பக்தி பயிர் வளரட்டும்!
நவ., 3 - சக்தி நாயனார் குருபூஜை'இது, கணினி காலம்; செவ்வாய் நோக்கி ராக்கெட்கள் பறக்கின்றன. நீங்க, சனீஸ்வரர் என்று வணங்குபவரை நாங்க தொலைநோக்கி மூலம் ஆராய்ச்சி செய்கிறோம்...' என்று விதண்டாவாதம் பேசுவர் சிலர். இவர்கள் ஒன்றை மறந்து விடுகின்றனர்... கணினி இயங்க, கண்ணுக்கு தெரியாத மின்சாரம் தேவை. அதைக் கூட தொடுவதன் மூலம், உணரலாம். ஆனால், அந்த மின்சாரம், கணினியை இயக்க வைக்கும் சக்தியை பெற்றிருக்கிறதே... அந்த சக்தியை, நாம் கண்ணால் பார்த்ததுண்டா?அந்த சக்தியைத் தான், 'கடவுள்' என்கின்றனர் ஆஸ்திகர்கள். அக்கடவுளுக்குத் தான், சிவன், பிரம்மா, விஷ்ணு, பார்வதி, லட்சுமி என்று, தங்கள் விருப்பத்திற்கேற்ப பெயர் வைத்துள்ளனர்.கணவனை இழந்த பெண், வெள்ளைப் புடவை கட்டி எதிரே வந்தால், ஒதுங்கிக் கொள்வது நம் நாட்டில் பழக்கமாக இருந்தது. அதை, சகுனத்தடையாக கருதினர். அதேநேரம், அறியாமையை அகற்றும் கல்விக்கு அடையாளமான சரஸ்வதி தேவிக்கு, வெள்ளைப் புடவையை அணிவித்து, அதன் மேன்மையை அறியச் செய்ததே ஆன்மிகம் தான். எனவே, ஆன்மிகம், மூடநம்பிக்கையை வளர்க்கிறது என்ற கருத்து, தவறு.ஒரு காலத்தில், நாத்திகம் பேசினால் கடுமையான தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. இதை விதித்தது அரசர்களோ அல்லது மதத் தலைவர்களோ அல்ல! பக்தர்களே இவ்வாறு செய்திருக்கின்றனர்.சோழ நாட்டில் வரிஞ்சையூர் என்ற கிராமத்தில் வசித்தவர் சக்தி. இவரது இயற்பெயர் தெரியவில்லை. ஆனால், 'சக்தி' என்ற பெயர் வந்ததற்கு காரணம் உண்டு.இவர், தீவிரமான சிவபக்தர்; சிவனை யாராவது தூஷித்து பேசினால், அவரை இழுத்து வந்து, வாயைப் பிளந்து, நாக்கை துண்டித்து விடுவார். இக்காலத்தில், இது கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என்ற பார்வையைத் தரக்கூடும். ஆனால், பக்தியில் ஒழுக்கம் வேண்டும் என்பதை சற்று கடுமையாகச் சொன்னார் சக்தி. இதனால் தான், அவர் நாயனார் வரிசைக்கு உயர்ந்தார்.சக்தி நாயனாரின் குருபூஜை, ஐப்பசி மாதம் பூச நட்சத்திரத்தில் நடைபெறும்.'ஆன்மிகம் என்று வீழ்ச்சியடைய ஆரம்பிக்கிறதோ, அன்று, இந்த பாரத தேசத்தின் வீழ்ச்சியும் ஆரம்பமாகி விடும்...' என்கிறார் சுவாமி விவேகானந்தர். நம் நாட்டில் ஆன்மிகப் பயிர் மென்மேலும் வளர, சக்தி நாயனாரின் குருபூஜையன்று உறுதியெடுப்போம்.தி.செல்லப்பா