அன்பு மலர்களே....
ரயிலின் ஜன்னலோர சீட்டில் உட்கார்ந்திருந்தாள் ஆலியா. அவளை வழியனுப்ப வந்திருந்த தோழி, ''தைரியமாக இரு,'' என்றாள்.கண்கள் கலங்கியிருந்தாலும், நம்பிக்கையுடன் புன்னகைத்தாள் ஆலியா. ஒவ்வொரு மாதமும், ஒரு நாள் இப்படித்தான் சபியாபாத் கிராமத்திற்கு செல்கிறாள் ஆலியா. தன் கணவர், மனம் மாறி இருப்பார் என எதிர்பார்ப்புடன் சென்று, ஏமாந்து திரும்புவாள். இது பல ஆண்டுகளாக நடக்கிறது.'ஊருக்கு முன், அவர் வேஷம் போட்டாலும், இன்னும் உள்ளுக்குள் தன்னையே நினைத்துக் கொண்டிருப்பார். அவர் மாற வேண்டும்; தன்னுடன் சேர்ந்து வாழ வேண்டும்...' என்று ஆலியா மனதிற்குள் பிரார்த்திக்கவும், ரயில் புறப்படவும் சரியாக இருந்தது.கையசைத்தாள் தோழி.இயற்கை எழில் மிகுந்த கிராமம் சபியாபாத். பச்சை பசேலென வயல்கள் நிறைந்து, பார்க்கும் தூரம் வரை, கண்ணுக்கு நிறைவை தரும். நகரில் பார்க்க முடியாத அபூர்வ பறவைகளின் பாடல், மனதை தாலாட்டும். அதை கேட்டு, நதியும் தாளமிடும். அந்த அழகிற்கு கிரீடம் வைத்ததை போல, கம்பீரமாக நிற்கும் மலை. எப்போதாவது, கிராமத்தை கடக்கும் ரயிலின் இரைச்சலில் தான், அந்த கிராமத்தின் அமைதி, கொஞ்சம் அசையும்.ரயில்வே கேட்டிற்கு, அந்தப் பக்கம் மதர்ஸா இருந்தது. அங்கேயே தங்கி, 20 சிறுவர்கள் குர்ஆன் படித்து வந்தனர். அவர்களுக்கு, ஆசிரியர் ஹசரத் என்றால் ரொம்ப இஷ்டம். ஹசரத்தை கண்டால் சிறுவர்கள் ஆனந்தத்தில், ஆடாத குறை தான். ஒருவேளை, அந்த சிறுவர்கள் அனைவரும், ஆதரவற்றவர்கள் என்பதால் கூட அப்படி இருக்கலாம்.ஹசரத்தும் ஆதரவற்றவர் தான். இந்த உலகில் அவர்களுக்கு, ஹசரத் தான் அம்மா, அப்பா, சொந்தம் எல்லாமே! அவரும், அவர்களிடம் கண்டிப்பு மட்டும் காட்டாமல், கனிவுடன் பழகுவார்; நண்பரை போல அவர்களுடன் விளையாடுவார். அன்றும் அப்படித்தான், அதிகாலை பஜர் தொழுகை முடித்ததும், ஒரு மணி நேரம் குர்ஆன் ஓதினர். அதை முடித்ததும், மதர்ஸா மைதானத்திற்கு வந்து, அனைவரும் காற்றாடி விட ஆரம்பித்தனர். ஹசரத்தும் அவர்களுடன் சேர்ந்து, காற்றாடி விட்டார்.அதற்குள் நாஷ்தா தயாராகி விட்டது என, சமையல்காரன் மஸ்தான் சைகை செய்தான். அவன் பேசும் திறனற்ற மாற்றுத்திறனாளி. அவனுடைய சைகைகளை வைத்தே, மாணவர்கள் புரிந்து கொள்ளும் விதமாக அவர்களுக்கு பயிற்சி கொடுத்து இருந்தார் ஹசரத்.நாளுக்கு நாள் மதர்ஸாவின் புகழ் பரவியதால், சேக்பாய் கொதித்துப் போனார். பீடி மண்டி நடத்தி, நகரத்திற்கு பீடிக் கட்டுகளை சப்ளை செய்து வந்தார் சேக்பாய். அவரிடம் சொற்ப கூலிக்கு, அவ்வூர் மக்களும் அவர்களுடைய பிள்ளைகளும், பீடி சுற்றும் வேலையை செய்தனர். அதில் ஒரு பையன், 'இனி நான் பீடி சுற்றும் வேலை செய்ய மாட்டேன்; மதர்ஸாவில போய் படிக்கப் போறேன்...' என்று சொன்னதும், சேக் பாய்க்கு ஆத்திரம் ஏற்பட்டது. அந்த பையனை அம்மணமாக்கி, கோணிப் பையில் கட்டி, அவன் கைகளுக்கு விலங்கிட்டு, தெருத் தெருவாக இழுத்து சென்றார் சேக் பாய். இது, அவரிடம் வேலை பார்க்கும் மற்ற பசங்களுக்கு பயத்தை தரும் என்று நினைத்தார். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ஹசரத், விரைந்து வந்தார்.'சேக்பாய்... நீங்க செய்றது பெரிய பாவம்; இறைவன் உங்கள மன்னிக்க மாட்டான். இந்த பையன, நீங்க இப்படி தண்டித்தீங்கன்னா எதிர்காலத்துல இவன் தவறான வழிக்கு போயிடுவான்...' என்றார் ஹசரத்.'வாங்க ஹசரத்... நீங்க மதர்ஸா நடத்துறதால தான், எல்லா பசங்களுக்கும் படிக்கிற ஆசை வருது. எல்லாரும் படிக்கப் போயிட்டா அப்புறம் பீடி வேலை செய்ய யார் வருவாங்க?'என்று கேட்டார்.'உங்க சுயநலத்திற்காக, பிள்ளைகளோட எதிர்காலத்த பாழாக்க நினைக்கிறீங்களா... தயவு செய்து, அவனை விடுங்க. உங்க கால்ல வேணா விழுறேன்...' என்று, ஹசரத் நெருங்க, விலகிப் போனார் சேக் பாய். அழுது கொண்டிருந்த அந்த சிறுவனை, அணைத்துக் கொண்ட ஹசரத், அவனுக்கு ஆடைகளை உடுத்தி விட்டார்.சற்றுத் தொலைவில் கோபத்துடன் நின்றிருந்த சேக்பாயிடம் சென்ற ஹசரத், 'சேக் பாய், உங்க மனசிலும் இரக்கம் இருக்கு. நீங்க மாறிடுங்களேன்...'என்றார்.'நான் ஏன் மாறணும்; இது என் தொழில்...''மத்தவங்களோட கஷ்டங்கள தீர்த்து வச்சால் நமக்கு நஷ்டம் வராது. இருட்டிலே இருக்காதீங்க; கொஞ்சம் வெளிச்சத்திற்கு வாங்க...'மவுனமாக அங்கிருந்து சென்றார் சேக்பாய். அவருடன் கூடவே சென்ற கும்பல், அவரை உசுப்பி விட்டது.'இந்த ஹசரத்தினால், நமக்கு எப்போதுமே தொல்லை தான். இவரை, எதிலாவது சிக்க வைக்கணும். ஆனா, இந்த மனுஷன் தப்பே செய்ய மாட்டேங்கிறானே...' என்றான் கும்பலில் ஒருவன்.'தப்பு செய்யாதவன் மனுஷனே கிடையாது; அவருக்கும் ஒரு பலவீனம் இருக்கும்...' என்று மற்றொருவன் கூறியதும், அவனை புரியாமல் பார்த்தார் சேக்பாய்.'ஆமாம்... எஜமான். மாசமாசம் ஒரு பொம்பள மதர்ஸாவிற்கு வந்திட்டு போறா...''யாருடா அவ?''யாருக்குத் தெரியும்... பர்தா போட்டிருந்தா...''ஹசரத்தும், மதர்ஸாவில் படிக்கிறபசங்களும், ஆதரவற்றவங்கன்னு தானே சொல்லிட்டு இருக்காங்க. அப்படினா, அந்த பொண்ணு யாரு? அப்ப, அங்க யாரோ ஒருத்தர் அனாதை இல்ல...''அவளை மட்டும் ஒருமுறை பிடிச்சு விசாரிச்சா ஹசரத்தோட முகமூடி கிழியும்; மதர்ஸாவை மூடிவிட்டு, ஊரை விட்டு ஓடிடுவார்...''இந்த முறை அவ வந்துட்டு போயிட்டான்னு சொல்லிட்டீங்கள்ல... அடுத்த மாசம் வரும் போது அவளை விடக் கூடாது. ரயில்வே ஸ்டேஷன் மீதும், மதர்ஸா மீதும் ஒரு கண் வையுங்க...' என்றார் சேக்பாய்.அன்று, ஆகஸ்ட், 15. சுதந்திர தினம். மதர்ஸாவில் தேசியக் கொடியை ஏற்றினார் ஹசரத். அவர் தேசிய கீதத்தை பாட, கூடவே பிள்ளைகளும் பாடினர். மஸ்தானும் வாய் அசைத்தான்.'குழந்தைகளே...'ஹுப்புல் வதனி மினல் ஈமான்' என்றால், நம் தேசத்தை நேசிப்பதும், இறை நம்பிக்கையின் ஒரு அங்கம் என்று அர்த்தம். நீங்க குர்ஆனை படித்து, அது சொல்லும் அன்பு, அமைதி இரண்டையும், உலகின் கடைசி வரையில் கொண்டு செல்லணும். நீங்கள் நன்மையை செய்யக்கூடிய கூட்டம்; தீமையை தடுக்கக்கூடிய கூட்டம். இது தான், ஒவ்வொரு மதர்ஸாவின் நோக்கம். மொழி வேறுபடுவதால், நம் மீது பழி போடுவோர் மீது அன்பு செலுத்துங்கள். அவர்களே வாழ்த்தும்படி நல்லவனாக, நாட்டுப் பற்று மிகுந்தவர்களாக வாழ்ந்து காட்டுங்கள்...' என்று உருக்கமாக பேசினார் ஹசரத்.எல்லா பிள்ளைகளும், அவரிடம் வந்து ஒட்டிக் கொண்டனர். அதில், முன்னா மீது மட்டும், அவருக்கு கூடுதல் பிரியம். மதர்ஸாவில் மட்டும் அல்ல, அக்கிராமத்தில் உள்ள எல்லாருக்கும் முன்னாவை பிடிக்கும். அன்று பகல் தொழுகையில் இருந்து மாணவர்கள் திரும்பிய போது, வழியில் போஸ்ட்மேன் பெரியவரை பார்த்தனர். அவர், ஒரு பழைய சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.'இந்த தாத்தா, தினமும் ஊருக்கு வர்றாரே... எதைக் கொண்டு வந்து எல்லாருக்கும் தர்றாரு...'என்று கேட்டான் ஒரு சிறுவன்.'கடிதம்...' என்றான் முன்னா.'அப்படின்னா...''இந்த ஊரில இருக்கிறவங்களுக்கு மற்ற ஊரில இருக்கும் அவங்க சொந்தக்காரங்க எழுதுறது தான் கடிதம்...''நமக்கு, கடிதமே வராதா?'சேக்பாயும், அவருடைய கூட்டமும் எதிர்பார்த்த அந்த நாளும் வந்தது. ஸ்டேஷனுக்கு வந்து சேர்ந்த ரயிலில் இருந்து இறங்கினாள் அந்த பெண். பர்தா போட்டிருந்தாள்; கண்களை மட்டும் சுழற்றி பார்த்தபடி, மதர்ஸாவுக்கு செல்லும் பாதையில் வேகமாக சென்றாள்.அங்கு காத்திருந்த இருவர், தகவல் கொடுக்க, 20 பேர் கூடிவிட்டனர். மதர்ஸாவிற்குள் அந்தப் பெண் நுழையும் சமயம், அவளை சுற்றி வளைத்தனர்.'யார் நீ?''எதுக்காக இங்கே வர்றே...''ஹசரத்துக்கும், உனக்கும் என்ன தொடர்பு?' என்று ஆளாளுக்கு கேள்விகள் கேட்கவே, பயந்து போனாள் ஆலியா. அவள் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் நிலை குலைந்து போனாள்.அதற்குள் இதைப் பார்த்து விட்ட மஸ்தான், மதர்ஸாவிற்குள் கத்திக் கொண்டே ஓடினான். தடுமாறி கீழே விழுந்த மஸ்தானுக்கு, காலில் சரியான அடி. அவனுடைய குரலை கேட்டு ஓடிவந்த ஹசரத், அவனை தூக்கி விட்டார். அவன் கைக்காட்டிய திசையை பார்த்தார் ஹசரத். அங்கே, ஆலியா நின்று கொண்டிருந்தாள். அவளுடைய கைகளை அழுத்தமாக பிடித்துக் கொண்டிருந்தார் சேக்பாய். அவள் வலியால் துடித்துக் கொண்டிருந்தாள். ஹசரத் உடம்பு சிலிர்த்து, கண்கள் சிவந்தது. கோபத்தில் முகம் மாறி வேகமாக முன்னேறியவர், ஆலியாவை, சேக்பாயிடம் இருந்து விடுவித்தார்.''வாங்க ஹசரத், ஊருக்கு மட்டும் தான் உபதேசமா... யார் இந்த பெண்?''மவுனமாக ஒரு முறை அந்த கூட்டத்தைப் பார்த்தார் ஹசரத் .''கண்டிப்பா தெஞ்சிக்கணுமா சேக்பாய்.''''ஆமாம்... இனி, உங்களால இந்த ஊரை ஏமாத்த முடியாது.''''பர்தாவை விலக்கு பெண்ணே,'' என்று கர்ஜித்தார் ஹசரத்.அவள் பர்தாவை விலக்கியதும், திடுக்கிட்டு போனார் சேக்பாய்.அவர் மீது வானமே இடிந்து விழுந்தது போல் இருந்தது.''ஆலியா... நீ உயிரோடு இருக்கியா?''தன் மனைவி ஆலியாவை மீண்டும் பார்ப்போம் என்று சேக்பாய் நினைக்கவில்லை.சேக்பாயின் மனைவி தான் ஆலியா. பெரிய குடும்பத்தில் இருந்து, அந்த கிராமத்திற்கு நிறைய கனவுகளுடன் வாழ வந்தாள். ஆனால், கணவருடைய தொழிலும், அவர் செய்யும் அக்கிரமங்களும் அவளுக்கு பிடிக்கவில்லை.'யாருடைய புன்னகையையும் பறிக்காதீங்க. முடிந்தால், மற்றவங்க கண்ணீரைத் துடையுங்க...' என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள்.ஆனால், சேக்பாய் எதையும் கேட்கவில்லை. பண ஆசையிலும், அதிகார வெறியிலும் மிதந்தார். ஒரு நாள், அவர்களுக்குள் சண்டை வலுத்தது. தன் ஒரு வயது ஆண் குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறினாள் ஆலியா.குடிபோதையில் இருந்த சேக்பாய், எங்கே போயிடுவாள், இங்கே தான் திரும்பி வரணும் என்று நினைத்தார். தன் பெற்றோரிடம் சென்று முறையிட்டாள். 'ஆலியா... நீ தான் அனுசரித்து போகணும். புருஷன் நல்லவனோ, கெட்டவனோ அவன் கூடத்தான் நீ வாழணும்...' என்றார் அப்பா.'அதை விட நான் செத்துப் போறேன்...''அது உன் இஷ்டம்...'பெற்றோர் இப்படிக் கைவிடுவர் என்று, நினைத்துப் பார்க்கவில்லை ஆலியா. வேறு வழியின்றி, மறுபடியும் சபியாபாத் திரும்பினாள். ரயில்வே ஸ்டேஷனில் இறங்கியபோதுதான், 'அதைவிட நான் செத்துப் போவேன்...' என்று சொன்னது நினைவில் வந்தது. உடனே, தண்டவாளத்தில் குழந்தையுடன் படுத்தாள். குழந்தை பசியில் அழுதது. அந்த பக்கமாய் சென்ற மஸ்தான், குழந்தையின் அழுகுரல் கேட்டு ஓடி வந்தான். அவளை காப்பாற்றி, மதர்ஸாவிற்கு கூட்டிச் சென்றான். ஹசரத் தான், அவளுக்கு தைரியமும், நம்பிக்கையும் தந்தார்.'இறைவன் கொடுத்த உயிரை பறிக்கும் உரிமை நமக்கு கிடையாது. பொறுமையாக இரு; உன் கணவர் நல்லவர் தான். பாவம், அவருக்கும் ஒரு வாய்ப்புக் கொடு. ஒரு நாள் மனம் மாறி உன்னை ஏற்றுக் கொள்வார்...' என்றார்.இப்படியே, ஆறு ஆண்டுகள் கழிந்து விட்டது.''ஆலியா... என் பிள்ளை எங்கே?'' என்றார் சேக்பாய். முன்னாவை அவருக்கு காட்டினாள் ஆலியா.''முன்னா... என் மகனா,'' என்றவருக்கு, ஊரே அவனை கொஞ்சியபோது, தான் முகம் திருப்பி சென்றதை எண்ணி வெக்கப்பட்டார். 'முன்னா' என்று அழுதபடி, அவனை அணைத்துக் கொண்டார் சேக்பாய்.''என்னை மன்னிச்சுடு ஆலியா... நீ இல்லாதபோது தான் மனைவி, பிள்ளை, குடும்பங்கிறதை உணர்ந்தேன்.''இந்த தொழில விட்டுடறேன். நீ மட்டும் என்னை விட்டு மறுபடியும் போயிடாதே. எனக்கு இருளில் இருந்து மனசு செத்துப் போச்சு; எனக்கு வெளிச்சத்தைக் கொடு. ஹசரத், எத்தனையோ அவமானங்களை சுமந்தும், என் குடும்பத்தை நீங்க காப்பாத்தினீங்க. ஆலியாகிட்ட சொல்லுங்க ப்ளீஸ்...''ஒரு வாரம் கழிந்திருக்கும்; பீடி மண்டி மூடப்பட்டது. அங்கு கொத்தடிமையாக இருந்த பிள்ளைகள் விடுவிக்கப்பட்டனர். அன்று, அந்த கிராமத்தில் இருந்து புறப்பட்ட ரயிலில் சேக்பாய், ஆலியா, முன்னா மூவரும் புதிய நகருக்கு புறப்பட்டனர். மதர்ஸா மாணவர்களும், ஹசரத்தும், மஸ்தானும் அவர்களை வழி அனுப்ப வந்தனர். ரயில் புறப்படும்போது, முன்னா, ''கவலைப்படாதீங்க... நான் உங்களுக்கு கடிதம் எழுதுவேன்,''என்றான்.அப்சல்