உள்ளூர் செய்திகள்

நீதிக்குப் பின் பாசம்!

நவ.,10 தீபாவளிதராசுக்கு, 'துலாக்கோல்'என்று பெயர் உண்டு. தீபாவளி கொண்டாடப்படும் ஐப்பசி மாதத்தை, 'துலா மாதம்' என்று அழைப்பர். தராசு எப்படி நடுநிலையாக, தன் முள்ளைக் காட்டி நிற்கிறதோ அதுபோல, தனக்கு வேண்டியவர், வேண்டாதவர் என்ற பேதம் இல்லாமல், தீர்ப்பு வழங்குபவரே உண்மையான நீதிமான். அத்தகைய நீதியை எடுத்துச் சொல்கிறது தீபாவளி திருநாள். தாங்கள் பெற்ற மகன் என்றும் பாராமல், தவறு செய்த நரகாசுரனை, திருமாலும், சத்தியபாமாவும் இணைந்து அழித்த நாள் இது! இந்த நீதியும், மனஉறுதியும் அனைவரிடமும் ஏற்பட வேண்டும் என்பதே தீபாவளித் திருநாள் நமக்கு உணர்த்தும் பாடம்.நரகாசுரனின் உண்மைப் பெயர் பவுமன். திருமால், வராக அவதாரம் எடுத்து பூமியை துளைத்து, அசுரர்களை அழிக்கச் சென்ற போது, அவரது ஸ்பரிசத்தால், பூமாதேவிக்குப் பிறந்தவன்.'பவுமன்' என்றால், பூமியின் மைந்தன் என்று பொருள். அசுர வதத்தின் போது பிறந்தவன் என்பதால், இவனுக்கு அசுர சுபாவம் வந்து விட்டது. 'நரன்' என்றால் மனிதன். மனிதனாக இருந்தாலும், துர்க்குணங்கள் நிரம்பியவனாக இருந்ததால், நரக அசுரன் எனப்பட்டான். அப்பெயரே, 'நரகாசுரன்' என்றாகி, பவுமன் என்ற பெயர் மறைந்து போனது.தேய்பிறை சதுர்த்தசி திதியை, சிவராத்திரி நாளாக எடுத்துக் கொள்கிறோம். கிருஷ்ணர் ஐப்பசி மாத தேய்பிறை சதுர்த்தசியன்று, இரவு முழுவதும் விழித்திருந்து, அதிகாலையில் சத்யபாமா மூலமாக, நரகாசுரனைக் கொன்றார்; எனவே, இந்நாளை, 'நரக சதுர்த்தசி' என்பர்.அது மட்டுமல்ல, நீதி தேவனான எமதர்ம ராஜாவையும் நினைக்க வேண்டிய நாள் இது! நல்லவர், கெட்டவர், பணக்காரர், ஏழை, வயதானவர், குழந்தை என்றெல்லாம் பேதம் பாராமல், அவரவர் முன்வினை பயன்படி, உயிரைப் பறித்து விடுவார் எமதர்மன். அத்தகைய, நீதி தேவனை போற்றும் விதமாக, வட மாநிலங்களில், தீபாவளி கழிந்த ஐந்தாம் நாள், எமதர்ம வழிபாடு நடத்துகின்றனர்.எமதர்மனுக்கு யமுனை என்ற தங்கை இருந்தாள். தீபாவளியன்று தன் தங்கைக்கு பரிசுப் பொருட்களை வழங்கி மகிழ்ந்தான் எமன். தங்கை யமுனையும், தன் அண்ணனுக்கு விருந்து கொடுத்து, நன்றி தெரிவித்தாள். இதன் காரணமாக, பாரதத்தின் மிக முக்கிய நதியாகும் பாக்கியம் பெற்றாள். இந்த புராணக் கதையின் அடிப்படையில் தான், இப்போதும், புகுந்த வீட்டிற்கு சென்ற நம் பெண் பிள்ளையை, மாப்பிள்ளையுடன் வீட்டுக்கு வரவழைத்து, தீபாவளி விருந்தும், சீர்வரிசையும் கொடுக்கிறோம்.ஒரு காலத்தில், தீபாவளியன்று வீடு நிறைய தீபம் ஏற்றினர். தீபம்+ஆவளி என்பது தான், 'தீபாவளி' ஆயிற்று. 'ஆவளி' என்றால், வரிசை. பட்டாசு வெடிக்கும் வழக்கம் வந்தபின், தமிழகத்தில் இது கார்த்திகை திருநாளுக்கு மாறி விட்டது. அன்றைய தினம், பெண்கள் தீபங்களை ஆற்றில் மிதக்க விட்டு, நதி பூஜை நடத்துவது வழக்கம். அவரவர் ஊரில் ஓடும் நதிகளை கங்கையாகவும், யமுனையாகவும் பாவித்து, இந்த வழிபாட்டை செய்தனர்.பெற்ற பிள்ளையாகவே இருந்தாலும், தவறு செய்தால் தட்டி கேட்க வேண்டும் என்பது தீபாவளி திருநாளின் தத்துவம். நீதிக்குப் பின் பாசம் என்பதை நினைவில் கொண்டால் நாடு நலம் பெறும்.தி.செல்லப்பா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !