ஆயினர். பரதன் சத்ருக்கனருக்கு, ஜனக மன்னரின் தம்பி குசத்வஜனின் புத்திரிகளான மாண்டவியும், சுருதகீர்த்தியும் மனைவியாயினர். ஒரே வீட்டில் பெண் எடுத்து, அந்த வகையிலும் பிரியாமல் இருக்கும் பாக்கியத்தைப் பெற்றனர். பல கஷ்டங்களை அனுபவித்தாலும், ஆசை வார்த்தைகள் காட்டினாலும், இந்த அன்புச் சகோதரர்களை யாராலும் பிரிக்க இயலவில்லை.ராமன் வனவாசம் முடிந்து, மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்ற போது, தெற்கிலிருந்தும் பட்டாபிஷேக நிகழ்ச்சிக்கு மன்னர்கள் சென்றனர். அவர்கள் அங்கு கண்ட காட்சியை, தீர்த்த நகரும், புனிதத் தலமுமான கும்பகோணத் தில் வடிவமைத்தனர். ரகுநாத நாயக்கர், இந்தக் காட்சியை அடிப்படை யாகக் கொண்டு கோவில் கட்டினார்.அயோத்தியில், சீதா ராமர், பட்டாபிஷேக கோலத்தில் இருப்பர். இங்கே இருவரும் திருமண கோலத்தில் காட்சி தருகின்றனர். ராமனுக்கும், சீதைக்கும் தனித்தனி ஆசனம் உள்ள கோவில்களே அதிகம். ஆனால், இங்கு ஒரே ஆசனத்தில் ராமனும் சீதையும் அமர்ந்திருப்பர். ராமனின் இடதுபுறம் சத்ருக்கனன் சாமரம் வீச, வலதுபுறம் பரதன் குடை பிடிக்க, லட்சுமணன் வில்லுடன் இருக்கிறார்.அனுமனைக் கதாயுதத்துடன் தான், எங்கும் காண முடியும். இங்கு, ராமர் திருமணக் கோலத்தில் இருப்பதால், தன் போர்க்குணத்தையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, வீணை மீட்டுவது போன்ற காட்சியைக் காணலாம். இந்தக் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் விசேஷம். மார்ச் 24ல், விழா துவங்குகிறது. ஏப்., 1ல், சீதாராமர் தேரில் பவனி வருவர்.சகோதர ஒற்றுமையை பேணவும், மீண்டும் கூட்டுக்குடும்பமாக ஒருமித்த கருத்துடன் வாழவும், கும்பகோணம் ராமரைத் தரிசித்து வருவோம்.***தி. செல்லப்பா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !